இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோட்டா


“இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தீனிபோட்டு வளர்த்துள்ளார் என்று அரச தரப்பால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றால் இந்நாட்டில் மீண்டும் குருதி ஆறு ஓடும். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் மீண்டும் அரங்கேறும்.”
– இவ்வாறு தெரிவித்தார் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க.
“இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோட்டாபய, ஜனாதிபதியானால் மீண்டும் அந்தத் தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்டே தீருவார். அந்தத் தீவிரவாதிகளை இல்லாதொழிப்பேன் என்று அவர் கூறுவது நகைப்புக்குரியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கி வென்றதும் இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே தனது முதல் இலக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
“ராஜபக்ச ஆட்சியில் மனிதப் படுகொலைகளைப் புரிந்த கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைக்காமல் வெளியில் உலாவ விட்டது ஐக்கிய தேசியக் கட்சி அரசும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் செய்த பாரிய தவறாகும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.