நேபாள பெண்கள்:வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலம்


நேபாளத்தில் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, அங்கு பெண்கள் கடத்தப்படும் சம்பவங்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக, அந்நாட்டில் வளர்ந்து வரும் சமூக ஊடகங்களின் பயன்பாடு கடத்தல்காரர்களின் பணியை எளிமையாக்கியுள்ளதாக கூறுகிறார் விக்கி ஸ்பிராட்.
சிரிப்பும், பாடும் ஒலியும், அங்குள்ள போக்குவரத்து நெரிசலின் சத்தத்தோடு சேர்ந்து அந்த கட்டடத்தை சுற்றி கேட்கிறது. மேலும், அந்த கட்டடத்தை சுற்றி அங்குள்ள தப்பி பிழைத்தவர்கள் மேற்கொண்ட, கலை வேலைபாடுகள் உள்ளன.
நான் 35 வயதாகும் சந்தானியை பார்ப்பதற்கு இங்கு வந்திருக்கிறேன்.
ஓராண்டிற்கு முன்னதாக முன்பின் தெரியாத ஒருவர் இவருக்கு ஃபேஸ்புக்கில் நட்பழைப்பு கொடுக்க, அதை இவரும் ஏற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, இருவரும் ஃபேஸ்புக் வழியே தனிப்பட்ட குறுஞ்செய்திகளை பகிர ஆரம்பித்தனர். ஆனால், அந்த நபர் கடத்தல் தொழில் செய்பவர் என்று அப்போது சந்தானிக்கு தெரியாது.
நான் சந்தானியை சந்திப்பதற்காக காத்திருந்தபோது, அங்குள்ள சன்னல் வழியே சுற்றுப்புறத்தை நோக்கியபோது, தூசிகளுடன் கூடிய மழை பொழிய தொடங்கியிருந்தது. மேகத்துக்கு பின்னே ஒளிந்திருக்கும் இமயமலைத் தொடர் தெரிந்தது.
மழையுடன் தென்படும் தூசிகள் கட்டுமான பணிகளின் காரணமாக உருவானதாக என்னுடைய மொழிபெயர்ப்பாளர் சுஜாதா கூறினார். 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு, "நகரத்தை மறுகட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்று அவர் என்னிடம் கூறினார். நேபாளத்தை உலுக்கிய அந்த நிலநடுக்கம் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்த நிலையில், கட்டுமானத்துறை மற்றும் கடத்தல் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது.
வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் நேபாள பெண்கள்
2015ஆம் ஆண்டிற்கு முன்னரே, நேபாளத்தில் கடத்தல் தொழிலை மையமாக கொண்ட அடிமை வணிகம் பெருகி வந்தது. ஆனால், பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்கு பின்னர், வாழ்வாதாரத்திற்காக குடும்பங்களை பிரிந்து செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டதால் பெண்களை மையமாக கொண்ட கடத்தல் தொழில் அந்நாட்டில் பல்கி பெருகி வருகிறது.
நேபாளத்தில் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சந்தானியை போன்று கடத்தல்காரர்களால் பாதிக்கப்படும் பல பெண்கள் வாழ்ந்து வரும் இந்த விடுதியை நடத்தும் சரிமாயா தமாங், 1990களில் தானும் கடத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறுகிறார். "எனக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டு, கடத்தி, இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். ஆனால், தற்போது தொழில்நுட்பம் கடத்தல் தொழிலில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
"பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. எனவே, கடத்தல்காரர்கள் முன்பை போன்று ஊரக பகுதிகளுக்கு சென்று இளம்பெண்களை தேட வேண்டிய அவசியமில்லை. தங்களது தேவைக்கு ஏற்றாற்போல் குறிப்பிட்டவர்களை கண்டறிந்து, அவர்களை குறுஞ்செய்தி வழியே தொடர்பு கொள்கின்றனர்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் நேபாள பெண்கள்
இந்நிலையில், நான் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த சந்தானி வெளியே வந்து என்னை வரவேற்றார். தன்னுடைய கதை மிகவும் இயல்பாக ஃபேஸ்புக் நட்பழைப்பு வழியே தொடங்கியதாக கூறுகிறார்.
"எனது சகோதரியுடன் ஒருவர் அடிக்கடி ஃபேஸ்புக்கில் உரையாடிக் கொண்டிருப்பார். ஒருகட்டத்தில் அவர் எனக்கு நட்பழைப்பு கொடுக்க அதை நானும் ஏற்றுக்கொண்டுவிட்டேன். அதன் பிறகு நாங்கள் குறுஞ்செய்தி வழியே உரையாடிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் எனக்கு இராக்கில் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறினார். இதுவரை நான் நேரில் பார்க்காத அவர், ஒரு நாள் விசா மற்றும் பாஸ்போர்ட்டை ஒருவரிடம் கொடுத்து அனுப்பினார்" என்று அவர் கூறுகிறார்.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சந்தானியின் குடும்பம் அவர்கள் தங்கியிருந்த வீட்டினை இழந்துவிட்டனர். அந்த கடத்தல்காரர் குறுஞ்செய்தி அனுப்பியபோது இவர் தற்காலிக முகாமொன்றில் வசித்து கொண்டிருந்தார். தன்னிடம் பேசுவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அந்த கடத்தல்காரர் அவரது சகோதரியிடம் பேசி வந்ததால் அவரும் இந்த பிடியில் சிக்கியதாக சந்தானி கூறுகிறார்.
"பாஸ்போர்ட்டை என்னிடம் கொடுத்தவர், எனக்கு இராக்கில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், நான் டெல்லி வழியாக அழைத்து செல்லப்படவுள்ளதாகவும் கூறினார்."
நேபாளத்திலிருந்து டெல்லி அழைத்து செல்லப்பட்ட சந்தானி, அங்கிருந்து இராக் அழைத்து செல்லப்படவில்லை. மாறாக, அங்குள்ள ஒரு விடுதியில் மேலும் 18 பெண்களுடன் வைத்து அடைக்கப்பட்டார்.
விடுதியில் பல வாரங்களுக்கு அடைக்கப்பட்டிருந்தபோது, அவரது எண்ணோட்டம் எவ்வாறு இருந்தது என்று அவரிடம் கேட்டேன். "நான் விற்பனை செய்யப்பட போகிறேன் என்று எனக்கு தெரியும்" என்று சந்தானி கூறுகிறார்.
வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் நேபாள பெண்கள்
பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுவது என்பது நேபாளத்தில் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சூழ்நிலை தங்களது குழந்தைகளுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதை அவர்களிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் தெரிவித்து வளர்க்கின்றனர்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்று தெரிந்திருந்த போதிலும், இந்த வேலைவாய்ப்பின் மூலம் தனது குடும்பத்தினரின் வாழ்க்கை முன்னேற்றமடையக் கூடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதற்கு சம்மதித்ததாக அவர் கூறுகிறார்.
நேபாளத்தை சேர்ந்த ஆண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வது என்பது சாதாரண விடயம். ஆனால், இதுவே பெண்கள் என்றால் அந்நாட்டில் ஏகப்பட்ட சட்டத் திட்டங்கள் உள்ளன. அதாவது, நேபாளத்தின் சட்டப்படி, 30 வயதிற்குட்பட்ட பெண்கள் அவர்களது பாதுகாவலரின் ஒப்புதலின்றி, வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படாது.
நேபாளத்தின் கிராமப்புறங்களிலுள்ள பல இளம் பெண்களைப் போலவே, சந்தானிக்கு ஃபேஸ்புக்கில் இந்த வாய்ப்பு குறித்து தெரிய வருவதற்கு முன்னர், வாழ்க்கையில் நினைத்ததை செய்ய முடியாமல் நீண்ட காலமாக சலிப்படைந்திருந்தார்.
வெளிநாட்டு வேலையை நம்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் நேபாள பெண்கள்படத்தின் காப்புரிமைAFP
"விவசாயம்தான் எங்களது குடும்ப தொழில். விவசாயம் மிகவும் கடினமானது என்பது மட்டுமின்றி, அதிலிருந்து என்னால் அதிகளவு பணத்தையும் ஈட்ட முடியாது" என்று அவர் கூறுகிறார்.
வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்து கொள்வதையும் தான் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார்.
"திருமணமான பல பெண்கள் நன்றாக வாழ்வதை போன்று எனக்கு தெரியவில்லை. ஆனால், பல ஆண்கள் பெண்களை ஏமாற்றுவதை காண முடிகிறது" என்று அவர் தெரிவிக்கிறார்.
நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு ஆணின் தேவை என்று தனக்கு கூறப்படும் அறிவுரைகள் தனக்கு ஆத்திரமூட்டுவதாக சந்தானி கூறுகிறார்.
"நான் நிறைய பணம் சம்பாதிப்பதற்காக மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சி செய்வேன்" என்று சந்தானி உறுதிபட கூறினார்.