லசித் மலிங்க: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை


எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட்.
அதனால்தான் கிரிக்கெட் விளையாட்டு புகழ்பெற்ற 'நிச்சயமற்ற தன்மை' கொண்ட விளையாட்டு என்று வர்ணிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பத்தை அல்லது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் காண நேர்ந்தது.
சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆறு விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்ததாலும், அப்போது 70 ரன்களை கடந்த ஷேன் வாட்சன் தொடர்ந்து களத்தில் இருந்ததும் சென்னை அணியின் வெற்றிக்கு சாட்சியமாக அமைந்தது.
இதற்கு மேலும் வலுவூட்டுவதுபோல் இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில் மும்பை அணியின் விக்கெட் கீப்பர் டி காக் தவறவிட்ட பை ரன்கள் சென்னை அணியின் இலக்கை எளிதாக்கியது.
ஆறு பந்துகளில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சிஎஸ்கே அணிக்கு மிக நெருக்கமாக இருந்த கோப்பை, அடுத்த சில வினாடிகளில் நடந்த நம்பமுடியாத அம்சங்களால் மும்பை அணியிடம் சென்றது.
லசித் மலிங்காபடத்தின் காப்புரிமைROBERT CIANFLONE
ஐபிஎல் தொடர்களில் அதிக அளவு விக்கெட்டுகள் எடுத்தவர் மற்றும் 100 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் விளையாடியவர் என ஏராளமான அனுபவத்துக்கு சொந்தக்காரராக லசித் மலிங்கா இருந்தபோதிலும், கடைசி ஓவரில் பந்துவீசும் போது ஏற்படும் அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.
உண்மையில் இந்த போட்டியில் லசித் மலிங்காவின் பங்களிப்பு சிறப்பாக இல்லை. ஷேன் வாட்சன் மற்றும் பிராவோ ஆகிய இருவரும் அவர் வீசிய பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கு விரட்டினர்.
இறுதி ஓவருக்கு முன்பு மலிங்கா பந்துவீசிய 3 ஓவர்களில் அவர் 42 ரன்களை கொடுத்திருந்தார்.
அதனால் கடைசி ஓவரை மலிங்கா பந்துவீசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் , மலிங்காவின் அனுபவத்தை தேர்வுசெய்த கேப்டன் ரோகித் சர்மாவின் முடிவு மும்பை அணிக்கு போட்டியையும், கோப்பையையும் வென்று தந்தன.
நடப்பு ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை மலிங்கா பெற்றார். இது அவரது சிறந்த ஐபிஎல் தொடர் பங்களிப்பு என்று கூறமுடியாது. இதைவிட அவர் மிக சிறப்பாக பல தொடர்களில் பங்களித்து உள்ளார்.
லசித் மலிங்கா : ஒரே பந்தில் ஹீரோவான கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஷரதுல் தாக்கூரின் விக்கெட்டை மலிங்கா எடுத்திருக்காவிட்டால், சமூகவலைத்தளங்களில் அவர் அதிகமாக விமர்சிக்கப்பட்டு இருப்பார்.
ஆனால், மலிங்கா இறுதிக்கட்ட ஓவர்களில் சாதிப்பது இது முதல்முறையல்ல. இலங்கை அணிக்காகவும், மும்பை இந்தியன்ஸ் போன்று அவர் விளையாடிய லீக் அணிகளுக்காகவும் எண்ணற்ற முறைகள் சாதனை நிகழ்த்தியுள்ளார் மலிங்கா.
அதேபோல், ஒரு ரன்னில் ஐபிஎல் கோப்பை இறுதியாட்டத்தில் வெற்றி பெறுவது மும்பை அணிக்கும் இது முதல்முறையல்ல. கடந்த 2017-இல் ரைஸிங் சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு எதிராக நடந்த இறுதியாட்டத்தில் கடைசி ஓவரில் சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை வெற்றி பெற செய்தவர் மிட்சல் ஜான்சன்.
ஒரே பந்தில் ஹீரோ ஆனவர்கள்
இதேபோல் ஒரு பந்தில் ஹீரோ ஆனவர்கள் பட்டியலை சற்று பார்க்கலாம்.
1997-இல் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடந்த பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் சக்லைன் முஷ்டாக் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தவர் ராஜேஷ் செளகான்.
பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை இறுதியாட்டத்தில் ஆட்டத்தின் கடைசி பந்துக்கு முந்தைய பந்தை பவுண்டரிக்கு விரட்டி புகழ் ஏணியில் சட்டென்று ஏறியவர் ரிஷிகேஷ் கனிட்கர்.
இன்றளவும் ஷார்ஜாவில் சேட்டன் சர்மாவின் பந்தில் சிக்ஸர் எடுத்தவர் என்ற முறையில் ஜாவிட் மியாண்டாட்டை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நினைவுகூர்கின்றனர்.
ஆனால், ஆட்டத்தில் நிகழும் திடீர் திருப்பங்களால் சில ஏமாற்றங்கள் மற்றும் சோகங்களும் நிகழ்வதுண்டு. பல முன்னணி வீரர்கள் மற்றும் சாதனையாளர்கள் ஒரு போட்டியில் அவர்களின் பங்களிப்பு சரியில்லாத காரணத்தால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
கடந்த மாதம் சிஎஸ்கே அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரை பென் ஸ்டோக்ஸிடம் ராஜஸ்தான் கேப்டன் ரஹானே தந்தது பாதகமான முடிவை ஏற்படுத்தியது.
கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஸ்டோக்ஸின் முதல் பந்தும், கடைசி பந்தும் சிக்ஸராக விளாசப்பட்டன.
அதன் காரணமாக போட்டியில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது. இதற்கு முன்னரும் ஒருமுறை இது போன்ற நிலையை பென் ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார்.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த 2016 டி20 உலகக்கோப்பை போட்டி இறுதியாட்டத்திலும் இதுபோன்ற தர்மசங்கடமான நிலையை ஸ்டோக்ஸ் சந்திக்க வேண்டியதாக இருந்தது.
பென் ஸ்டோக்ஸ் (கோப்புப் படம்)படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionபென் ஸ்டோக்ஸ் (கோப்புப் படம்)
கடைசி ஓவரில் மேற்கிந்திய அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸை பந்துவீச இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பணித்தார்.
முதல் 4 பந்துகளிலும் வரிசையாக சிக்ஸர்களை மேற்கிந்திய பேட்ஸ்மேன் பிராத்வெயிட் பறக்கவிட இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.
அதிர்ச்சியடைந்த பென் ஸ்டோக்ஸ் மைதானத்தில் வெகுநேரமாக நிலைகுலைந்து அமர்ந்திருந்த காட்சி இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூறப்படுகிறது.
2011 உலகக்கோப்பை மற்றும் 2007 டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை இந்தியா வெல்ல பெரும் காரணமாக இந்த யுவராஜ் சிங், 2014 டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் அணியின் தோல்விக்கு கடுமையாக சாடப்பட்டார்.
யுவராஜ்படத்தின் காப்புரிமைAFP
அந்த போட்டியில் தான் சந்தித்த 21 பந்துகளில் அவர் பெற்றது 11 ரன்கள் மட்டுமே. இதற்காக யுவராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால், இதே பிட்ச்சில் முன்னணி வீரர்களாலும் அவர்கள் நினைத்தபடி எளிதாக விளையாட முடியவில்லை என்பதை பலரும் மறந்து விட்டனர்.
கடந்த 1999 மற்றும் 2015 உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் எதிர்பாராதவிதமாக தோல்வியுற்ற தென் ஆப்ரிக்க அணியும் இதுபோன்ற ஏமாற்றங்களை சந்தித்துள்ளது. 1999-இல் ஹீரோவாக இருந்த குளூஸ்னர் விமர்சனம் செய்யப்பட்டார்.
ஆனால், விளையாட்டு உலகில் இது போன்ற நிகழ்வுகளை, அதிர்ச்சிகளை, திருப்பங்களை விளையாட்டு வீரர்கள் எதிர்பார்த்தே உள்ளனர்.
இதுபோன்ற ஒரு தருணத்தை ஞாயிற்றுக்கிழமையன்று லசித் மலிங்காவும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வெற்றிகரமாக எதிர்கொண்டனர். இது போன்ற தருணங்கள்தான் இறுதிவரை போராட வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறது.