ஐ.எஸ். அமைப்புக்கு சக்தி வாய்ந்த நாடுகளை தாக்கும் திறன் இருக்கிறதா?


இலங்கையில் உயிர்த்தெழுந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பிபிசியுடனான பிரத்யேக பேட்டியின்போது அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன பதிலளித்தார்.
கேள்வி: இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் குழு உங்கள் நாட்டை இலக்கு வைக்கும் என்ற உள்ளுணர்வு உங்களுக்கு இருந்ததா? அப்படியொரு கற்பனையை கூட செய்திருப்பீர்களா?
பதில்: உண்மையை சொல்வதென்றால், அப்படி நான் நினைத்ததே இல்லை. நான் அதிர்ச்சி அடைந்தேன். இலங்கையை ஏன் அவர்கள் தேர்வு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கேள்வி: பிறகு தாக்குதல் நடத்த இலங்கையை அவர்கள் ஏன் தேர்வு செய்திருப்பார்கள் என கருதினீர்கள்?
பதில்: உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த அவர்களுக்கு திறனிருக்கிறதா என்று நான் கேள்விஎழுப்புகிறேன். எனவே ஐ.எஸ் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உலகுக்கு காண்பித்து அறிக்கை வெளியிட சமீபத்தில் சமாதானத்தை கட்டியெழுப்பிய ஒரு நாட்டை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.
கேள்வி:சாத்தியமிக்க வெடிகுண்டு தாக்குதல்கள் பற்றிய தொடர்ச்சியான எச்சரிக்கைகள் வந்த பிறகும், அவற்றின் மீது செயல்படாமல் இருந்தது பெருத்த தோல்விதானே?
பதில்: உளவுத் துறையில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு அந்த தகவல்கள் வந்தது தெளிவானது. எனினும், அந்த தகவல் பற்றி எனது கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. அவர்கள் கடமையாற்றாமல் அலட்சியமாக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் வகித்த பதவிகள் பறிக்கப்பட்டன. இந்த விவகாரத்தை விசாரிக்கவும் குழு அமைத்துள்ளேன்.
இலங்கையில் சுற்றுலாத்துறை எப்போது மீண்டெழும்? - அதிபர் சிறிசேன பிபிசிக்கு பிரத்யேக பேட்டிபடத்தின் காப்புரிமைISHARA S. KODIKARA
கேள்வி: உங்களுக்கும் பிரதமருக்கும் இடையே உயரிய அளவில் நீடித்த மோதல்களே, உளவுத் தகவல் பகிர்வில் ஏற்பட்ட பெருத்த தோல்வியின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறதே...
பதில்: அத்தகைய வதந்திகளுக்கு முரணாக, பிரதமருடன் எனக்கு மிகத் தீவிரமான பிரச்னைகள் எல்லாம் கிடையாது. தெளிவாகச் சொல்வதென்றால், தேச பாதுகாப்பு விவகாரத்தில் நடவடிக்கை என வரும்போது, அரசியல் கருத்து முரண்பாடுகளும் வேறுபாடுகளும் புறந்தள்ளப்படுகின்றன.
கேள்வி: இலங்கை பொருளாதாரத்தின் மிக முக்கியமானதாக சுற்றுலா துறை உள்ளது. இலங்கைக்கு வர இருமுறை சிந்திக்கும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு, இது பாதுகாப்பான நாடா இல்லையா என்பதை விளக்க, நீங்கள் அளிக்கும் செய்தி என்ன?
பதில்: இலங்கை சுற்றுலா துறை கடுமையான தாக்கத்தை அனுபவித்து வருகிறது. எழுபது சதவீதம் அளவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளது. சுற்றுலாவாசிகளின் வருகையை மீண்டும் ஊக்குவிக்க வேண்டுமானால், நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும். தற்போதும் கூட, தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாவாசிகள் வருகிறார்கள். எனவே, நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில், சுற்றுலாவாசிகளும் வரத் தொடங்குவார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.