கூட்டமைப்பு எம்.பிக்கள்,கைதான பல்கலை மாணவர் தலைவர், செயலாளரை நேரில் சந்திப்பு

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று காலை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகிய இருவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சென்று பாா்வையிட்டுள்ளனா்.
யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இராணுவம், பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப்படையினா் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்தன எனக் குற்றஞ்சாட்டப்பட்டு மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோா் பொலிஸ் உயா் அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் கைதுசெய்யப்பட்ட மாணவா்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்ட மாணவா்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர்.
எனினும், மாணவர்கள் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.