இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமமொன்றுக்கு பிபிசி தமிழ் சென்றது.
இது புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய - துன்மோதர பிரதேசமாகும்.
இந்த பிரதேசத்தில் பெருமளவு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்ற போதிலும், இந்த கிராமத்தை சூழ்ந்துள்ள பகுதிகள் அனைத்திலும் இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களே வாழ்ந்து வருகின்றனர்.
துன்மோதர பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை வேளையில் முகங்களை மூடியவாறு சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி பிரவேசித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
துன்மோதர பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில், தமது கிராமத்து இளைஞர்கள் ஒன்று திரண்டிருந்ததை அவர்கள் அவதானித்துள்ளதாக அந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரான நிஷ்தார் தெரிவிக்கின்றார்.
அதன்பின்னர், தமது கிராமத்திற்குள் பிரவேசிப்பதற்கான குறுக்கு வழிகளை கண்டறிந்த முகங்களை மூடிய இளைஞர்கள், அந்த வழியாக தமது பிரதேசத்திற்குள் வருகைத் தந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமது பிரதேசத்திற்குள் வருகைத் தந்த வன்முறையாளர்கள், முதலில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதனை சூழ்ந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
தமது சமூகத்தினர் நோன்பு துறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்திருந்த தருணத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கவலை வெளியிடுகின்றார்.
தாக்குதல் நடத்தப்படுவதனை அவதானித்து பிரதேச பெண்கள், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக தமது கிராமத்திற்குள் அருகிலுள்ள காடுகளை நோக்கி சென்றதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறு காடுகளுக்குள் சென்ற பெண்கள், அதிகாலை வேளை வரை காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில், அத்துமீறி பிரவேசித்தவர்கள், துன்மோதர பகுதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பல வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகளை எரிந்து, கட்டடங்களை தீக்கிரையாக்கியுள்ளனர் என அங்குள்ள மக்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.
முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil
முஸ்லிம்களின் புனித நூலான குர்-ஆன்களையும் வன்முறையாளர்கள் தீக்கரையாக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கட்டடங்கள், வாகனங்கள், வீட்டுத் தோட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவமானது, பாதுகாப்புப் பிரிவின் முழுமையாக அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்பட்டதாக அந்த பிரதேச இளைஞரான நிஷ்தார் குற்றம் சாட்டுகிறார்.
பாதுகாப்பு பிரிவினர் குறித்த பகுதிகளில் இருந்த சந்தர்ப்பத்திலேயே தமது சொத்துக்களின் மீது சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
பாதுகாப்பு பிரிவின் அனுசரணையுடன் தாக்குதல் நடாத்தப்பட்டமையினால், தமக்கு பாதுகாப்பு பிரிவினர் மீதான நம்பிக்கை முழுமையாக அற்று போயுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
புத்தளம் - நாத்தாண்டி - துன்மோதர பகுதியில் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னணியின் பாதுகாப்பு தரப்பினர் இருப்பதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குமாயின், அது பாரதூரமான குற்றம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், ராணுவ தளபதியின் ஆலோசனைகளை பெற்று, இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க தாம் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, அசம்பாவித சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் ஏதேனும் தவறுகள் அல்லது குற்றங்கள் இழைக்கப்படுமாயின்; அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தமது கிராமத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் முழுமையாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும் என நாத்தாண்டி - துன்மோதர பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
Post a Comment
Post a Comment