பாஜக தமிழகத்தில் படுதோல்வி




இந்தியாவில் நடந்த 17வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது. பெரும்பாலான இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் அல்லாமல், இடதுசாரிகளின் பலம் என்று கருதப்பட்ட மேற்கு வங்கம், அதோடு மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், பாஜக வலுவாக கால் பதித்திருக்கிறது.
கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, தற்போது 18 இடங்களில் வெற்றி கண்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில், 26 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது.
அதே போல ஒடிஷா மாநிலத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற பாஜக, தற்போது அங்கு எட்டு தொகுதிளில் வெற்றி பெற்றுள்ளது.
இப்படி அனைத்து மாநிலங்களிலும் வெற்றி முத்திரையை பதித்து வரும் பாஜகவால், தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை எதிர்கொண்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய ஐந்து இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

பாஜக போட்டியிட்ட தொகுதிகள்

தொகுதிவெற்றி வேட்பாளர்வாக்குகள்இரண்டாம் இடம்வாக்குகள்
தூத்துக்குடிகனிமொழி கருணாநிதி (திமுக)5,63,143தமிழிசைசௌந்தரராஜன் (பாஜக)2,15,934
கன்னியாகுமரிவசந்தகுமார் (காங்கிரஸ்)6,27,235பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக)3,67,302
சிவகங்கைகார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)5,66,104ஹெச். ராஜா (பாஜக)2,33,860
ராமநாதபுரம்நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)4,69,943நயினார் நாகேந்திரன் (பாஜக)3,42,821
கோவைபிஆர் நடராஜன்(சிபிஎம்)5,71,150சிபி ராதாகிருஷ்ணன் (பாஜக)3,92,007
இந்த ஐந்து தொகுதிகளில், அங்கு அவர்களுக்கு எதிராக போட்டியிட்ட திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளால் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆளும் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, மற்றும் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டதில், இந்தக்கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேனியில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்படத்தின் காப்புரிமைARUN SANKAR
Image captionதிமுக வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்
இதற்கு எதிர்க்கட்சிகளின் மோதி எதிர்ப்பு பிரச்சாரம்தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு விவகாரம், அனிதாவின் மரணம், ஓக்கி மற்றும் கஜா புயலின்போது பாஜக தமிழகத்துக்கு சரியான உதவிகளை செய்யவில்லை போன்றவற்றை முன்னிறுத்தியே எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன.
மேலும், ஒவ்வொரு முறையும் பிரசாரம் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மோதி தமிழ்நாட்டிற்கு வந்த போதும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

ஸ்டாலினுக்கான ஆதரவா? மோதிக்கான எதிர்ப்பா?

தமிழகத்தில் மோதிக்கு எதிரான அலை மிக வலுவாக இருப்பதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மி சுப்பிரமணியன்.
"இது மோதிக்கு எதிரான அலை மட்டுமல்லாமல், அதிமுக மக்களிடையே தற்போது பிரபலமாக இல்லை என்பதையும் இது காண்பிக்கிறது. மேலும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேலை பார்த்த அளவிற்கு மக்களவை தேர்லில் கவனம் செலுத்தவில்லை. திமுக முன்னெடுத்த பிரசாரம், அதன் வெற்றிக்கு முக்கிய காரணம்" என்று லக்ஷ்மி தெரிவித்தார்.
Presentational grey line
Presentational grey line

திமுக-வின் எழுச்சி

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைFACEBOOK / MK STALIN
2014 மக்களவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக 37 தொகுதிகளையும், பாஜக ஒரு தொகுதியையும் வென்றது. திமுக படுதோல்வி அடைந்தது. அதே போல 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு என இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் திமுக தோல்வியையே சந்தித்தது.
தமிழ் ஈழ விவகாரம், 2ஜி விவகாரம் போன்ற பல்வேறு காரணங்கள் திமுகவின் இந்த தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வலுவான வெற்றியை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றுள்ளது. கருணாநிதி மறைந்த பிறகு திமுக எதிர்கொண்ட இத்தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது முக்கிய ஒரு விஷயமாக வல்லுநர்களால் கருதப்படுகிறது.
"நீண்ட கால திராவிட இயக்கத்தின் இருப்பும், சமூக அடிப்படையும்தான் பாஜகவை தமிழகத்தில் இருந்து தள்ளி வைக்க ஒரு முக்கிய காரணம்" என்கிறார் சென்னை பல்கலைகழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
"திமுக தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, தேர்தல் பணிகளை ஸ்டாலினால் சரியாக முன்னெடுக்க முடிந்துள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

'பாராம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்பு'

'பாராம்பரிய திராவிட இயக்கத்தின் இருப்பு'படத்தின் காப்புரிமைIMRAN QUERESHI
கருணாநிதி இருந்தபோதும் கூட, திமுக காங்கிரசிடமோ அல்லது பாஜகவிடமோ தோல்வி அடையவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், "தற்போது அதிமுக தலைமையையே ஒரு கேள்விக்குறியாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக ஆதரவாளர்களாகவே மக்கள் பார்க்கின்றனர். இத்தேர்தல் திமுக அதிமுகவுக்கு இடையே நடக்கவில்லை. மறைமுகமாக இது பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே நடந்த தேர்தல்" என்று அவர் கூறுகிறார்.
"திமுக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாதது, கட்சித் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என திமுகவும் தற்போதைய சூழலில் வலுவாக இல்லை என்றுதான் கூற வேண்டும். அப்படியிருக்க பாராம்பரிய திராவிட இயக்கத்தின் சமூக அடிப்படைதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆதரவு. இது பாஜகவுக்கு இங்கு இருக்கும் எதிர்ப்போடு இணைந்துவிட்டது. சரியாக சொல்லப் போனால், தமிழ்நாடு அரசியலுக்கும், பாஜகவின் அரசியல் நிலைக்கும் உள்ள கருத்தியில் வேறுபாடு திமுகவின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிரான நிலையையே தமிழக இளைஞர்கள் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் வாக்களிக்க இங்கு எந்த மூன்றாவது கட்சியும் இல்லை. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை அவரால் மாநிலத்துக்காக பேச முடிந்தது. பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தால் அது முடியாது என்று மக்களுக்கு தெரியும். இதெல்லாம் சேர்ந்து திமுகவுக்கு ஆதரவான நிலை ஏற்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.