கடலை நோக்கி சென்ற ட்ரோன் கேமரா

கொழும்பு ஜாவத்தை பகுதியில் பறந்த ட்ரோன் கேமரா மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு ஜாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று பறப்பதாக நாராஹேன்பிட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தருணத்திலும், குறித்த ட்ரோன் வானில் பறந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, ட்ரோனை நோக்கி போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில், குறித்த ட்ரோன் பம்பலபிட்டி நோக்கி பறந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
பம்பலபிட்டி நோக்கி பறந்த ட்ரோன், கடலை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் குறித்து, நாராஹேன்பிட்டி போலீஸாரினால் ஏனைய போலீஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்படை, விமானப்படை, ராணுவம் உள்ளிட்ட தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டதாக போலீஸார் குறிப்பிட்டனர்.
எனினும், குறித்த ட்ரோனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, நாட்டில் ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை பறக்கவிட அரசாங்கம் தடை விதித்தது.
இதேவேளை, நாட்டில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது சந்தேகத்திற்கிடமான ட்ரோன்களும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---