ஓமன் வளைகுடாவில் அடுத்தடுத்து 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்


துபாய்:

ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நார்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் டேங்கர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என நார்வே கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிங்கப்பூருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இரண்டு கப்பல்களிலும் இருந்த ஊழியர்கள் மற்றும் குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதலில் தாக்குதலில் சிக்கிய நார்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் கப்பல் கடலில் மூழ்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மே மாதம் சவுதிக்கு சொந்தமான 2 எண்ணெய் கப்பல்கள் உட்பட நான்கு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை அடுத்து உலகளவில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது. எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு வழி வகுக்கிறது. இந்த தாக்குதல் குறித்து செய்தி தங்களுக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகத்திற்குரிய தாக்குதல் குறித்து பிராந்திய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.