அசாருதீன் முதல் விராட் கோலி வரை: உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?


மான்செஸ்டர் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்துள்ள 7 ஐசிசி 50 ஓவர்கள் உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது.
1975-ஆம் ஆண்டு நடந்த முதல் உலககோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் பங்கேற்றாலும், அவை நேரடியாக எந்த போட்டியிலும் சந்திக்கவில்லை.
அதேபோல் 1979 மற்றும் 1983 உலகக்கோப்பை தொடர்களிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேரடியாக சந்திக்கவில்லை.
1987-இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த உலகக்கோப்பை தொடரில், இவ்விரு அணிகளும் இறுதிபோட்டியில் சந்திக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு அணிகளும் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தன.

ஜடேஜாவின் சரவெடி

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த 1992 உலகக்கோப்பை தொடரில்தான் இவ்விரு அணிகளும் , முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் நேரடியாக மோதின. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 216 ரன்கள் எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதன்மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த போட்டியில் அஜய் ஜடேஜா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1992 உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்ற போதிலும் லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
1996 உலகக்கோப்பை தொடரில் பெங்களூருவில் நடந்த காலிறுதிப் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இம்முறை சித்துவின் 93 ரன்கள் மற்றும் ஜடேஜாவின் அதிரடியில் இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியது.
இதன்பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் தொடக்கத்தில் அதிரடியில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் அமீர் ஸோஹைலை ஆட்டமிழக்க செய்த வெங்கடேஷ் பிரசாத் செய்த ஆர்ப்பாட்டமில்லாத செய்கை இந்திய ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்தது.
இந்த போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் 1999-இல் நடந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
1992, 1996 மற்றும் 1999 ஆகிய 3 உலகக்கோப்பை தொடர் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக முகமது அசாருதீன் இருந்தார்.
தென் ஆப்ரிக்காவில் நடந்த 2003 உலகக்கோப்பை தொடரில் மீண்டும் லீக் போட்டியில் மோதிக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில், முதல்முறையாக பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.
உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?படத்தின் காப்புரிமைMIKE HEWITT
சயீத் அன்வரின் அபார சதத்தால் பாகிஸ்தான் 274 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அபார ஆட்டம் இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தது.
98 ரன்கள் எடுத்த சச்சின், பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோய்ப் அக்தர் பந்துவீச்சை விளாசியது இந்திய ரசிகர்களை பெரிதும் பரவசப்படுத்தியது. 2003 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்தார்.

தோனியின் தலைமையில் வெற்றிவாகை சூடிய இந்தியா

2011இல் மொகாலியில் நடந்த அரையிறுதி போட்டியில் மீண்டும் இந்தியா வென்றது. 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வென்ற இந்தியா, இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக்கோப்பை லீக் போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா 300 ரன்கள் எடுத்தது. விராட் கோலி சதமடித்தார்.
224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2011 மற்றும் 2015 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக தோனி வழிநடத்தினார்.
உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES
இந்நிலையில், விராட் கோலியின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 2019 ஐசிசி உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை வென்று 7க்கு 7 என சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 7 உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன், ''இந்திய - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் அழுத்தம் நிறைந்தவை, அதிலும் உலகக்கோப்பை போட்டிகள் மிகவும் அழுத்தம் நிறைந்தவை,'' என்றார்.
''இந்த அழுத்தத்தை சமாளிக்க திறமையை தவிர அசாத்திய மன உறுதி மற்றும் அனுபவம் தேவை. 1992 முதல் தற்போது வரை இந்த விஷயத்தில் இந்தியாவின் கை ஓங்கியிருப்பதால் அந்த அணியால் தொடர்ச்சியாக பாகிஸ்தானை வீழ்த்த முடிகிறது,'' என்றார்.
உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி?படத்தின் காப்புரிமைGETTY IMAGES
''வாசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், அக்தர், சக்லைன் முஷ்டாக் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் இருந்த காலகட்டத்திலும் இந்த காரணத்தினால்தான் இந்தியா வென்றது. மேலும் முக்கிய ஆட்டங்களில் ஒரு வீரர் மிக சிறப்பாக பங்களிக்கும்போது அந்த அணி இயல்பாக வெல்லும்.''
''சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், விராட் கோலி, ரோகித் சர்மா என இந்தியாவுக்கு இயல்பாக இது அமைந்ததால் வெற்றி சாத்தியமானது'' என்று அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள், உலகக்கோப்பை தொடர்களில் மட்டும் ஒருசார்பாக அமைவது, எதிர்காலத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான திரில்லை குறைக்கக்கூடும் என்பது விளையாட்டு ரசிகர்களின் கருத்தாக உள்ளது.