இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதித்துள்ளதா? - விளக்கமளித்தது ஸ்ரீலங்கா கிரிக்கெட்


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட், ஊடகங்களுக்கு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 15ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை.
இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் தடை விதிக்கப்படும் என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், ஊடகங்களினால் வெளியிடப்பட்ட செய்தியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுத்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளதா?படத்தின் காப்புரிமைCHRISTIAAN KOTZE
இவ்வாறான சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு உறுதியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளின் போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்படுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதெனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது.
உலகக் கோப்பை போட்டிகளின் போது, இலங்கை கிரிக்கெட் அணி எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கவனத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தது.
இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்கொண்ட, ஏனைய அணிகளுக்கு சாதகமான வகையிலேயே இதற்கு முன்னர் மைதானங்கள் வழங்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முகமையாளர் அசந்த டி மெல் குற்றம்சாட்டினார்.
மேலும், இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள், ஏனைய அணிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இலங்கை கிரிக்கெட் அணி தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் தடாகம் கிடையாது என கூறிய அவர், பயிற்சி நடவடிக்கைகளின் பின்னர் கட்டாயம் நீச்சல் தடாகத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், ஏனைய அணிகள் தங்கியுள்ள ஹோட்டல்களில் இவ்வாறான வசதிகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளதா?படத்தின் காப்புரிமைGEOFF CADDICK
இதன்படி, இலங்கை அணி எதிர்நோக்கியுள்ள 7 பிரச்சினைகள் தொடர்பில் தாம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முகாமையாளர் அசந்த டி மெல் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் ஏனைய அணிகளுக்கு பெரியளவிலான சிறந்த பஸ்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், இலங்கை அணிக்கு சிறிய ரக பஸ் ஒன்றே வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிய பஸ்களில் மிகவும் நெருங்கிய நிலையில் இலங்கை அணி வீரர்கள் பயணிப்பதனால், இலங்கை அணி வீரர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் ஆடைகள் சிலவும் ஹோட்டலில் காணாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முகாமையாளர், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை போன்ற போட்டிகளில் இவ்வாறான குறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டி தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முகாமையாளர் அசந்த டி மெல் கூறியுள்ளார்.