நவீன் திஸாநாயக்க நடந்துக்கொள்ளும் முறை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது


(க.கிஷாந்தன்)
நாங்கள் எதிர்பார்ப்பது மாகாண சபை தேர்தல் அல்ல. ஜனாதிபதி தேர்தலையே எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி தேர்தல் முடிந்தால் தான் இந்த நாட்டின் பல்வேறு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். அதேபோல அடுத்த ஜனாதிபதி சர்வதேசம் ஏற்றுக்கொள்ள கூடிய ஒருவராகவும் இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் 67வது பிறந்த தின நிகழ்வுகள் 01.08.2019 அன்று இடம்பெற்றது. இதன்போது பூஜை வழிபாடுகளும், மலையக மக்கள் முன்னணியின் புதிய காரியாலய திறப்பும், விசேட கூட்டமும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுவிஸ்லாந்திருந்து வருகை தந்த கம்பன் கழக தலைவர் சுவாமி சரவணபவநந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான அ. அரவிந்தகுமார், வேலுகுமார், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி.ரஞ்சனி நடராஜபிள்ளை, தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவரும், உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவருமான ஜெ.செல்வகுமார், கோயம்புத்தூர் மேற்கு ரொட்டரி கழக தலைவர் தண்டபானி ஜெயகாந்தன், பாண்டிசேரியை சேர்ந்த ரவி குணவதி மைந்தன், சிரேஷ்ட பத்திரிகையாளர் செந்தில் வேலவர், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, மலையக மக்கள் முன்னணியின் நிதி செயலாளரும், பேராசிரியருமான எஸ்.விஜயசந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,
இன்று நாட்டில் எந்த தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே நடைபெற வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பொருத்த வரையில் யார் வேட்பாளர் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அடுத்த ஜனாதிபதி மலையக மக்களின் பிரச்சினைகளை மாத்திரம் அல்லது நாட்டின் எதோ ஒரு பகுதியில் பிரச்சினையை மாத்திரம் தீர்க்க கூடியவராக இல்லாமல் இந்த நாட்டில் இருக்கின்ற அனைத்து சமூகத்தினுடைய பிரச்சினைகளையும் தீர்க்க கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதே மிகவும் முக்கியமானது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை பொறுத்த வரையில் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களின் பல்வேறு விடயங்களை கருத்திற் கொண்டே தீர்மானங்களை நிறைவேற்றும்.
எனவே அடுத்த தேர்தல் மலையக மக்களை பொறுத்த வரை மிக முக்கியமான தேர்தல். அந்த தேர்தலில் மக்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் உருவாகியுள்ள நிலையில் 50 ரூபாய் விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நடந்துக்கொள்ளும் முறை எங்களுக்கு அதாவது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அதிருப்தியை ஏற்படுத்துகின்றது.
எனவே இந்த விடயத்தில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.