நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என இலங்கை
பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அமைச்சகங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடி அல்லது இணைய வழிக் கூட்டங்கள் நடத்தப்படுவதால், தங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அரசு நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 27/2023) இன் படி, பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 1ஐச் சேர்ந்த சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பிஎம்.யாசீர் அரபாத் உத்தியோகபூர்வமாக இன்று (1) திங்கள் கிழமை கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் செயலாளரினால் நியமனம் செய்யப்பட்டிருந்த
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரான இவர் நேர்முக தேர்வு மூலம் பதவி உயர்வு பெற்று இப்புதிய நியமனத்தை பெற்றுள்ளார்.
அக்கறைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் பௌஸ் தலைமையில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் சஹதுல் நஜீம் உட்பட கல்வி அதிகாரிகள், அவரது மனைவி குடும்பத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மருதமுனை பிறப்பிடமாகக் கொண்ட இவர் அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரானின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை தனது வான் பாதுகாப்புப் படை இன்று அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ்படை தெரிவித்துள்ளது.
ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனத்தின்படி, அமெரிக்க ட்ரோன் மூலம் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட முயன்றபோது கண்டறியப்பட்டு, ஏவுகணைகள் மூலம் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.
கடந்த 26ஆம் திகதி ஏற்கனவே அமெரிக்க எம்க்யூ-9 ரக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியிருந்தது. மேலும், தனது வான் எல்லைக்குள் நுழைந்த போர் விமானம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் உரிமை கொண்டாடியது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வணிக மற்றும் போர்க்கப்பல்களும் ஈரானின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
மேலும், ஹோர்முஸ் நீரிணையின் நிர்வாகம் முழுமையாக ஈரான் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அனைத்து கப்பல்களும் நிர்ணயிக்கப்பட்ட பாதைகளில் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், ஈரான் கடற்படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்படவுள்ள 20 இலட்சம் பெறுமதியான 11 வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (31) நடைபெற்றது. கடந்த காலத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறி வீடுகள் இன்றி சிறிய கொட்டகைகளினுள் வாழ்ந்து வரும் அலிக்கம்பை கிராமத்தில் இவ்வீடுகள் அமைக்கப்படவுள்ளதுடன் அங்கு இவ்வருடம் 43 வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கீடும் அரசினால் வழங்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் அலிக்கம்பை தேவகிராமத்தின் புனித சபேரியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை ஆன்ரோய் உதவிப்பங்குத்தந்தை சுஜீவன் ஆகியோரின் விசேட ஆராதனைகளுடன் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பிரஜா சக்தி தலைவர் ஜெபநேசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் வினோ கிராம உத்தியோகத்தர் நிதர்சன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயபால உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர். நீண்டகாலமாக வீடுகள் இன்றி மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் அக்கிராம மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதுடன் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அம்மக்கள் நன்றி தெரிவித்தனர்.
புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் வைபவம், உலகெங்கும் வாழும் பௌத்தர்களின் மிகப் புனிதமான ஆன்மிக விழாவாகும். பௌத்த மத பாரம்பரியத்தால் செழித்து விளங்கும் உயரிய கலாசாரத்தை மரபாகக் கொண்ட இலங்கை மக்கள், உலக பௌத்த மதத்தவர்களுடன் இணைந்து இப்புனிதத் திருநாளை பக்தியுடன் கொண்டாடுகின்றனர். என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வெசாக் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த தர்மம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கும் நடைமுறைச்சாத்தியமான, எக்காலத்திற்கும் பொருத்தமான அமைதிச் செய்தியைக் கொண்டு வந்த மிகச் சிறந்த போதனையாகும். கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தர்மமும் அன்பு, கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அமைதி, சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்த முன்மாதிரியான பாடம், புத்த பெருமான் உட்பட அனைத்து சமயத் தலைவர்களும் போதித்த தர்மமாகும். வெளி உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்கு, முதன்முதலில் மனிதனின் உள்ளத்தில் ஆன்மீக அமைதி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை பௌத்த தர்மம் சுட்டிக்காட்டுகின்றது.
பொதுவான நல்நோக்கங்களுக்காக சமூகத்தை ஒன்றிணைக்க, பௌத்த தர்மம் காட்டும் இந்த உள அமைதி வழியானது, முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில் நம் நாட்டில் அமைதிக்கான பாதயாத்திரையில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்த பஞ்ஞாகர தேரரும் இலங்கைக்குக் கொண்டு வந்த செய்தி இதுவே என்று நான் நம்புகின்றேன்.
மேலும், வெசாக் தினம் என்பது ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாகவும் விளங்குகின்றது.
இந்த வைபவத்தை முன்னிட்டு கொள்கை ரீதியான வழிபாட்டிற்கு முதலிடம் வழங்கி ஏற்பாடு செய்யப்படும் தானம், சீலம், தியானம், தர்ம போதனை போன்ற நிகழ்வுகளும், அண்ணதானப் பந்தல்கள், பௌத்த பக்திப் பாடல்கள், அழகிய வெசாக் கூடுகள் மற்றும் கண்கவர் தோரணங்கள் போன்ற அலங்காரங்களும் இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிதல், நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்குப் பெரும் பக்கபலமாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை.
அனைத்து இனங்களுக்கிடையிலும் பரஸ்பர புரிந்துணர்வு, ஒற்றுமை மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வெசாக் வைபவம் நல்லிணக்கத்தின் அடையாளமாகும்.
அகிம்சை, கருணை மற்றும் அனைத்து உயிரினங்கள் மீதான எல்லையற்ற அன்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சம்புத்த தர்மத்தின் விழுமியங்களை நமது வாழ்க்கையில் மேலும் இணைத்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், தர்மத்தின் குளிர்ச்சியால் அனைவரது மனங்களும் அமைதியடையும் உன்னத வெசாக் தினமாக இந்த தினம் அமையட்டும் என வாழ்த்துகிறேன். என தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகை காலத்தில் தேசிய மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி மின்கலங்களை இன்று (30) பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய மின் நுகர்வு குறைவடைந்துள்ள நிலையிலும், வெசாக் காலத்தில் மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை பேணும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள கலங்களின் உரிமையாளர்கள் தற்காலிகமாக அவற்றை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீனாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதில், ஹுபெய் மற்றும் ஹுனான் மாகாணங்களின் சில பகுதிகளில் பாடசாலைகள், வணிக கடைகள் மற்றும் போக்குவரத்து சேவை உள்ளிட்டவை இரத்து செய்யப்பட்டுள்ளன.
கனமழையால், மண்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டதில் சிக்கி தென்மேற்கு குயிஜவ் மாகாணத்தில் 4 பேரும், தெற்கு ஹுனான் மாகாணத்தில் 4 பேரும், மத்திய ஹுபெய் மாகாணத்தில் உள்ள தாழ்வான கிராமத்தில் 3 பேரும் பலியாகி உள்ளனர். பலரை காணவில்லை.
இதுதவிர, தென்மேற்கே குவாங்சி பகுதியில் பண்ணை தொழிலாளர்களுடன் சென்ற லொறி ஒன்று ஆற்று வெள்ளத்தில் சிக்கி, அடித்து செல்லப்பட்டது.
இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். வீடுகள், வர்த்தக கட்டிடங்களை சுற்றி மழைநீர் தேங்கி காணப்படுகிறது. சாலைகள் நீரில் மூழ்கி விட்டன. சில கார்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
போக்குவரத்து மற்றும் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கனமழையால், ஆயிரம் கி.மீ.க்கும் கூடுதலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, 2.2 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு பேரிடர் நிவாரண நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர் தேக்க நிலையை தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையினால் விசேட வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வழிகாட்டலில், அல்-முனீர் பாடசாலையைச் சுற்றியுள்ள வடிகான்கள் மற்றும் ஜமாலியா பள்ளிவாசல் பிரதேச வடிகால்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் மணல்கள் பிரதேச சபை ஊழியர்களால் அகற்றப்பட்டன.
மேலும், அல்-முனீர பாடசாலை வடிகாலில் நீண்டகாலமாக காணப்பட்ட பாரிய கல்லொன்றும் பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு, வடிகால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
இந்நடவடிக்கையால் மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் நீர் தேக்கம் ஏற்படும் அபாயமும் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் நூறு வயதைத் தாண்டிய திருமதி சிவகங்கை சண்முகராஜா உள்ளிட்ட 30 பேர் "அன்னையர் திலகம்" என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
அன்னை லீலாவதி அறக்கட்டளை நிதியம், அனுசரணையில் கதிரவன் கலைக் கழகம் மற்றும் Battimedia.lk இணைந்து நடத்தும் “அம்மாவை வணங்குவோம்” எனும் அன்னையர் தின சிறப்பு நிகழ்வு நேற்று 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றபோதே இவ்வாறு கௌரவிக்கப்பட்டாரகள்.
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மிஷன் இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ,முன்னாள் மட்டக்களப்பு மாநகர மேயர் முதல்வர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்து கொண்டார்.
பாராட்டப்பட்ட 30 அன்னையர்களுள் 100 வயதை தாண்டிய மட்டக்களப்பு பூம்புகாரைச் சேர்ந்த திருமதி சிவகங்கை சண்முகராசா முடிசூட்டி கிரீடம் அணிவித்து பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அதேபோல் பிரபல கவிஞர் கவிஞர் காசி ஆனந்தனின் சகோதரி 95 வயதுடைய அமிர்தகழியைச் சேர்ந்த திருமதி சிவபாக்கியம் இராசையா முதலி மற்றும் கொக்கட்டிச்சோலை முன்னாள் பிரதேச சபைத் தவிசாளரும் அதிபருமான சிவஞானம் அகிலேஸ்வரனின் தாயார் 91 வயதுடைய மட்டக்களப்பில் வாழும் திருமதி மங்களேஸ்வரி சிவஞானம் உள்ளிட்ட முப்பது பேருக்கு பொன்னாடை போர்த்தி "அன்னையர் திலகம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கதிரவன் கலைக் கழகம் " அம்மா" எனும் தலைப்பில் நடாத்திய இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டிய
53 மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஓட்டமாவடியைச் சேர்ந்த திருமதி பௌசியா முகமட் கலீல் எனும் அன்னை அருமையானதொரு பாடலை மேடையில் பாடினார்.
புதுக்குடியிருப்பில் அந்த நாட்களில் வீட்டில் 200 குழந்தைகள் பெற பிரசவம் பார்த்த திருமதி சின்னப்பிள்ளையும் பாராட்டப்பட்டார்.
தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் பல்வேறு கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
நூருல் ஹுதா உமர் 2026 ஆம் ஆண்டிற்கான கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டிகளில் பாடசாலை மாணவர்கள் மொத்தமாக 05 முதலாம் இடங்கள், 01 இரண்டாம் இடம், 02 மூன்றாம் இடங்கள் எனப் பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வெற்றிகளுக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்து வழிநடத்திய தமிழ் துறை ஆசிரியர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாதிம் அவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்கள் பாடசாலை சார்பாக தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸ் அமைப்பு (INTERPOL) நடத்தும் முதலாவது பொதுத் தொடர்பு தொடர்பான உலக மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு பெற்ற பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டமாணி ஃபிரெட்ரிக் வுட்லர், பங்கேற்க 2026.04.26 அன்று காலை பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார்.
அங்கு அவர், சமீப காலத்தில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி நிலைமைகளின் போது இலங்கை பொலிஸ் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் விசேட உரை ஒன்றை வழங்க உள்ளார்.
இவ்வாறு சர்வதேச பொலிஸ் மாநாட்டில் விசேட உரையை வழங்க அழைப்பு பெற்ற முதல் பொலிஸ் அதிகாரியாக இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி ஃபிரெட்ரிக் வுட்லர் ஆவார்.
இம் மாநாடு 2026 ஏப்ரல் 28 முதல் 30 வரை பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற உள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (24) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை தற்போது ஒன்லைன் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் இதற்கான இணையத்தளம் செயலிழக்கப்படும் என்பதால், அதன் பின்னர் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பம் கோரலுக்கான காலப்பகுதி எக்காரணம் கொண்டும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுவரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 84 சதவிகிதத்தைக் கடந்ததாக தேர்தல் ஆணையத்தின் உத்தேச தரவுகள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளின் நிலை (5 மணி நிலவரப்படி)
முதலமைச்சர் ஸ்டாலின் - கொளத்தூர் தொகுதி - 83.58%
தவெக தலைவர் விஜய் - பெரம்பூர் - 86.72%, திருச்சி கிழக்கு - 79.32%
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி - 89.09%
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - காரைக்குடி தொகுதி - 71.88%
விளம்பரம்
முன்னிலை வகிக்கும் தொகுதிகள்:
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,சென்னையில் வாக்கு செலுத்திய வாக்காளர் ஒருவர்
தொகுதிவாரியாக பார்க்கையில் அதிகபட்சமாக குமாரபாளையம் தொகுதியில் 90.98% வாக்குகள் பதிவாகியிருந்தன. (5 மணி நிலவரப்படி)
வீரபாண்டி - 90.76%
சங்ககிரி - 90.30%
பாலக்கோடு - 89.96%
குளித்தலை - 89.83%
கிருஷ்ணராயபுரம் - 89.83
பெருந்துறை - 89.82%
காங்கேயம் - 89.46%
எடப்பாடி - 89.09%
வேடச்சந்தூர் - 88.86%
ஒட்டன்சத்திரம் - 88.63%
மொடக்குறிச்சி - 88.60%
கரூர் - 88.58%
அவிநாசி - 88.51%
பல்லடம் - 88.42%
திருப்பூர் தெற்கு - 88.23%
திருச்செங்கோடு - 88.06%
ஏற்காடு - 88.02%
குறைவாக வாக்கு சதவிகிதம் பதிவான தொகுதிகள் (5 மணி நிலவரப்படி)
காரைக்குடி - 71.88%
குளச்சல் - 71.87%
மதுரை மத்திய - 71.39%
மதுரை வடக்கு - 70.26%
கிள்ளியூர் - 69.13%
பாளையங்கோட்டை - 66.71%
தமிழ்நாட்டில் மதியம் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்ட வாரியாக பார்க்கையில் நாமக்கலில் 76.43 சதவிகிதமும் அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 75.79 சதவிகிதம் மற்றும் திருப்பூரில் 75.38 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தொகுதி வாரியாக குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 80.67% வாக்குகளும் அதற்கு அடுத்தபடியாக சங்கரி தொகுதியில் 78.42 வாக்குகளும், வீரபாண்டியில் 78.05% வாக்குகளும், காங்கேயத்தில் 78.31% வாக்குகளும் பவானியில் 77.64% வாக்குகளும் அவிநாசியில் 77.43% வாக்குகளும் பதிவாகியிருந்தன.
திருவண்ணாமலை அருகே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சுயேச்சை வேட்பாளரின் முகவர் சேதப்படுத்தியதால் வாக்குப்பதிவு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தேர்தல் அதிகாரி தர்ப்பகராஜ், தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நிகழ்விடத்தை பார்வையிட்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்ததாக சுயேச்சை வேட்பாளர் மற்றும் அவரது இரு முகவர்களை போலீசார் கைது செய்தனர்.
பு
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டையில் வாக்களித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். நடிகர் அஜீத், சென்னையின் திருவான்மியூரில் 7 மணிக்கு முன்னதாகவே தனது வாக்கைச் செலுத்திவிட்டுச் சென்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கை பதிவு செய்தார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையின் நீலாங்கரையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
'தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் மோதி தனது எக்ஸ் தள பக்கத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.
காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதேபோன்று, https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம்.
தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
கோவையில் அமைக்கப்பட்ட தனித்துவமான வாக்குச் சாவடிகள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்நகர் வாக்குச் சாவடியில் தனித்துவமான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பது வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது.
பெண்கள் மட்டும் பணிபுரியும் பிங்க் வாக்குச் சாவடி, இளைஞர் வாக்குச் சாவடி, பசுமை வாக்குச் சாவடி மற்றும் மாதிரி வாக்குச் சாவடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களின் குழந்தைகள் விளையாட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த 4 விதமான வாக்குச் சாவடிகளும் ஓரே இடத்தில் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிப்பவர்கள் வாக்குச் சாவடி வாயிலில் இருந்து செல்பி எடுத்துக்கொள்ள பிங்க் வாக்கு சாவடியில் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பசுமை வாக்கு சாவடியில், வாக்காளர்களை கவரும் விதமாக தென்னை ஓலையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் வாக்களிக்க வருபவர்களின் குழந்தைகள் விளையாட தனி இடவசதி ஏற்படுத்தப்பட்டு, குழந்தைகள் படம் வரையவும், விளையாடவும் உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தது.
வாணியம்பாடியில் தவெக- திமுக இடையே மோதல
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் இடையேயான மோதல் காரணமாக வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
'கள்ள ஓட்டு போடப்பட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சையத் புர்ஹானுதீன் தலைமையிலான நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாம்ளா தேவி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, 'கள்ள ஓட்டு போட்டவர் யார் என்பது சிசிடிவி பதிவு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக' உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இதனால் வாக்குப்பதிவு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.
ராமநாதபுரம்: வாக்காளர்களின் செல்போன்களை சேகரித்த அதிகாரிகள்
ராமநாதபுரம் நகர் பகுதியில் வாக்களிப்பதற்கு முன்பாக வாக்காளர்களிடம் செல்போன்களை பெற்றுக்கொண்டு வாக்களித்த பின்னர் திரும்ப வழங்கப்பட்டது.
தேர்தலில் வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தும் மையத்துக்குள் செல்போன்களை எடுத்துச் சென்று வாக்குப் பதிவு செய்வதை வீடியோவாக பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேர்தல் அலுவலர்கள் தன்னார்வலர்களைப் பணியில் அமர்த்தி வாக்கு மையத்துக்கு செல்வதற்கு முன்பு வாக்காளர்களிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துவிட்டு வாக்கு செலுத்த அனுமதித்தனர்.
வாக்கு செலுத்திய பின்னர் அவர்களுடைய செல்போன் நம்பரை கூற சொல்லி, அதனைச் சரிபார்த்து செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
'கடைசி வாய்ப்பு'
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் இன்பன் உதயநிதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் மனைவி துர்கா, மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் இன்பன் உதயநிதியுடன் வந்து, சென்னை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள். ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமத்துவம், சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் மக்களின் வாக்குகள் அமைய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். அவர் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சிதம்பரம் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஒரு நிலையான அரசு, வளர்ச்சி, நலத்திட்டங்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியை தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அமையும் புதிய அரசு பட்ஜெட் போடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. அமைச்சர்கள், அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள். தமிழகத்துக்கு தேவையான கடனை வாங்கி பட்ஜெட் போடுவார்கள். வருவாய் இருந்தால் கடன் வாங்கலாம், தவறில்லை" என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை, தேனாம்பேட்டையில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மனைவி கயல்விழியுடன் வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார். சீமான், இந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "ஒற்றை விரலால் பெரும் மாறுதலை ஏற்படுத்த முடியும். வாக்களிப்பது, நம்மிடம் இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை. தலைமையை தேர்ந்தெடுக்க நம்மிடம் இருக்கும் கடைசி வாய்ப்பு. மக்கள் அதை தவறவிடக் கூடாது." என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026
படக்குறிப்பு,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார்.
அரசியல் கட்சிகளின் நிலவரம்
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி போட்டியிடுவதுடன், விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. அதுதவிர ராமதாஸ்-சசிகலா கூட்டணியும் களத்தில் உள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன
திமுக 166 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தலா இரண்டு தொகுதிகள், மனிதநேய எஸ்டிபிஐ மற்றும் தமிழர் தேசம் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதி என திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8, தேமுதிகவுக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்களும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 இடங்களும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிடுகின்றது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஒரு தொகுதி), புதிய நீதிக் கட்சி (ஒரு தொகுதி), புரட்சி பாரதம் (ஒரு தொகுதி) உள்ளிட்ட பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் போட்டியிடுகின்றன.
புதிதாகக் களமிறங்கி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது அத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமாருக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியில் ஆண்கள் 117 பேரும், பெண்கள் 116 பேரும், திருநங்கை ஒருவரும் போட்டியிடுகின்றனர்.
சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், ராமதாஸ் மற்றும் இதர அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி 120 தொகுதிகளில் போட்டியிடுகிறது.