நிரந்தர நியமனம்


வடக்கில் உள்ள பட்டதாரிகள் ஒரு தொகுதியினருக்கு அந்ததந்த மாவட்டங்களில், இன்று நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
கிளிநொச்சி மாவட்டம்:
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 141 பட்டதாரிகளில் 101 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநொச்சி தொழில் பயிற்கி வளாக மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த பட்டதாரிகளில் 40 பேர் ஏற்கெனவே நிரந்தர நியமனம் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு பட்டதாரிகளிற்கு நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
வவுனியா:
வவுனியா மாவட்டத்தில் நீண்டகாலமாக பட்டப்படிப்பை முடித்தும் வேலைவாய்ப்பின்றி இருந்த 159 பேருக்கு நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அக்கடிதங்கள், இன்று (01) வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம் ஹனீபா தலைமையில்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 
அண்மையில், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து வவுனியா பட்டதாரிகள் 40 பேருக்கு நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், மிகுதியாக உள்ள 159 பேருக்கு இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், வவுனியா மாவட்டச் செயலாளர் ஐ.எம் ஹனீபா, அமைச்சர் ரிஷாட் பதியூதீன், வவுனியா மாவட்ட மேலதிகச் செயலாளர் .திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறீஸ்கந்தராசா என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம்:
பட்டதாரி பயிலுனர்கள் 1253 பேருக்கு நியமனக் கடிதம் வழங்கும், நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

15 பிரதேச செயலர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கே இந்த பட்டதாரி பயிலுணர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது. 
மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறு நியமனம் பெற்றவர்கள் யாழ்மாவட்ட செயலகத்துக்கு வடமாகாணசபைக்கும் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றையதினம் தங்கள் அறிக்கையினை குறித்த நியமனம் பெற்ற திணைக்களங்களுக்கு சென்று பதிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.