தங்கமாக மாறுவது எப்படி,மொபைல் கழிவுகள்?


உங்கள் கைகளிலும், சட்டை பாக்கெட்டிலும் தங்கச் சுரங்கம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
என்ன நம்ப முடியவில்லையா? ஆனால் இது நூறு சதவிகித அக்மார்க் உண்மை, வேண்டுமானால் 24 காரட் உண்மை என்றும் வைத்துக் கொள்ளுங்கள்.
மொபைல் மற்றும் பிற மின்னணுப் பொருட்களில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை சுரங்கங்களில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு பலவிதமான உருமாற்றங்களை தாண்டி மதிப்புமிக்க உலோகமாக மாறுகிறது.
ஒரு சுரங்கத்தில் இருந்து மூன்று முதல் நான்கு கிராம் வரை தங்கம் எடுக்க வேண்டுமானால் அதற்காக சுமார் ஒரு டன் அளவிலான தாதுப் பொருட்கள் தேவைப்படும். ஆனால் மொபைல் போன், மடிக்கணினி போன்ற ஒரு டன் மின்னணுக் கழிவுகளில் இருந்து 350 கிராம் தங்கம் எடுக்கப்படுகிறது என்பது வியப்பூட்டும் தகவல்.
மனிதர்கள் பயன்படுத்தும் மின்னணுப் பொருட்களின் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி மூலம் பிரிக்கப்பட்ட தங்கத்தை கொண்டு 2020 டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை உருவாக்கும் முயற்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக தங்கம், வெள்ளி, வெண்கலம் என கிட்டத்தட்ட 5000 பதக்கங்கள் உருவாக்கப்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
கழிவுகளில் இருந்து உலோகம்
உலகில் மின்னணுக் கழிவுகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவை எட்டியிருக்கிறது. இந்த ஆபத்தான, நச்சு நிரம்பிய கழிவுகளில் மதிப்புமிக்க உலோகச் சுரங்கமும் பொதிந்திருக்கிறது.
இந்த மின்னணு கழிவுச் சுரங்கங்களில் இருந்து தயாரிக்கவிருக்கும் பதக்கங்களுக்காக, பயனற்ற மின்னணுப் பொருட்களை நன்கொடை கொடுக்கலாம் என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படாமல் வைத்திருக்கும் மின்னணுப் பொருட்களை நன்கொடையாக கொடுப்பார்கள் என்றும், அதிலுள்ள உலோகங்கள் பயன்படுத்தப்படும் என்ற நிலையும் உருவாகியிருக்கிறது.
இந்தத் திட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை மின்னணுக் கழிவுகளில் இருந்து 16.5 கிலோ தங்கமும், 1800 கிலோ வெள்ளியும் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. பதக்கங்கள் செய்ய தேவைப்படும் 2700 கிலோ வெண்கலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து ஏற்கனவே கிடைத்துவிட்டது.
தங்க பதக்கத்திற்கு தேவையான 54.5% தங்கமும், வெள்ளிப் பதக்கத்திற்கு தேவையான 43.9% வெள்ளியும் கிடைத்திருக்கிறது என்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் மாஸா டக்காயா பிபிசிக்கு அனுப்பிய மின்ன்ஞ்சல் தகவலில் தெரிவித்துள்ளார்.
இந்த சுவாரஸ்யமான திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், துரித கதியில் அதிகரித்துவரும் மின்னணு கழிவுகளை கையாளும் ஒரு மிகப்பெரிய வழியைக் காட்டியுள்ளோம். தற்போது உலகில் அதிகரித்துவரும் மின்னணுக் கழிவுகள் நமது பூமியை திணறடித்துக் கொண்டிருக்கிறது என்று டோக்கியோ ஒலிம்ப்பிக் ஏற்பாட்டாளர் குழு தெரிவிக்கிறது.
தங்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அதிகரிக்கும் மின்னணுக் கழிவுகள்
2016ஆம் ஆண்டில் மட்டும் உலகில் 44.7 மில்லியன் டன் மின்னணுக் கழிவு உருவாகியுள்ளது என ஐ.நா அறிக்கை ஒன்று கூறுகிறது. இது ஆண்டுதோறும் 3-4% என்ற அளவில் அதிகரித்து வருகிறது..
18 சக்கரங்கள் கொண்ட 40 டன் எடை தாங்கும் டிரக்குகளில் ஏற்றினால், சுமார் 1.23 கோடி டிரக்குகளில் இந்தக் கழிவுகளை நிரப்பலாம்; இந்த டிரக்குகளை வரிசையாக நிறுத்தினால் பாரிஸ் முதல் சிங்கப்பூர் வரையில், இரண்டு வழித்தடங்கள் கொண்ட சாலை நிரம்பிவிடும். 2021ஆம் ஆண்டுவாக்கில், இந்த டிரக்குகளின் எண்ணிக்கை 5.2 கோடிக்கும் அதிகமாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது.
மின்னணுக் கழிவுகளில் பெரும்பான்மையானவை கழிவாக வெளியேற்றப்படுவதில்லை என்பதுதான் மிகப் பெரிய பிரச்சனை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஜப்பான் நாட்டுடைய பிரச்சனை மட்டுமல்ல. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் எதிர்கொள்ளும் சிக்கல்தான் என்று ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது. மொத்த மின்னணுக் கழிவுகளில் வெறும் 20 சதவிகிதமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியவை வீடுகளிலேயே இருக்கிறது.
நமது மண்ணையும், நீரையும் நஞ்சாக்கக்கூடிய மின்னணுக் கழிவுகளை விலை மதிப்புள்ள உலோகங்களின் சுரங்கமாக பார்க்கும் வித்தியாசமான கோணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுதான் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள் செய்யும் ஜப்பானின் முயற்சி.
தங்கம்படத்தின் காப்புரிமைALAMY
"ஜப்பானிடம் இயற்கை வளங்கள் மிகவும் குறைவு அதனால், மதிப்புமிக்க உலோகங்கள் இருக்கும் சுரங்கமாக மின்னணுக் கழிவுகளை அந்நாடு பார்க்கிறது. மின்னணுப் பொருட்களின் கழிவில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் பொன்னான வாய்ப்பு ஜப்பானுக்கு கிடைத்திருக்கிறது" என்கிறார் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் மின்னணு கழிவுப்பொருட்கள் நிபுணர் மற்றும் ஐ.நா அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவருமான ரியூடிகர் க்யூஹர்.
நகர்ப்புறங்களில் இருந்து கிடைக்கும் உலோகங்களின் மதிப்பானது, பூமியில் இருந்து உண்மையான சுரங்கங்களில் இருந்து கிடைப்பதைவிட நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகிறார், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் மரியா ஹோலுஸ்கோ. இவர் இதற்கு நகர்ப்புற சுரங்கம் எனப்படும் 'urban mining' என்றும் பெயர் கொடுக்கிறார்.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் கிடைப்பதோடு, இந்த பொருட்களுக்காக நாம் பூமியில் இருந்து மேலும் அதிகமான இயற்கை வளங்களை அகழ்ந்தெடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
நல்ல தொழில் வாய்ப்பான இதை கைநழுவவிடக்கூடாது என்று மரியா கூறுகிறார்.
செல்போன்படத்தின் காப்புரிமைALAMY
கண்ணாடி, எக்ஸ்ரே தகடுகள் மற்றும் கழிவு பொருட்களில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட வெள்ளியில் இருந்து 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் வழங்கப்பட்ட 30% வெள்ளிப் பதக்கங்கள் உருவாக்கப்பட்டன. மருத்துவக் கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட தாமிரம் மற்றும் வெண்கலங்களை கொண்டு 40 சதவிகித பதக்கங்கள் உருவாக்கப்பட்டதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பெல்ஜியத்தில் இருந்து கிடைத்த கழிவுகளில் இருந்து மறுசுழற்சி உலோகங்களைக் கொண்டு வேங்கூவர் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 1.5 சதவிகித பதக்கங்கள் உருவாக்கப்பட்டன.
டோக்கியோ 2020 ஒலிம்பிக்
2020 ஒலிம்பிக் போட்டிகள் இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்படும் பதக்கங்கள் உருவாக்க பயன்படுத்தப்படும் உலோகங்கள் அனைத்தும் மின்னணுக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டாவது, இந்த மின்னணுக் கழிவுகள் அனைத்தும் ஜப்பான் மக்களிடம் இருந்தே நன்கொடையாக பெறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஜப்பானில் உள்ள மின்ன்ணு கடைகளில் இருந்து 43.2 லட்சம் வீணான மொபைல்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் நகர நிர்வாக அமைப்புகளிடம் இருந்து சிறிய அளவிலான மின்னணு பொருட்களின் கழிவுகள் 34 ஆயிரம் டன் அளவிற்கு பெறப்பட்டன.
மொபைல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
ஜப்பான் மூதாட்டி ஒருவர் பேசும் பிரசார காணொளி காட்சி ஓன்றில், "என்னிடம் இருந்த பயன்படுத்தாத ஐந்து மொபைல் போன்களை நன்கொடையாக கொடுத்திருக்கிறேன். ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் நானும் இவ்வாறு பங்கு பெறுகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
35-40 மொபைல் போன்களில் இருந்து ஒரு கிராம் தங்கம் எடுக்க முடியும். ஒலிம்பிக் தங்க பதக்கம் ஒன்று உருவாக்க ஆறு கிராம் அளவிலான தங்கம் தேவைப்படும் (தங்கப் பதக்கத்தில் உள்ள எஞ்சிய உலோகம் வெள்ளி) என்று சர்வதேச ஒலிம்பிக் குழு கூறுகிறது.
தங்கத்தை நன்கொடையாகப் பெறும் இந்த முயற்சிக்கு பலவிதமான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இதுவரை பதக்கம் வென்ற பலர் தங்கள் பழைய மின்னணு பொருட்களை நன்கொடையாக கொடுத்துள்ளனர். 2017இல் டோக்கியோவுக்கு அரசுமுறைப் பயணம் சென்றிருந்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் உட்பட பிரபலங்கள் பலரும் நன்கொடை கொடுத்துள்ளனர்.
இந்த திட்டத்தின்படி மின்னணுக் கழிவுகள் வெற்றிகரமாக மறுசுழற்சி செய்யப்படுவது பரவலாக பேசப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதோடு, மக்களையும் உணர்வுபூர்வமாக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்தும்.
தங்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption35-40 மொபைல் போன்களிலிருந்து ஒரு கிராம் தங்கம் கிடைக்கும்
இதுவரை ஜப்பானில் சேகரிக்கப்பட்ட மின்னணுக் கழிவானது, அந்நாடு ஆண்டொன்றுக்கு வெளியேற்றும் 3 சதவிகிதத்திற்கும் குறைவானது என்றும், இது சுமார் இரண்டு மில்லியன் டன்களாக இருக்கலாம் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.
இந்த கழிவுகளில் இருந்து தங்கம் போன்ற மதிப்புமிக்க உலோகங்கள் பிரித்தெடுத்த பிறகு, அவற்றில் எஞ்சியிருக்கும் உலோகம் அல்லாத கழிவுகளின் நிலை என்ன என்பது மாபெரும் சவால்.
உலோகங்களை எடுத்தபின், எஞ்சியிருக்கும் கழிவுகள் நிலத்தில் மாசு ஏற்படுத்தக்கூடும் என்கிறார் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஹோலிஸ்ச்கோ. இவர் ஸ்மார்ட்போன்களை முழுமையாக மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டுள்ளார்.
மின்னணுப் பொருட்களை நாம் பயன்படுத்தும் அளவை ஒப்பிட்டால், அடுத்த சில தசாப்தங்களில் இந்த பூமியில் எட்டு கோடி டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துவிடும் என்று நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மொபைல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
மொபைல் அல்லது மடிக்கணினிகளை விலை கொடுத்து சொந்தமாக வாங்கி நம்மிடமே வைத்துக் கொள்வதைவிட, தேவைப்படும்போது நிறுவனங்களில் இருந்து வாங்கி பயன்படுத்திவிட்டு திரும்பக் கொடுத்துவிடலாம் என்றும் சிலர் ஆலோசனை கூறுகின்றனர். இது வாடகைக்கு பொருள் வாங்குவது போன்றதுதான். அதேபோல வாங்கிய பொருட்கள் சேதமடைந்தால் அவற்றை பழுது நீக்கி பயன்படுத்துவதால் மின்னணுக் கழிவுகள் சேர்வதும் குறையும்.
ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் 'மொபைல் கம்யூனிகேஷன்ஸ்', 'எலெக்ட்ரானிக் ஹவுஸ் டிஷ் வாஷிங்' ஆகிய சேவைகளை வழங்குகின்றன. பயன்படுத்தும்போது சாதனம் உடைந்துவிட்டால், அதை பழுதுபார்க்கும் காலகட்டத்தில் உங்களுக்கு மாற்று சாதனத்தையும் நிறுவனங்கள் கொடுக்கின்றன.
மின்னணு சாதனத்தை இனிமேல் பயன்படுத்தவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்டால் அவற்றில் இருக்கும் பயன்படக்கூடிய பொருட்களை எடுத்து, அந்த நிறுவனம் தனது உற்பத்திக்கு மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறு மின்னணுக் கழிவுகளை குறைக்கும் முயற்சியில் நாம் அனைவருமே ஆக்கப்பூர்வமான பங்களிக்க முடியும்.
எது எப்படியிருந்தாலும், இப்போது பதக்கங்களை உருவாக்க ஜப்பான் மேற்கொண்டிருக்கும் இந்த அரிய முயற்சி சர்வதேச அளவில் வலுவான விழிப்புணர்வை ஏற்படுத்தும். தற்போது 5000 பதக்கங்கள் என்ற அளவில் தொடங்கும் இந்த முன்முயற்சியானது பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
ஜப்பானின் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளைப் போல பிற நாடுகளும் வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.