ஆவேசத்துடன் கூறுகின்றார் ரணில்,இனி பதிலளிக்க மாட்டேன்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கோ அல்லது வேறு எவருக்கோ உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியை வழங்குமாறு தான் பரிந்துரை செய்யவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரதமர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம், உயர்நீதிமன்ற நீதியரசராக ஒருவரை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் பிரதம நீதியரசர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பை மீறி செயற்பட்டது கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவிற்கோ அல்லது வேறு எவருக்கோ உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியை வழங்குமாறு தான் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறான கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என அவர் குறிப்பிடுகின்றார்.
தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் கருத்து குறித்து உடனடி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ள பிரதமர், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சட்ட மாஅதிபருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு, அழுத்தங்களை பிரயோகித்த அரசியல்வாதி யார் என்பது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தில்ருக்ஷி விக்ரமசிங்க அலரிமாளிகையில் கடமையாற்றவில்லை எனவும், ஊழலுக்கு எதிரான குழு அலரிமாளிகையில் ஸ்தாபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி, தன்னை இலக்கு வைத்து இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான உள்நோக்கம் என்னவென தனக்கு புரியவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சந்தேகங்கள் இருக்குமாயின், அது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல்களை நடத்துவது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு இன்றி பகிரங்கமாக தமது கருத்துக்களை வெளியிடுகின்றமையானது, ஜனநாயக ஆட்சிக்கு முரணான செயற்பாடு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் தன்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுமாக இருந்தால், அவற்றுக்கு தான் பதிலளிக்க போவதில்லை என அவர் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டுக்களை உரிய இடத்தில் முறையாக முன்வைக்கப்படுமாக இருந்தால், அதற்கு பதிலளிக்க தயார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்திற்கும் அதுவே சரியான நடைமுறை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.