#Sarah Thomas ஆங்கில கால்வாயை இடைவிடாது 4 முறைகள் கடந்து சாதனை




ஓராண்டுக்கு முன்பு மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டெழுந்த பெண்ணொருவர், ஆங்கில கால்வாயை இடைவிடாமல் நான்குமுறை கடந்து இந்த சாதனையை நிகழ்த்திய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது பயணத்தை தொடங்கிய 37 வயதான சாரா தாமஸ், 54 மணிநேரத்திற்கு பிறகு தனது இலக்கை அடைந்தார்.
2018ஆம் ஆண்டு மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சையை நிறைவு செய்த சாரா, தனது இந்த சாதனையை "மார்பக புற்றுநோயுடன் போராடி வரும் அனைத்து பெண்களுக்கும்" சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது இலக்கை அடைவதற்கு சாரா 80 மைல்களை கடக்க வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், வலிமையான கடல் அலைகளின் காரணமாக அவர் கடைசியில் மொத்தம் 130 மைல்களை கடக்க நேரிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தை சேர்ந்த சாரா, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணியளவில் திட்டமிடப்பட்ட இலக்கை அடைந்தார்.
"நான் நினைத்ததை செய்துவிட்டேன் என்பதை சிறிதும் நம்பமுடியவில்லை. என்னை உற்சாகப்படுத்துவதற்கும், வாழ்த்துவதற்கு கடற்கரையில் பலர் குவிந்திருந்ததை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். நான் தற்போது மிகவும் சோர்வாக உணருகிறேன். இன்றைய நாள் முழுவதும் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளேன்" என்று இலக்கை அடைந்த பிறகு பிபிசியிடம் பேசிய அல்ட்ரா மாரத்தான் வீராங்கனையான சாரா தாமஸ் கூறினார்.
ஆங்கில கால்வாயை இடைவிடாது நான்குமுறை கடந்து சாதனை படைத்த பெண்படத்தின் காப்புரிமைJON WASHER
சாராவின் சாதனைக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தனது மகளின் சாதனை குறித்து பிபிசியின் வானொலி நிகழ்ச்சியொன்றில் பேசிய பெக்கி பாஸ்ட்டெர், "அவளது பல பயணங்களின்போது நான் உடனிருந்திருந்தாலும், இது என்னை மிகுந்த பயத்தில் ஆழ்த்தியது" என்று கூறினார்.
சென்ற ஆண்டு புற்றுநோயிலிருந்து மீண்ட சாராவுக்கு மருத்துவம் அளித்த குழுவை சேர்ந்த எலைன் ஹௌலே, இந்த சாதனை குறித்து பேசுகையில், "சாரா தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை பொறுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கான காரணியாக நீச்சலை பயன்படுத்தினார். மாரத்தான் நீச்சல் விளையாட்டின் எல்லைகளையும் கடந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது ஒரு அசாதாரணமான வெற்றி" என்று அவர் கூறினார்.

நீச்சல் மீதான தீராத காதல்

2007ஆம் ஆண்டு முதல் முறையாக திறந்த நீர் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சாரா தாமஸ், ஆங்கில கால்வாயை முதல் முறையாக 2012யிலும், பிறகு மீண்டும் 2016யிலும் கடந்தார்.
இந்நிலையில், அமெரிக்கா - கனடாவுக்கு இடைப்பட்ட பகுதியிலுள்ள சாம்ப்லைன் ஏரியில் 104.6 மைல் தூரம் நீந்திய பிறகே, சாராவுக்கு புற்றுநோய் இருப்பது குறித்து கண்டறியப்பட்டது.
ஆனால், தனது தன்னம்பிக்கையை சிறிதும் தளர விடாத சாரா, உடனடியாக புற்றுநோய்க்கெதிரான சிகிச்சையை தொடங்கிய நிலையில், சென்றாண்டு மத்தியில் அதிலிருந்து பூர்ண நலம் பெற்றார்.

எவ்வளவு தூரம் நீந்தினார்?

Sarah Thomas's route
இங்கிலாந்தையும், பிரான்சையும் பிரிக்கும் ஆங்கில கால்வாயின் இரண்டு முனைகளையும் 54 மணிநேரத்திற்குள் இரண்டு முறை கடந்து சாதனை படைத்துள்ளார் சாரா தாமஸ்.
இந்த பயணத்தில் சாரா ஒட்டுமொத்தமாக 80 மைல்களை கடக்க வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், வலிமையான கடல் அலைகளின் காரணமாக அவர் கடைசியில் மொத்தம் 130 மைல்களை கடந்தே இலக்கை அடைய நேரிட்டது.
இதுவரை நான்கு நீச்சல் வீரர்கள் மட்டுமே ஆங்கில கால்வாயை மூன்று முறை இடைவிடாது கடந்துள்ளனர்.
சாரா தாமஸுக்கு முன்பு ஒருவர் கூட நான்குமுறை ஆங்கில கால்வாயை கடந்ததில்லை.
"மனிதகுல வரலாற்றில் மனநலத்தையும், உடல்நலத்தையும் ஒருமுகப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று" என்று எழுத்தாளரான சார்லி கான்னெல்லி கருத்துத் தெரிவித்துள்ளார். சாராவின் சாதனை இலக்கை மேற்பார்வை செய்த கெவின் முர்பி, "இவர் மனிதரின் தாங்கும் திறனின் எல்லைகளை பரிசோதித்துள்ளதாக" கூறுகிறார்.

சவால்கள் என்னென்ன?

தன்னை கரையை நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கும் அலைகளே மிகப் பெரும் சவாலாக இருந்ததாகவும், ஜெல்லி மீன்களால் தாக்குதலுக்குள்ளானதே மோசமான அனுபவம் என்று சாரா கூறுகிறார்.
"கடலில் நிறைந்துள்ள உப்பு நீரில் தொடர்ந்து இத்தனை மணிநேரங்களுக்கு நீச்சலடித்தது, எனது தொண்டை, வாய் மற்றும் நாக்கை பெரிதும் பாதித்துவிட்டது. ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு விதமான சவாலை சந்திக்க நேரிட்டாலும், கடைசிமுறை பிரான்சிலிருந்து இங்கிலாந்தை நோக்கி வருவதே மிகவும் கடினமாக இருந்தது. நான் நினைத்த அளவுக்கு கடல்நீர் குளிர்ச்சியாக இல்லை; அலையின் வேகம் பலமாக இருந்தது. மேலும், நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஜெல்லி மீன் ஒன்று எனது முகத்தில் தாக்கிவிட்டது" என்று சாரா தாமஸ் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, ஆங்கில கால்வாய் நீச்சல் மற்றும் வழிகாட்டி கூட்டமைப்பின் விதிமுறையின்படி, தனது ஒட்டுமொத்த பயணத்திலும், ஒரே தொப்பி, கண்ணாடி மற்றும் நீச்சலுடையை மட்டுமே அவர் பயன்படுத்தினார்.

உணவுக்கு என்ன செய்தார்?

ஆங்கில கால்வாயை இடைவிடாது நான்குமுறை கடந்து சாதனை படைத்த பெண்படத்தின் காப்புரிமைLORETTA COX
தூக்கத்தை ஈடுசெய்ய சிறிது காஃபின் மற்றும் ஊட்டச்சத்துக்காக புரதங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் கலந்த பானத்தை சாரா நம்பியிருந்தார்.
"சாராவுக்கு தேவையான பானங்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டு இருந்தன. ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் அவரது கவனத்தை அதில் செலுத்த செய்தோம்" என்று அவரது தாய் கூறுகிறார்.
தனது சாதனை பயணத்தை முடித்து வறண்ட நிலத்தில் காலடி வைத்த சாரா, வரலாற்று சிறப்புமிக்க அந்த தருணத்தை சாம்பைன் மற்றும் சாக்லேட்டுகளுடன் கொண்டாடினார்.