இலங்கையின் இலத்திரனியல் வணிகம்


அனுதினன் சுதந்திரநாதன் 
அண்மைய காலத்தில், இலங்கையில் வளர்ச்சியடைந்து வரும் புத்தம்புதிய வணிகமாக, இலத்திரனியல் வணிகங்கள் மாறியுள்ளது. பாரம்பரிய வணிகங்கள் கூட, தமது வணிகச் செயற்பாடுகளுடன் இலத்திரனியல் முறை வணிகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செல்லவேண்டிய தேவையை, இந்த அபரீதமான இலத்திரனியல் துறையிலான வளர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, புத்தாக்க முயற்சியாளர்களின் அதீத வரவுக்கும் அவர்களது வெற்றிக்கும், இந்த இலத்திரனியல் வணிக முறைமை இன்றியமையாதவொன்றாக மாறியுள்ளது. 
அதுமட்டுமல்லாது, நிதியியல் ரீதியான பெரும்பாலான வணிகச் செலவீனங்களை, இந்த இலத்திரனியல் வணிகம் குறைத்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்குமிடையிலான இடைத்தரகர்களைக் குறைப்பதிலும், இந்த இலத்திரனியல் வணிகம் பெரும்பங்காற்றி வருகின்றது.  
2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜக்கிய நாடுகள் சபையின் வர்த்தக, அபிவிருத்தி மாநாட்டில், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள், மிக வேகமாக இலத்திரனியல் வர்த்தகத்துக்குள் தங்களை உள்ளடக்கிக்கொள்ளுவது மிக அவசியம் என்பதுடன், மிக இலகுவாக, வர்த்தகச் சந்தையை விரிவுபடுத்த முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதற்கான மிக முக்கியக் காரணமான, இலத்திரனியல் சந்தை அல்லது இலத்திரனியல் வர்த்தகமானது, மிக இலகுவாக, உலக விநியோக சங்கிலியில், உங்களை இணைப்பதுடன், உங்கள் வர்த்தக நிறுவனத்தின் செயற்பாடுகளில் வினைத்திறன்தன்மையை மேம்படுத்துவதாகவும் அமையும்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இலத்திரனியல் வர்த்தகமும் மின்னணு கொடுக்கல் வாங்கலும் சர்வேத சந்தையையும் உள்நாட்டு சந்தையையும் இணைக்கின்ற, சமநிலைப்படுத்தும் ஓர் ஊடகமாகப் பார்க்கப்படுகிறது. இது வர்த்தகத்துக்கும்-வர்த்தக்த்துக்குமான (B2B - Business to Business) சந்தையை மட்டுமல்லாது, வர்த்தகர்களுக்கும்-வாடிக்கையாளர்களுக்குமான (B2C - Business to Customers) நேரடி சந்தையைத் திறக்கும் ஒரு திறவுகோலாகவும் அமைகிறது. இலங்கையை பொறுத்தவரையில், அந்நிய முதலீடு, அந்நிய செலவாணி, ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புகளைத் தேடும் நிலையிலேயே தற்போது உள்ளது. எனவே, இலத்திரனியல் சந்தையையும் மின்னணு கொடுக்கல் வாங்கல் முறையையும் முறையாக உள்வாங்கி கொள்ளுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.  
இலங்கையின் மின் வணிக (E-Commerce) சந்தையைப் பொறுத்தவரையில், கடந்த 5 வருடங்களில் மிகப்பாரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. குறிப்பாக, 2015இல் ஒட்டுமொத்த வர்த்தகப் பரிமாற்ற சந்தையில் 1 சதவீதமாக இருந்த மின் வணிகமானது, 2018இல் மிக விரைவாக 3 சதவீதம் என்கிற வளர்ச்சி மைல்கல்லை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம், இலங்கையில் ஏற்பட்ட அதீத அலைபேசி பாவனையும் அதுசார்ந்து வளர்ச்சியடைந்த இலத்திரனியல் வணிக கொடுக்கல், வாங்கல்களுமே ஆகும்.
2015ஆம் ஆண்டுடன், 2016ஆம் ஆண்டை ஒப்பிடுமிடத்து, அலைபேசி சந்தையானது 107 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இது, அதீத அளவில், இலத்திரனியல் வணிகத்தில் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஆனாலும், ஆசிய பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கையானது தனது இணையப் பாவனையாளர்களில் இலத்திரனியல் வணிகத்தில் அல்லது மின்னணு பரிமாற்றத்தில் ஈடுபடுவர்களின் அளவை மிகக்குறைவாகவே கொண்டிருக்கிறது.  
அப்படியாயின், என்ன காரணத்தால் இலங்கையிலுள்ள இலத்திரனியல் வணிக சந்தையாளர்களால், இணையப் பாவனையிலுள்ள அனைவரையும் இந்தச் சந்தைக்குள் கொண்டுவர முடியவில்லை. அதற்கு, பல காரணங்கள் குறிப்பிடப்பட்டாலும், பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, இணைய பணப் பரிமாற்றம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலிருப்பதும் அதுசார் நடைமுறைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில் காணப்படும் அதீத கட்டுப்பாடுமே ஆகும்.  
ஒழுங்குசார் கட்டுப்பாடுகளும் சந்தை வாய்ப்புகளும்
இலத்திரனியல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான இலங்கை நிறுவனங்களின் மிகப்பெரும் சந்தைச் சவாலாகவிருப்பது, அனைவராலும் பயன்படுத்தக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டணத்தைக் கொண்ட ஒரு பொதுவான இலத்திரனியல் கொடுப்பனவு பொறிமுறையைப் பயன்படுத்துவதாகும்.
ஆனால், குறித்த பொதுவான இலத்திரனியல் பரிவர்த்தனையை உருவாக்கவும் அது தொடர்பான அனுமதியைப் பெறும் முறையும் மிகவும் சிக்கல் வாய்ந்ததாக இருக்கிறது. குறிப்பாக, இலத்திரனியல் கொடுப்பனவு பொறிமுறையை உருவாக்க விரும்புவர்கள், இலங்கையின் இலத்திரனியல் பரிமாற்ற சட்டம், அட்டைக் கொடுப்பனவு, அலைபேசி கொடுப்பனவு முறைகளுக்களுக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் அனுமதியைப் பெறவேண்டியதாக இருக்கும். அத்துடன், இலங்கை மத்திய வங்கியால் வரையப்பட்ட விதிமுறைகள், நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவேண்டியது அவசியமாகிறது.  
மேலும் இலங்கை வங்கியின் சட்ட விதிமுறைகள் பிரகாரம், இலத்திரனியல் கொடுப்பனவை மேற்கொள்ள அதிகாரம்பெற்ற வணிக வங்கிகள், அதிகாரம்பெற்ற சிறப்பு வங்கிகள், நிதி நிறுவனங்கள், அதிகாரமளிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் ஆகியோரை அனுமதிக்கிறது. மேற்கூறிய வகைக்குள் அடங்காதவர்கள் இலங்கையின் கம்பனி சட்டத்தின் கீழ் தம்மை பதிவு செய்து, செலவிடாத சொத்தாகக் குறைந்தது 150 மில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கிக்குக் காட்டுவதன் மூலமாக, இலத்திரனியல் கொடுப்பனவு முறையை உருவாக்கிக்கொள்ளவும் அந்தச் சேவையை வழங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இது தெளிவாக, குறித்த இலத்திரனியல் கொடுப்பனவு முறை வங்கிகளுக்கும், தொலைத்தொடர்புசார் நிறுவனங்களுக்கும் வரையறுக்கப்பட்டுள்ளதைக் காட்டி நிற்கிறது.  
இத்தகைய வரையறை, இலங்கையில் இலத்திரனியல் கொடுப்பனவு முறையையும், இலத்திரனியல் வர்த்தகத்தையும் கொண்டு நடாத்த விரும்பும் நிறுவனங்கள் , முயற்சியாளர்களுக்கு பின்வரும் சவால்களை உருவாக்குகிறது.  
1. இலத்திரனியல் கொடுப்பனவிலான சிக்கல்  
இலங்கையில் தற்போதைய நிலையில், அதிகாரம்பெற்ற வணிக வங்கிகளே இலத்திரனியல் கொடுப்பனவுக்கான இணையவழி சேவையை (Internet Payment Gateway) வழங்குகின்றன. பெரும்பாலான, வர்த்தக நிறுவனங்களிலும், கடைகளிலும் உங்கள் கடன், வரவட்டைகளின் வழியாக நீங்கள் செய்யும் கொடுப்பனவுகளும் இணையவழியாக செய்யும் கொடுக்கல், வாங்கல்களும் இதற்குள் உள்ளடங்குகின்றன.
வாடிக்கையாளர்கள் பல்வேறு வங்கிகளின் கடன், வரவட்டைகளை தமது வசதிக்கேற்ப பயன்படுத்த முடியும். ஆனால்,  வாடிக்கையாளர்களின் அனைத்து அட்டை வடிவிலான கொடுப்பனவுகளை ஏற்பதில் வர்த்தகங்கள் பின்வரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  
ஒன்றுக்கும் மேற்பட்ட வணிக வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யவேண்டும்.
அனைத்தையும் அமுல்படுத்தவும், பராமரிக்கவும் அதிகம் செலவிட வேண்டி ஏற்படும்.  
உதாரணமாக, நடைமுறையில் Visa, Master, Mastro என விதம் விதமான அட்டைகளின் பயன்பாடு இருக்கிறது. ஆனால், அனைத்து வங்கிகளுமே ஒரே வகை நிறுவனத்தின் அட்டைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை. அவை, தமது வசதிக்கேற்ப, வேறுபட்ட நிறுவனங்களை தேர்ந்தெடுக்கின்றன. விளைவு, அனைத்துவகை வாடிக்கையாளர்களையும் கவர, வர்த்தக நிறுவனங்கள் அனைத்துவகை நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்களை செய்யவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கான செலவு என்பது மிக அதிகமானது. எனவேதான், இலத்திரனியல் வணிகத்தை பெரும்பாலான சிறிய, நடுத்தர மற்றும் பாரம்பரிய நிறுவனங்களால் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவதில்லை.  
இலங்கையைப் பொறுத்தவரையில், குறித்த ஒரு வணிக நிறுவனம் தனக்கான இணையவழி கொடுப்பனவை நிறுவிக்கொள்ள மிகப்பெரும் தொகைய செலவிட வேண்டியிருக்கிறது. உதாரணமாக, IPG (Internet Payment Gateway) எனப்படும் இந்தச் சேவையை பெற்றுக்கொள்ள 100,000 - 300,000ஐ வங்கிகளுக்கு ஏற்ப உத்தரவாதப் பணமாகச் செல்லுத்த வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாது, குறித்த சேவையை கட்டமைத்துக் கொள்ள 15,000 - 75,000 ரூபாயை, ஒருதடவை பணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். குறித்த சேவைக்கான வருடாந்த பராமரிப்பு செலவு மற்றும் ஒவ்வொரு பணப் பரிமாற்றத்துக்குமான தரகுப்பணம் என்பது 75,000 - 165,000 வரையிலும் செல்லக்கூடியதாக இருக்கும். இவை அனைத்துமே, வணிக முயற்சிகளை ஆரம்பிக்க நினைக்கும் சிறிய, நடுத்தர வணிகங்களுக்கு மிகப்பெரும் மூலதனச் செலவாக அமைகிறது.  
இவற்றுக்கு மேலாக, வங்கிகள், அட்டை வழங்கும் நிறுவனங்கள் இலத்திரனியல் இணையப் பணக்கொடுப்பனவை மேலும் பாதுகாப்புடையதாக மாற்ற, வாடிக்கையாளர்கள் இணையவழியாக குறித்த தளத்தில் பொருள்கள் அல்லது சேவையைப் பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தைச் செலுத்தும்போது, குறித்த தளத்திலிருந்து மேலும் பாதுகாப்பான மற்றுமொரு தளத்துக்கு எடுத்துச் செல்லுகின்றன. ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இதுதொடர்பில் போதிய விழிப்புணர்வின்மை காரணமாக, வேறு தளத்துக்குச் செல்வது பாதுகாப்பற்றது எனக்கருதி கொடுப்பனவைச் செய்யாமல் குறித்த கொடுக்கல்,வாங்கலையே இரத்து செய்கிறார்கள். இதன் விளைவாக, பாதிக்கப்படுவது வர்த்தக நிறுவனங்களே தவிர, IPG நிறுவனங்கள் அல்ல.  
2. மூலதன பற்றாக்குறை, முடக்கம்  
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, குறித்த ஒரு நிறுவனம், வங்கிக்கானதோ அல்லது தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கானதோ அம்சங்களைக் கொண்டிராதபோது, 150 மில்லியன் மூலதனத்தை உத்தரவாதமாக வழங்கியே புதிய இணையவழி கொடுப்பனவு முறையை உருவாக்க முடியும் என்கிறது. மக்களுக்கு மின்னணு வர்த்தகத்தை வழங்கவிரும்பும் நிறுவனங்கள் தமக்கென பிரத்தியேக இணையவழி கொடுப்பனவை உருவாக்கிக்கொள்ள அத்தகைய பாரிய மூலதனத்தை செலவிட முடியாது. இது இணையவழி வர்த்தகத்தில் மிகப்பெரும் செலவீனத்துடன் வர்த்தகவங்கிகளை சார்ந்தியங்க நிறுவனங்களை மறைமுகமாக நிர்ப்பந்திக்கிறது.  
மாற்றுக் கொடுப்பனவு முறைகள்
 மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில், இலங்கையின் இணையவழி கொடுப்பனவு முறையில் ஒரு வெற்றிடமும், அதனை பயன்படுத்திக்கொள்ளக் கூடிய சந்தை வாய்ப்பும் உருவாகியுள்ளதை உணர்ந்துகொள்ள முடியும். அத்தகைய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட ஆரம்பித்து இருக்கின்றன. PayHere, BizPay and WebXPay என்பன அவற்றுக்கான சில உதாரணங்கள் ஆகும்.
இவற்றின் பிரதான நோக்கமே, சந்தையிலுள்ள வர்த்தக நிறுவனங்களின் இணையவழி கொடுக்கல்,வாங்கலுக்கான செலவீனத்தைக் குறைத்து, அதன்மூலம் தமது வருமானத்தை உச்சப்படுத்திக் கொள்ளுவதாகும். எனவே, இணையவழி கொடுக்கல்,வாங்கல்களை நிறுவுவதற்கான மூலதனச் செலவு, பராமரிப்புச் செலவு என்பவற்றையும், சிக்கல் நிறைந்த பொறிமுறையும் வணிகங்கள் கொண்டிருக்காமல், மாதாந்த அல்லது வருடாந்த கொடுப்பனவு மூலம் குறித்த சேவையை மூன்றாம்தர நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுவது இலகுவாக்கப்படுகிறது. இது வணிகங்களைத் தமது முதன்மை நோக்கத்தை நோக்கியதாகச் செயற்பட மிகவும் உகந்ததாகவும் அமைகிறது.  
எதிர்காலத்தில், இலங்கை கொடுக்கல்,வாங்கல் முறையில் மிகச்சிறந்த முறையில் தொழில்நுட்பரீதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதனை உச்சமாகப் பயன்படுத்தி, பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ள குறித்த கொடுக்கல்,வாங்கல் முறைகளில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கவேண்டியதும், இலகுபடுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமாக உள்ளது.
அதுமட்டுமல்லாது, இலங்கையையும், அதன் வணிகர்களையும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணையவழி கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்த அனுமதித்து, அவர்களை உலக இலத்திரனியல் பொருளாதாரத்தில் (Global Digital Economy) இணைப்பதற்கான உகந்த தருணமாகும்.
இதற்காக, இலங்கையின் தகவல் தொழில்நுட்ப முகவர் நிறுவனங்கள் Stripe மற்றும் Paypal ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமையும், தற்போதைய நிலையையும், சந்தைத் தேவைகளையும் புரிந்துகொண்டு செயல்படுவதும் பாராட்டுதற்குரியதே.  


Advertisement