கமல் ஹாசனின் திரையை தொடாத திரைப்படம்,மருதநாயகம்


பிக்பாஸாக வலம் வந்து ஜென் z தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கலாம். மக்கள் நீதி மய்யம் தொடங்கி அரசியலில் நாங்களே மாற்று எனலாம். இலக்கியம் பேசலாம், முனைவர்களைக் கொண்டு டி கோட் செய்யுமளவுக்கு கவிதை எழுதலாம். ட்விட்டரிலும் டிரெண்டிங்கில் இருக்கலாம். ஆனால், இவை அனைத்தையும் கடந்து கமலிடம் ரசிகர்களுக்கு இருக்கும் கேள்வி, "எப்போது மருதநாயகம் திரைப்படம் வெளியாகும்?" என்பதாகத்தான் இருக்கும்.
திரையைத் தொடாத மருதநாயகம் திரைப்படத்திற்கு இந்த மாதத்துடன் வயது 22.
ஆம். 1997ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிதான் மருதநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின.
18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது.
எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இதன் காரணமாக சர்வதேச கவனம் அந்த திரைப்படத்தின் மீது குவிந்தது.
ராணியுடன், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது.
ராணிக்கு மட்டுமல்ல சாமானியனுக்குக் காட்டப்பட்ட காட்சியும் அது மட்டும்தான்.

என்ன ஆனது மருதநாயகம் திரைப்படத்திற்கு?

1997 நிலவரத்தின்படி, மருதநாயகம் திரைப்படத்தைத் தயாரிக்க ஐம்பது கோடிக்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். அப்போதைய காலகட்டத்தில் அந்த தொகையைத் திரட்ட முடியாத காரணத்தினால்தான் படம் கைவிடப்பட்டது.
இதனைக் கமலே பல்வேறு பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
மருதநாயகம்படத்தின் காப்புரிமைKAMAL
Image captionமருதநாயகம் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
பத்தாண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கமல், "டாலர்களில் பணம் வேண்டும். என்னுடைய பணத்தை நான் அதிகமாக இதில் முதலீடு செய்துவிட்டேன். அதிலிருந்து மீளத்தான் வெளியிடங்களில் அதிகம் நடிக்கத் தொடங்கினேன். என்னால் 'மேக்கிங் ஆஃப் மருதநாயகம்' காட்சிகளை மட்டும் வெளியிட்டு அந்த படத்திற்காகச் செலவு செய்த பணத்தை மீட்டுவிட முடியும். செலவு செய்துவிட்டோமே என்ற வருத்தம் எல்லாம் இல்லை. படத்தை முடிக்க முயற்சி செய்கிறேன். முடிக்க முடியவில்லை என்றால் இதுவரை எடுத்ததை மட்டும் வெளியிடுவேன்" என்றார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல. அந்த படம் குறித்த கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் மிகவும் நேர்மறையாகவே அந்தப் படம் குறித்துப் பேசி இருக்கிறார்.

'பணம் மட்டும் பிரச்சனை அல்ல'

மருதநாயகம் திரைப்படத்திற்குப் பணம் மட்டும் பிரச்சனை அல்ல. பணத்தைக் கடந்து பல்வேறு விஷயங்களும் இருக்கின்றன.
அதையும் கமலே தெரிவித்து இருக்கிறார்.
அவர், "மருதநாயகம் படம் எடுக்க பணம் மட்டும் பிரச்சனை அல்ல. சர்வதேச அளவில் விநியோக நெட்வொர்க் தேவை. இது தமிழ்ப் படம் மட்டுமல்ல, ஆங்கில படமும், பிரெஞ்ச் படமும்கூட" என்றார்.

வெளியான பாடல்

இரண்டு தசாப்தங்கள் கடந்தாலும் படம் குறித்த பேச்சு இன்னும் அதே அடர்த்தியுடன் தான் இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைத்து அப்படம் பேசப்பட்டிருக்கிறது.
மருதநாயகம்படத்தின் காப்புரிமைILAIYARAJA OFFCIAL
இந்த சூழலில் இளையராஜாவின் அதிகாரபூர்வ பக்கத்தில் மருதநாயகம் திரைப்படத்திலிருந்து, "பிறந்தது பனையூரு மண்ணு, மருதநாயகம் என்பது பேர்களில் ஒண்ணு" என்ற கமல் எழுதிய பாடல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.
அந்த பாடலில் மருதநாயகம் படத்திலிருந்து சில காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.
அந்த பாடலிலிருந்த, ”மதம் கொண்டு வந்தது சாதி, இன்றும் மனுஷன தொரத்துது மனு சொன்ன நீதி" என்ற வரிகள் படம் குறித்த வேறொரு புரிதலையும் உண்டாக்கியது. இளையராஜாதான் இசை அமைத்து அந்தப் பாடலை பாடி இருந்தார்.
2017ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், 'மருதநாயகம்' படத்தின் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டது.

மீண்டும் ராணியை சந்தித்த கமல்

2017ஆம் ஆண்டு, மருதநாயகம் திரைப்படம் தொடங்கப்பட்டு சரியாக 20 ஆண்டுகளுக்குப் பின் கமல் மீண்டும் ராணி எலிசபெத்தை சந்தித்தார்.
மருதநாயகம்: கமலின் திரையை தொடாத திரைப்படத்தின் 22வது ஆண்டுபடத்தின் காப்புரிமைFACEBOOK/IKAMALHAASAN
பிரிட்டன் - இந்தியா இடையே கலாசார பரிமாற்ற கொண்டாட்டமாக நடந்த அந்த நிகழ்வில் கலந்து கொள்ள கமல் ஹாசனை பிரதமர் நரேந்திர மோதி நியமனம் செய்திருந்தார்.
சந்தித்து வந்தபின் அதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்போது எழுதி இருந்த கமல், "ராணியின் இந்திய வருகையின் போது, எனது படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வருகை தந்தார். அவர் இதுநாள் வரை கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுவாகத்தான் இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

படம் வெளியாகுமா?

22 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த படத்தில் நடித்தவர்களின் தோற்றம் மாறி இருக்கும். இப்படியான சூழலில் அந்தப் படத்தைத் தொடர்ந்து எடுத்தால் நெருடலாக இருக்காதா? இதுதான் அனைவருக்கும் இருக்கும் கேள்வி. இதற்கான பதிலையும் கமலே தருகிறார்.
அவர், "படத்தின் முதல் 30 நிமிடங்களை எடுத்துவிட்டேன். அதுதான் கடினமான மற்றும் முக்கியமான பகுதி. அதன் பின்பு '12 ஆண்டுகளுக்குப் பிறகு' என்றுதான் காட்சிகள் விரிகின்றன. அதாவது 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் காட்சிகளைத்தான் எடுக்க வேண்டும். அதனால், எந்தப் பிரச்சனையும் இல்லை" என்கிறார்.
பிற செய்திகள்: