சமூக வலைத்தளங்களில் திடீரென கவனிப்பாரற்றுப் போன மைத்திரி (PHOTOS)


சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற பின்னணியில், நாட்டுத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் தற்போது சமூக வலைத்தளங்களிலேயே பிரபல்யமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பிரபல்யமடைந்தவர்களில் நம் நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒருவராவார்.
மைத்திரிபால சிறிசேன பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தார்.
இதன்படி, பேஸ்புக்கில் 1,147,697 பயன்பாட்டாளர்கள் அவரை லக் செய்துள்ளதுடன், 1,141,106 பயன்பாட்டாளர்கள் அவரை ஃபோலோ செய்கின்றனர்.
மேலும், டுவிட்டர் தளத்தில் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு இணைந்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டர் தளத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவை, 3,07,624 பேர் ஃபோலோ செய்கின்றனர்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருடத்திற்கு முன்பு (26.10.2018) திகதி முதல் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட ஒருவராக காணப்படுகின்றது.
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிகிழமை இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து வெளியேற்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அந்த பதவிக்கு நியமித்தார்.
அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என 52 நாட்கள் போராட்டத்தின் பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.
எனினும், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பதிவுகளை இட்டு வந்திருந்தனர்.
அதேபோன்று பல வெள்ளிகிழமைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டன.
அந்த நிலையில், சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறி, பிரபல்யமடைந்த மைத்திரிபால சிறிசேன தற்போது கவனிப்பாரற்று காணப்படுகின்றார்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பெரிதாக உச்சரிக்கப்படுவதில்லை.
சமூக வலைத்தளங்கள் மாத்திரமன்றி, இணையத்தள ஊடகங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் என எந்தவொரு ஊடகத்திலும் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட ஆதரவு விலகிக்கொள்ளப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.