உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண் இரண்டு நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர், டெல்லி மருத்துவமனையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, டெல்லியின் சப்தர்ஜங் பகுதியிலுள்ள மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு மருத்துவர் ஷலாப் குமார், "நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11:10 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, எங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். ஆனால், சிகிச்சை பலனின்றி 11:40 மணிக்கு அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறினார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டு தங்களது குடும்பம் பயப்படாது என்றும், நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் உயிரிழந்த பெண்ணின் சகோதரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், "எங்களது சகோதரியை பாலியல் வல்லுறவு செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று அவர் மேலும் கூறினார்.
SAMIRATMAJ MISHRA / BBC
கடந்த வியாழக்கிழமை, ஐந்து பேர் கொண்ட கும்பலால் எரிக்கப்பட்ட இவர், லக்னோவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை அன்று உத்தரப்பிரதேச நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு சென்ற வழியில் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட 23 வயதான பெண்ணொருவர் தீ வைத்து எரிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் இரண்டு நபர்களுக்கு எதிராக தொடுத்த வழக்கில் ஆஜராகுவதற்கு நீதிமன்றத்திற்கு இந்த பெண் சென்று கொண்டிருந்தார்.
சந்தேகத்தின் பேரில், இந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த பெண் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வழியில், ஐந்து ஆண்கள் தாக்கி அருகிலுள்ள வயலுக்கு இந்த பெண்ணை இழுத்து சென்று, தீ வைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
SAMIRATMAJ MISHRA / BBC
இன்னொரு பாலியல் வல்லுறவு வழக்கில் பெரிதும் பேசப்பட்ட உன்னாவ் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டிய பெண், கார் விபத்து ஒன்றில் கடும் காயமடைந்த பின்னர், கடந்த ஜூலை மாதம் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு விசாரணையை காவல்துறை தொடங்கியது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய தலைநகர் புது டெல்லியில் இளம் பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அடித்து குற்றுயிராக பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டு, சிகிச்சை பயனளிக்காமல் இறந்ததை தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறைகள் பெரும் கவனம் பெறுகின்றன.
ஆனால், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் குறைவதாக எந்த அறிகுறியும் இதுவரை தென்படவில்லை.
2017ம் ஆண்டு இந்தியாவில் 33 ஆயிரத்து 658 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியதாக அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் 92 பாலியல் வல்லுறவுகள் சராசரியாக நடைபெறுவதை இந்த புள்ளிவிவரம் காட்டுகின்றது.


Post a Comment
Post a Comment