அக்கரைப்பற்றில் புகைப்படத் திருவிழா


எம்.ஏ.றமீஸ்
போட்டோ சிலோனிக்கா கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கிழக்கின் கிளிக்ஸ்” எனும் தொனிப் பொருளிலான இலவச புகைப்படக் கண்காட்சி, அக்கரைப்பற்று - பாறூக் சரிப்தீன் கலைக்கூடத்தில் சனிக்கிழமையும் (08) ஞாயிற்றுக்கிழமையும் (09) நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரபல புகைப்படக் கலைஞர்களினதும் சிலோனிக்கா கழக அங்கத்தவர்களினதும் புகைப்படங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் இருநூறு புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் தெரிவுசெய்யப்பட்ட நாற்பதுக்கும் அதிகமான புகைப்படக் கலைஞர்களதும் சுமார் பதினொரு சிலோனிக்கா கழக உறுப்பினர்களுடையதுமான பல்வேறுபட்ட தத்ரூப புகைப்படங்கள் இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ளன.
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ள இப்புகைப்படக் கண்காட்சியின்போது, தெரிவுசெய்யப்படும் புகைப்படக் கலைஞர்களைப் பாராட்டிக் கௌரவித்து பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இப்புகைப்படக் கண்காட்சிக்கென, கிழக்கு மாகாணத்தின் மூதூர் பிரதேசம் முதல் பொத்துவில் பிரதேசம் வரையில் உள்ள புகைப்படக் கலைஞர்களின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.வெயசங்கர் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம்.ரின்சான் உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்