புத்தளம் – மன்னார் பிரதான வீதிக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு


புத்தளம் – மன்னார் பிரதான வீதி மறு அறிவித்தல் வரும்வரை மூடப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வண்ணாத்திவில்லு பழைய எலுவான்குளம் பகுதியில் உள்ள சம்பாத்துப் பாலத்தின் கீழ் திடீரென நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளதால், பாலத்தின் ஒரு பகுதியில் கலா ஓயாவில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமித்து வைத்த நிலையில், இந்த பாலத்தில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சேமித்து வைக்கப்பட்ட நீர் வெளியேறி வருவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இதனால், எலுவான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், விவசாய நிலங்களுக்கு நீரை அனுப்புதலில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு எலுவான்குளம் சப்பாத்துப் பாலத்தின் கீழ் நீர்க் கசிவு ஏற்பட்டுள்ளதால் குறித்த பாலத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
இதனால், புத்தளம் – மன்னார் பாதை உடனான சகல போக்குவரத்துக்களும் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பாலத்திற்கு கீழ் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய வண்ணாத்திவில்லு பிரதேச செயலக அதிகாரிகள், இராணுவம், கடற்படை மற்றும் விவசாயிகள் ஆகியோரின் ஒத்துழைப்புக்களுடன் புத்தளம் பிராந்திய நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.