கொரோனோ வைரஸ் கொள்ளை நோயாகப் பரவி வரும் சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் இந்த நோய்க்கு திங்கள்கிழமை ஒரே நாளில் 103 பேர் பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்து சீனாவில் இந்த நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை 1,011 என்னும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஹுபேய் மாகாண சுகாதார ஆணையம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதே நேரம், புதிதாக நோய்த் தொற்றியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து மட்டுப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை புதிதாக 2,618 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், திங்கள்கிழமை 2,097 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. இது முந்தைய நாளைவிட சுமார் 20 சதவீதம் குறைவு ஆகும்.
கொரோனா மரணங்களில் மூன்றில் இரண்டு மடங்கு, இந்த நோய்ப் பரவலின் மையப் புள்ளியாக உள்ள ஹுபேய் மாகாணத்தில் நிகழ்ந்துள்ளன.
EPA
நோய் தாக்கியவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 சதவீதம் ஆகும்.
இதனிடையே கொள்ளை நோய்களைக் கையாள்வதில் அனுபவம் மிக்க உலக சுகாதார நிறுவனத்தின் அதி சிறப்பு வல்லுநர்கள் குழு ஒன்று சீனா சென்று சேர்ந்தது.
இதுவரை சீனாவில் 42,200 பேருக்கு மேல் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2002-03 ஆண்டுகளில் சீனாவைத் தாக்கிய சார்ஸ் நோய் பரவலுக்கு பிறகு சீனா எதிர்கொள்ளும் மிகப் பெரிய பொது சுகாதார சிக்கல் இது.
- கொரோனா வைரஸ்: களத்தில் இறங்கிய சீன அதிபர் ஷி ஜின்பிங் - மருத்துவமனை சென்று ஆய்வு
- பிப்ரவரி 24ஆம் தேதி இந்தியா வருகிறார் டொனால்டு டிரம்ப்
மிக எளிதாகப் பரவும் கொரோனா வைரஸ் சீனாவைப் புரட்டிப் போட்டு வருகிறது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்கூட இந்த நோய்த் தொற்றில் தப்பவில்லை. மருத்துவப் பணியாளர்கள் உடல் முழுவதையும் மூடும் வகையில் பாதுகாப்பு ஆடைகளை அணிந்தபடியே பணியாற்றுகின்றனர். நோய்த் தொற்றும் மரணமும் ஒருபுறம் என்றால் அது தொடர்பான அச்சம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது.
இந்நிலையில் மிக அரிய நிகழ்வாக, சீன அதிபர் ஷி ஜின்பிங் கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு முகக் கவசத்துடன் சென்று நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அங்கு தனக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதையும் அவர் பரிசோதித்துக் கொண்டார்.
கொரோனா வைரசுக்கு எதிராகப் போராட மேலும் அதிக உறுதியான நடவடிக்கைகள் தேவை என்று அப்போது அவர் வலியுறுத்தினார்.
கொரோனா வைரசின் தீவிரத்தை குறைத்துக் காட்டியதாகவும், ஆரம்பத்தில் அதனை ரகசியமாக வைக்க முயன்றதாகவும் சீனாவின் தலைமை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஆனால், இந்த வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சீனா எடுத்த முயற்சிகளை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. குறிப்பாக, நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட பெரிய அளவிலான நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன.
உலகின் பிறபகுதிகளில்...
GETTY IMAGES
சீனாவுக்கு வெளியே, பிரிட்டனில் திங்கள்கிழமை மேலும் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தமாக அந்த நாட்டில் 8 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. தீவிர, கட்டாய அச்சுறுத்தல் இருப்பதாக பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.
இதனிடையே, ஜப்பான் துறைமுகத்தில் நிற்கும் 'டைமன்ட் பிரின்சஸ்' கப்பலில் மேலும் 65 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 3,700 பயணிகள் உள்ள அந்த சொகுசு கப்பலில் இதுவரை 135 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment