சமூக ஊடக நிறுவனங்கள் கட்டுக்குள்


சமூக ஊடக இணையதளங்களுக்கு இருக்கும் சில சட்டப்பூர்வ பாதுகாப்புகளை நீக்கும் நோக்கத்தை கொண்ட செயலாக்க ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது தளத்தில் பதியப்படும் உள்ளடக்கங்களை மேற்பார்வை செய்யும் விதத்திற்காக அவற்றின் மீது சட்டரீதியிலான நடவடிக்கையை அரசு எடுப்பதற்கு இது வழிவகை செய்கிறது.

இந்த உத்தரவில் கையெழுத்திடும் போது சமூக ஊடக தளங்களுக்கு "சரிபார்க்கப்படாத அதிகாரம்" இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

எனினும், இந்த செயலாக்க ஆணையே சட்டரீதியிலான சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடக இணையத்தளங்களுக்கான பாதுகாப்புகள் குறித்த தற்போதைய சட்டரீதியிலான புரிதலை மாற்றும் பணியில் அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது நீதி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பழைமைவாத கருத்துகளை கட்டுப்படுத்துவது அல்லது தணிக்கை செய்வதாக சமூக ஊடக இணையதள நிறுவனங்களை டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

கடந்த புதன்கிழமையன்று, தனது இரண்டு ட்வீட்டுகளுக்கு உண்மை சரிபார்ப்பு இணைப்புகளைச் சேர்த்த ட்விட்டர் நிறுவனத்தின் மீது தேர்தல் தலையீடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை டிரம்ப் முன்வைத்தார்.

கொரோனா வைரஸ் அமெரிக்காவில் இருந்து பரவத் தொடங்கியதாக ட்விட்டரில் பதிவிட்ட சீன அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவரின் இரண்டு பதிவுகளில் “கோவிட்-19 தொடர்பான உண்மைகளை தெரிந்துகொள்ள” என்ற இணைப்பை சேர்த்ததாக நேற்று ட்விட்டர் தெரிவித்தது.