நுகர்வோர் விசனம்


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டத்தில்      ஆறு  குளம் ஆகியவற்றில் குறைந்தளவு   மீன் இனங்கள்  பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

 சம்மாந்துறை, கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி பாலம் கிட்டங்கி பாலத்திற்கருகே   சிறிதளவாக பிடிக்கப்படும்  சிறு மீன் முதல் பெரிய மீன்கள் என்றும் இல்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.குறித்த மீன்கள் யாவும் எறிதூண்டல்,  அத்தாங்கு மற்றும் எறி வலை மூலம் பிடிக்கின்றதுடன் மீன்களின் விலையேற்றத்திற்கு காரணம் சட்டவிரோத இழுவை வலை தங்கூசி வலை பயன்பாடு என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த வலைப்பாவனை காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் நீர்வாழ் தாவரங்கள் அழிவடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.மழைகாலங்களில் எதிர்நோக்கும் வெள்ள நிலையை அகற்றுவதற்காக தோண்டப்படும் முகத்துவாரம் காரணமாக நன்னீருடன் உவர் நீர் கலப்பதன் காரணமாகவும் மீன்பிடி குறைவடைந்துள்ளது.இவ்வாறு சிறு அளவில்  பிடிக்கப்படும் மீன்களை  சமையலுக்காக அவ்விடத்தில் மீனவர்களால் விற்கப்படுவதுடன்  மக்கள் விலை அதிகரிப்பினால்  கொள்வனவு செய்யாமல் திரும்பி செல்வதை அவதானிக்க முடிகிறது.

குறித்த   நன்னீர் மீன்  பிடியானது தற்போது    கிட்டங்கி ஆறு கல்லாறு கோட்டைக்கல்லாறு ஆறு மருதமுனை கரச்சைக்குளம் போன்றவற்றில் அதிகளவாக பிடிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இதில்  கோல்டன் செப்பலி கணையான்  கொய் கொடுவா கெண்டை விரால் சுங்கான் விலாங்கு   போன்ற   மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக மீன்பிடி மேற்கொள்ளாமையும் ஆறுகள் வற்றி வறண்டு வருவதனால் மீன்பிடிமானம் குறைவடைந்துள்ளமையும் மீன்களின் விலையேற்றத்திற்கு காரணமாகும் என மீனவர் ஒருவர் குறிப்பிட்டார்.