பாகிஸ்தான் பயணிகள் விமானம் விபத்து


பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது.

பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது.

மீட்புப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் ரம்ஜான் விடுமுறையின் முதல் நாளான இன்று பலர் தங்கள் குடும்பங்களை காண பயணம் மேற்கொள்ளுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை.

பாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.