அழியும் அபாயத்தில் சுமார் 10 லட்சம் உயிரினங்கள்


உலகளவில் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைவரும் ஒன்றிணைவது போல, இயற்கை வளங்களை பாதுகாக்கும் கொள்கைக்காகவும் ஒன்றிணையும் தேவை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

உலகில் சுமார் 10 லட்சம் இனங்கள் முழுமையாக அழியும் அபாயத்தில் இருப்பதாக கடந்த ஆண்டு வெளிவந்த ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.

இயற்கை மற்றும் மனிதர்களுக்கு இடையேயான சமநிலையின் முக்கியத்துவத்தை கொரோனா வைரஸ் தொற்று உணர்த்தி இருக்கிறது. வன விலங்குகளை வேட்டையாடுவது, வர்த்தகம் செய்வது போன்ற மனித செயல்பாடுகளால், புதிய தொற்று நோய்கள் பரவும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.

இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற இலக்கை அடைவது என்பது, ''மனிதர்கள் மற்றும் இந்த பூமியில் வாழும் பிற உயிர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே'' ஆகும் என்கிறார் லண்டனை சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜியா மேஸ்.

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உலகளவில் பரவி வரும் பெருந்தொற்று காரணமாக இயற்கை வளங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

ஏற்கனவே மனிதர்களால் 500கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பல விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. தற்போது உலகளவில் ஆறாம் கட்டமாக இன அழிப்பு நடைபெற துவங்கிவிட்டதற்கான ஆதாரம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது பல வகையான செடிகள், விலங்குகள், கடல் மற்றும் நிலத்தில் வாழும் பூஞ்சைகளுக்கும் பொருந்தும்.

பல்லுயிர்களை பாதுகாக்க 2020ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.