வாழ்வாதாரத்தை இழந்ததால், மரணித்த புகைப்பட கலைஞர்


கொரோனா ஊரடங்கு தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேல் கடந்த நிலையில் தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்குத் தளர்வுகள் கொடுக்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் செயல்படத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் திருமணங்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை விமர்சையாக நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவற்றை மட்டுமே சார்ந்து தொழில் செய்து கொண்டிருக்கும் புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் புகைப்படம் வீடியோ எடுப்பவர்கள், எடிட்டிங், டிசைனர் மற்றும் ஆல்பம் தயாரிப்பவர்கள் என இந்த தொழிலைச் சார்ந்து சுமார் ஆறு லட்சம் குடும்பத்தினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த ஊரடங்கில் எந்த நிகழ்ச்சிகளும் இன்றி, வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்த்த புகைப்படக் கலைஞர் ராஜா, சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகத் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்குப் புகைப்பட எடுக்கும் தொழிலைச் செய்து வருகிறார். இவர் கும்பகோணத்தில் சொந்தமாக ஸ்டூடியோ வைத்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கத்தால், வேலையின்றி வறுமை மற்றும் கடன் சுமையில் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார்.

கொரோனா ஊரடங்கு - வாழ்வாதாரத்தை இழந்து கடன் சுமையில் உயிரிழந்த புகைப்பட கலைஞர்

இது குறித்து அவருடைய மனைவி விஜயலட்சுமி கூறுகையில், " இரண்டு மாதங்களாகச் சுத்தமாக வேலையே இல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இருந்தபோதிலும், எங்களிடம் இருப்பதை வைத்துச் சமாளித்துக் கொண்டிருந்தோம். முன்னதாக, அவரது தொழில் காரணமாக கேமரா உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காகத் தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தார் இந்த கொரோனா ஊடரங்கில் வங்கிக் கடன் செலுத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஓரளவு நிம்மதியாக இருந்தோம். இதையடுத்து, மே மாதம் முடிந்துவிட்டால் கடன் தொகை, பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவுகளுக்குத் தேவையான பணத்தை வேலையில்லாமல் எப்படி ஏற்பாடு செய்வதென எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.'' என்கிறார்.

நாள் முழுவதும் அவர் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்துக் கொண்டு, ஊரடங்கு மேலும் எப்படி இருக்கும், வாங்கி கடன் குறித்து அறிவிப்பு ஏதாவது வருமா, நம்மைப் போன்று பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாக அரசு எதாவது உதவி செய்வார்களா என்று செய்தியைப் பார்த்துக் கொண்டே இருந்ததாகக் கூறி வருத்தப்பட்டார் விஜயலட்சுமி.

"இந்த சூழலில், கடந்த திங்கள்கிழமை வழக்கம்போல பதற்றத்துடன் இருந்தார். என்னை வெளியே செல்லலாம் என்று அழைத்தார். நானும் அதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு முடியாமல் தவித்தார். உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.ஆனால், மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். குடும்ப செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, கடன், வேலையின்மை ஆகியவற்றை நினைத்தே மன அழுத்தத்தில் அவர் இறந்தார்" என கண்ணீர் மல்க கூறினார் விஜயலட்சுமி.

கொரோனா ஊரடங்கு - வாழ்வாதாரத்தை இழந்து கடன் சுமையால் உயிரிழந்த புகைபட கலைஞர்

இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுவாகவே அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிகமாகப் பாதிக்கப்பட்டது எங்களைப் போன்ற புகைப்படக் கலைஞர்கள் என்கிறார் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க செயலாளர் கபாலீஸ்வரன்.

"எங்களுடைய வாழ்வாதாரம் அனைத்துமே திருமண சுப நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்பட வேலையை மட்டுமே நம்பி இருக்கிறது. ஆண்டுதோறும் அதிகபட்சமாக 56 முகூர்த்தங்கள் வருகின்றன. இதில் பங்குனி முதல் ஆவணி மாதங்களில் திருமணம், சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் விழாக்கள் அதிகம் வரும். ஆனால், கொரோனா பிரச்சனைகள் வந்துவிட்டதால், பெரும்பாலான முகூர்த்தங்கள் இந்த ஊரடங்கிலே போய்விட்டது. ஜூலையில் ஆடி மாதம் தொடங்கிய பிறகு எங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் இருக்காது. அதைத் தொடர்ந்து வரும் புரட்டாசி மற்றும் மார்கழி வரை இதே நிலைதான் நீடிக்கும்," எனத் தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கு - வாழ்வாதாரத்தை இழந்து கடன் சுமையால் உயிரிழந்த புகைபட கலைஞர்

"ஊரடங்கு காரணமாகக் கடனை திருப்பி செலுத்த மத்திய நிதியமைச்சகம் கால அவகாசம் கொடுத்துள்ளது. ஆனால், அரசு உத்தரவை யாரும் பின்பற்றுவதில்லை. அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை," என்றார் கபாலீஸ்வரன்

"அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய மாத வருமானம் வந்து விடுகிறது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓரளவு சம்பளம் வந்துவிடும். ஆனால், சுய தொழிலை நம்பி வாழும் எங்களைப் போன்றவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

திருமண மண்டபங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. 500 பேர் வைத்துச் செய்ய வேண்டிய திருமணத்தை தற்போது 20 பேரை வைத்து அவரவர் வீடுகளில் செய்து கொள்கின்றனர். அப்படியே செய்தாலும் 20 நபர்களுக்குப் புகைப்படக் கலைஞர் எதற்கு என்று எண்ணி, செல்போனில் படம் பிடிக்கத் தொடங்கிவிட்டனர். இதுபோன்ற சூழலில் சுத்தமாக வாழ்வாதாரம் இழந்து நிற்பதாகக் கூறுகின்றனர் புகைப்படக் கலைஞர்கள். எனவே தமிழக அரசு உரிய கட்டுப்பாடுகளுடன் திருமண மண்டபங்களை விரைவில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.