கல்வி அதிகாரி MIM. நவாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதற்கான எதிர்ப்பும், ஆதவரவும்


ஊடக அறிக்கை

மட்டக்களப்பு தாழங்குடா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த சிரேஷ்ட கல்வி அதிகாரி MIM. நவாஸ் BSc. அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து ஒரு சில தமிழ் சகோதரர்கரால் 2020.06.06 அன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.

இலங்கையானது பல்லின சமூக, கலாசாரத்தை பின்பற்றக்கூடிய மக்கள் வாழும் ஒரு தேசமாகும். இந்த நாடானது, இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சொந்தமானதாகும். இந்த நாட்டினுடைய எப்பகுதியிலும் எந்த ஒரு குடிமகனும் குடியிருப்பதற்கும் வாழ்வதற்கும் தொழில் புரிவதற்கும் உரித்துடையவர் என்பதும், அது இந்த நாட்டு மக்களுடைய அடிப்படை உரிமையுமாகும்.

MIM. நவாஸ் Bsc. அவர்கள் இலங்கையின் கல்வியியலாளர் சேவையின் தரம் 1இல் சித்தியடைந்துள்ளதுடன், பல தசாப்தங்கள் அனுபவமுடையவரும் கடந்த 08 வருடங்களாக அட்டாளைச்சேனை கல்விற் கல்லூரியின் பீடாதிபதியாகவும் கடமையாற்றி சிரேஷ்ட சித்தியடைந்து தாழங்குடா கல்வியற் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று வந்து அங்கு பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி இவரது நியமனத்தை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகளை ஏற்படுத்திவரும் ஒரு சில தமிழ் சகோதரர்களால் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாம் அறிகிறோம்.

மேற்படி நியமனமானது கல்வி அமைச்சின் வழமையான சுற்று நிரூபத்தத்துக்கு அமைவாகவும் உயர் தகைமை அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளதே தவிர இதில் எவ்வித அரசியல் செல்வாக்குகளும் இல்லை.

இலங்கையில் மொத்தம் 13 கல்வியியற் கல்லூரிகள் உள்ளன. தர்கா நகர் கல்வியற் கல்லூரிக்கு தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அங்குள்ள முஸ்லிம்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று மஹரகம கல்வியற் கல்லூரிக்கு தமிழ் சமூகத்தை சேர்ந்த ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டபோது அங்குள்ள சிங்கள மக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

அதேபோன்று கொட்டகலை கல்வியற் கல்லூரிக்கு சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டபோது அங்குள்ள தமிழ் மக்கள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோன்று அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரிக்கு தாழங்குடாவில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற தமிழ் பீடாதிபதிக்கு அங்குள்ள முஸ்லிம் மக்கள் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்பது நாடறிந்த விடயம்.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தாழங்குடா கல்வியியற் கல்லூரிக்கு தகைமை அடிப்படையில் இடமாற்றம் பெற்று வந்த நவாஸ் அவர்களுக்கெதிராக அப்பிரதேச மக்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆச்சரியமாகவும் விசனத்துக்குரியதாகவும் இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்தில் இருந்து யார் உயர் பதவிகளுக்கு வந்தாலும் அதனைக் கங்கணம் கட்டிக்கொண்டு எதிர்ப்பவர்களாக ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் காணப்படுகின்றனர்.

மேற்படி சம்பவத்தின் பின்னணியில் செயற்படுபவர்கள் இவ்வாறு இரண்டு சமூகங்களை பிரித்து அரசியல் செய்யும் செயற்பாட்டின் மூலம் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் தமிழ் பிரதேசங்களுக்கு வியாபார நோக்கத்திற்கு வரக்கூடாது, அவர்கள் உயர்பதவிகளில் அமரக்கூடாது என்பது போன்ற இனவாத சிந்தனைகளை அப்பாவி தமிழ் மக்கள் மத்தியில் பரப்பி வந்தது மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் மாணவர் சமூகத்தையும் இனவாத அரசியலுக்கு பயன்படுத்த முற்படுகின்றனமையும், தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் இன முரண்பாடுகளை உருவாக்க முனைவதும் கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தொடருமானால் எமது நாடு இனவாதம் நிறைந்த மிக மோசமான அரசியல் சலாசாரத்துக்குள் தள்ளப்படுவதுடன், தமிழ் முஸ்லிம் இன நல்லுறவும் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.

எனவே, பொது மக்கள் இவ்விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் இவ்வாறான இனவாத சிந்தனை கொண்டவர்களுடைய விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும், அரசாங்கம் இவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.