மனுத் தாக்கல்


அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (13) இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் தம்மை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 9 ஆம் திகதி ஆணைக்குழுவை நியமித்து வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகிய அரச ஊழியர்களின் முறைப்பாடு தொடர்பில் விசாரிக்க மாத்திரமே ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் Avant Garde நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரச ஊழியர் அல்லாத ஒருவரினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை விசாரிக்க ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லையென்பதால் தமக்கு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல்களை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறும் மனுக்களை விசாரித்து இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை நிஷ்ஷங்க சேனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தி தடையுத்தரவு பிறக்குமாறு மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களான சந்திர ஜயதிலக்க, சந்திரா பெர்னாண்டோ உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

நிஷ்ஷங்க சேனாதிபதி அரசின் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார உள்ளிட்டோர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.