"புதிய வீரர்களுக்கு திறமை இருக்கின்றது,வெளிப்படுத்துவதற்கு சிறிதுகாலம் எடுக்கும்




(க.கிஷாந்தன்)

 

மலையகத்திலுள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

 

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் 23.07.2020 அன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வுபெற்று நேற்றுடன் 10 வருடங்கள் ஆகின்றன. மலையகத்தில் கிரிக்கெட் தொடர்பில் திறமையுள்ள வீரர்கள் இருக்கின்றனர். எனினும், உரிய இடத்துக்கு அவர்கள் வருவதற்கான அடிப்படைவசதிகள் இல்லை.

 

எமது பவுண்டேசனுக்கு உதவி செய்யும் ஒருவர் லிந்துலையில் இருக்கின்றார். லிந்துலை பகுதியில் மைதானமொன்று இருக்கின்றது, அதனை இலவசமாக தருகின்றேன், விளையாட்டு நிறுவனமொன்றை செய்யுமாறு அவர் கூறினார். அந்த கோரிக்கையை நானும் ஏற்பேன். எனவேஇ அத்திவாரத்தை போட்டுக்கொடுத்தால், விளையாட்டு வீரர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும்.

 

அடிப்படை வசதிகள் இன்மையாலேயே இங்குள்ளவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தமுடியாதுள்ளது.  கிரிக்கெட் என்பது ஓட்டப்போட்டிபோல் கிடையாது. மைதானத்தில் உரிய பயிற்சி பெறவேண்டும். ஆனால், அடிப்படைவசதிகள்கூட இங்கு இல்லை. அதனை ஏற்படுத்திக்கொடுப்பதே எமது நோக்கமாக இருக்கின்றது.

 

அதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியில் 10, 15 வருடங்கள் விளையாடிய வீரர்கள் ஓய்வுபெற்றுவிட்டனர். புதிய வீரர்களுக்கு திறமை இருக்கின்றது. அதனை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு சிறிது காலம் எடுக்கும். அதனை நாமும் வழங்கவேண்டும். ஒரே நாளில் சாம்மியனாக முடியாது. எனவே, எதிர்காலத்தில் திறமையை வெளிப்படுத்துவார்கள் என நம்புகின்றேன்.

 

சங்கா, மஹேல, வாஸ் போன்றவர்களின் இடங்களை நிரப்புவதற்கு காலம் எடுக்கும். அந்த இடத்தை நிரப்புவதற்கு வீரர்களும் முயற்சிக்கின்றனர்.

 

அரசியலும் போட்டிதான். எனவே, சிறப்பாக செயற்படக்கூடியவர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். அந்தவகையில் பிரபுவுக்கும் வழங்குவார்கள் என நினைக்கின்றேன். பிரபுவுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அதன்மூலமே அவர் பலமானவர் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வன்முறை அரசியலுக்கு இடமளிக்கமாட்டார்.

 

எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை. சமூகசேவையிலேயே ஆர்வம் காட்டிவருகின்றேன். அரசியல்வாதியாவதற்கு விருப்பவில்லை." - என்றார்.