”ராஜபக்ச அரசு இருக்கும் வரை, இனம் என்பது அகற்றப்படாது”


#ArunArokiyanathan.
இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்குபோதே   இந்த அரசாங்கம் இருக்கும் வரை ஒருபோதும் 'இனம்' என்பது நீக்கப்படாது என அமைச்சர் விமல் வீரவங்ஸ கூறி எழுந்த நம்பிக்கைளை முடிவிற்கு கொண்டுவந்துவிட்டார்இருப்பினும் நேற்று பதிவாளர் நாயகம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை அடுத்து நேற்றிரவு எழுத ஆரம்பித்து இன்று நண்பகல்  முடித்த பதிவை இங்கே பதிவிடுகின்றேன்.
---------------------------------x-----------------x-----------------x -----------------x --------------x-----------------


எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் விநியோகிக்கப்படவுள்ள புதிய டிஜிற்றல் பிறப்பு சாட்சிப்பத்திரத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள  உத்தேசித்திருப்பதாகக் கூறப்படும்  சில மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமானால் உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டியவை.

நாட்டில் பிறக்கும் அனைவரது பிறப்புப் சாட்சிப்பத்திரங்களிலும் அவர்களது இனம், மதம் போன்ற விடயங்கள் நீக்கப்பட்டு 'இலங்கையர்' என்ற பொது அடையாளமே இடம்பெறும் என பதிவாளர் நாயம் என். சீ. விதானகே நேற்று ஊடகங்களிடம் கூறியிருப்பது நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த ஒரு மாற்றம் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கின்றது.

அடையாள அட்டையில் இனம் என்ற குறிப்புக்காரணமாக கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது  அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பாதிப்பை உணர்ந்துகொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும்  இந்த அறிவிப்பு நிச்சயமாக ஒருவித நிம்மதியைக் கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

புதிய பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களில் ஒருவரது இனம் மதம் போன்ற விடயங்கள் இடம்பெறமாட்டாது அனைவரும் இலங்கையர் என்றே குறிப்பிடப்படுவர் என்ற செய்தி பிரசுரமாகியதை அடுத்து தனது டுவிட்டரில் கருத்துவெளியிட்டிருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன ' இறுதியாக நாட்டிற்கு நல்லதொரு விடயம் நாம் சரியான தடத்திலே பயணிக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இதேபோன்று பலரும் சாதகமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தனர். 
நன்றி அவந்த ஆட்டிகல - டெய்லி மிரர் 

விருதுகள் பல வென்ற கேலிச்சித்திரக் கலைஞர் அவந்த ஆட்டிகல இன்று இவ்விதமாக ஒற்றுமையின் பலத்தை வெளிக்காட்டும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டிருந்தார்.

இவற்றைப்பார்த்த போது எதிர்காலம் குறித்த பெரும்நம்பிக்கைகள் மக்களின் ஒரு சாரார் மத்தியில் எழுந்திருந்ததை உணர முடிந்தது. 

இன்னமும் சிலர் இந்தச் செய்தியை வரவேற்றிருந்த அதேவேளை  உண்மையில் இடம்பெறவேண்டியது என்ன என்பதையும் குறிப்பிட்டிருந்தனர்.  இந்த மாற்றம் என்பது வெறுமனே ஒப்பனை மாற்றமாக அன்றி நடைமுறையில் அர்த்தபூர்வமான மாற்றமாக அமையவேண்டும் எனத்தெரிவித்திருந்தனர். 

இப்படி ஒரு அறிவிப்பு வந்தபோது தேர்தல் நேரத்தில் இப்படி அறிவிப்பை  வெளியிடுவதேன் என்ற கேள்வி எழுந்தது.  ஒரு வேளை தேர்தலின் போது பெரும்பான்மையின மக்களிடையே கரிசனைக்குரிய விடயத்தை அறிவித்துவிட்டு பின்னர் அந்தக்கரிசனையைப் போக்கியவன் ஏற்பட இருந்த தவறை நிவர்த்தித்து விமோசனம் பெற்றுத்தந்த மீட்பர் என மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வாக்குவேட்டை நடத்தும் எண்ணம் இருந்திருக்மோ என்ற சந்தேகம் எழுந்தது. 


இலங்கையின் கடந்த காலத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறுமனே அரசியல்வாதிகளதும் அதிகாரிகளதும்  வார்த்தை  ஜாலத்தில் நாம் மயங்கிவிடக்கூடாது என்ற உண்மை புலனாகும். 2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது பொறுப்புக்கூறல் விடயத்தில் விசாரணைகளை முன்னெடுப்போம் என்றார்கள் .ஆனால் நடந்தது என்ன என்பதை யாவரும் அறிவர். அரசியல்கைதிகள் விடுதலை காணிகள் விடுவிப்பு போன்ற விடயங்களில் அளித்த வாக்குறுதிகளில்  ஒரு குறிப்பிட்ட அளவிற்கு செய்தது உண்மை என்றாலும் முழுமை பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஒரு பெயருக்கு ஒரு அலுவலகம் அமைத்தது உண்மை ஆனால் அதனால விளைந்த பயன் யாது என்றால்  இதுவரை ஏதும் இல்லை என்பதே உண்மையாகும்.

அரசியல் தீர்வு தொடர்பாக ஆட்சியாளர்கள் எத்தனை வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள் ஆனால் நடந்தது என்ன ? என்பது அனைவருக்கும் வெளிச்சம். 

அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பெரும் விடயங்கள் என்பதால் நாட்டுமக்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும்  அடையாள நடவடிக்கைளையேனும் எடுப்பார்களா என்றால் அதற்கு விடைதேட பல ஆண்டுகள் பின்னோக்கிப்பயணிக்க வேண்டியதில்லை. மைத்திரி-ரணில் அரசாங்கத்தில்  இலங்கையின் தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடமுடியும் எனக்கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு நடந்தது என்ன? கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற சுதந்திர தினத்தில் சிங்களமொழியில் மாத்திரமே அது பாடப்பட்டமை நினைவிருக்கும்.  தமிழ் மொழி பேசுவோரை இலங்கையர் என்று இந் த அரசாங்கம் ஏற்க மறுக்கின்றதா ? உள்வாங்க விரும்பவில்லையா ? போன்ற கேள்விகள் அப்போதே எழுப்பப்பட்டன. அரசின் நடவடிக்கையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் கறுப்பு சட்டை அணிந்து தமிழிலும் தேசிய கீதத்தைப் பாடியமை நினைவிருக்கின்றது. 

ஒரு அரசாங்கத்தினால் அடையாளத்திற்காக செய்யப்படுகின்ற விடயம் இன்னுமொரு அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் நீக்கப்படுகின்றதென்றால் ஆட்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் எத்தகைய நிலைப்பாட்டைக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகும் .

ஆட்சிகள் மாறினாலும் அனைத்து இனமக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் அர்த்தபூர்வமான உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்பும் செயற்பாடுகளே அவசியமாகும். 

பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் இலங்கையர் என்று இருப்பதாலே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதாலோ மாத்திரம் நல்லிணக்கத்தைக் நிலைநாட்டி ஒற்றுமையை வளர்க்க முடியாது. ஆனால் அவை அதனை நோக்கிய ஆரம்பத்திற்கான பலமான அடையாள நடவடிக்கைகளாக பார்க்கமுடியும். உண்மையாகவே நல்லிணக்கத்தையும் புரிதலையும் ஏற்படுத்தி இலங்கையர் என்ற அடையாளத்தை மக்களின் மனதில் கட்டியெழுப்புவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதற்கு முதலில் தேர்தல்காலங்களில் இனங்களுக்கு இடையே குரோதத்தை வளர்க்கும் பிரசாரங்களை முன்னெடுப்பதைத் தவிர்த்தல் போலிச்செய்திகளைப் பரப்புவதை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். 

அரசியல்யாப்பில் சிறுபான்மையினருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகளையே வழங்க மறுக்கும் அன்றேல் பிடுங்கும் அரசாங்கங்கள் எவ்வாறு அவர்களையும் இலங்கையராக உளமார அங்கீரிக்கும் என்பது கேள்விக்குரியது.