ராவணன்: "ஆதிகால விமானப் போக்குவரத்து" குறித்து ஆய்வு

பண்டைய கால இலங்கை மன்னனான ராவணன் தொடர்பிலான ஆய்வுகளை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ராவணன் தொடர்பான புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் ஆய்வுப் பொருட்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அரசாங்கம் பத்திரிகை விளம்பரமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சினால் இந்த பத்திரிகை விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை மன்னனான ராவணன் மற்றும் நாட்டின் விமானப் போக்குவரத்து வரலாறு குறித்து இலங்கை அரசாங்கம் ஆராய்ச்சிகளை நடத்த விரும்புவதாக அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

ராவணன் மற்றும் தற்போது இழக்கப்பட்டுள்ள வான் வழிப் பாதைகளின் பண்டைய ஆதிக்கம் குறித்து ஆய்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

  இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் விமான சேவைகள் அமைச்சின் உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு வினவியது.

  ராவணன் ஆதிகாலத்திலேயே விமானப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் மத்தியில் நம்பிக்கையொன்று உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

  அவ்வாறு ராவணன் விமானப் போக்குவரத்தை மேற்கொண்டிருந்தால், அவர் எவ்வாறான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார் என கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம் என அவர் கூறினார்.

  இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் பலர் ஆய்வுகளை நடத்தியுள்ள போதிலும், பாரிய ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

  இதுவே ராவணனின் விமான தொழில்நுட்பம் குறித்து பெரியளவில் நடத்தப்படும் ஆய்வு என அவர் தெரிவித்தார்.

  ராவணன் தொடர்பில் மக்களிடம் பல்வேறு தகவல்கள் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறான தகவல்களையே முதலில் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

  முதற்கட்டமாக தகவல்கள் திட்டப்பட்டு, அதனூடாக கிடைக்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக ஆய்வுகளை நடத்த தீர்மானித்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.  Advertisement