அன்று பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டவர் தற்போதைய சபாநாயகர்

 

#ArunArokiyaNaathan.

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, 1983ம் ஆண்டில் முதன் முறையாக ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ஹக்மன தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவே பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்திருந்தார்.

இளம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய உடன்படிக்கையை  பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.  13வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியிக்குள் இருந்தே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன உள்ளதுடன் மற்றையவர் கம்புறுப்பிட்டிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார விஜேகுணவர்த்தன ஆவார்.

சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத்தவறி கட்சியின் விதிமுறைகளை மீறியமைக்காக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன அவரை பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத் முதலி தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் அதிருப்தி குழுவுடன் இணைந்து ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் உருவாக்கத்தில் பங்களித்திருந்தார்.

மாகாண சபை முறைமை 13வது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்ட போது அதனை எதிர்த்த மஹிந்த யாப்பா அபேயவர்த்தன ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் தென் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார். 1993ல் தென் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவான அவர் 1994ம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்றிருந்தார்.

1994ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தென் மாகாண சபையின் முதலமைச்சராக இரண்டு தடவை பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேயவர்த்தன வெற்றிகரமான முதலமைச்சர்களில் ஒருவராக கருதப்படுகின்றமைக்கு  ஜேவிபி வன்முறை உட்பட பல காரணங்களால் ஐந்துவருடங்களுக்கு மேலாக இருண்டு நிலையில் கிடந்த பொருளாதாரத்தை சிறந்த உட்கட்டமைப்பு திட்டங்களை விருத்திசெய்ததன் மூலமாக கட்டியெழுப்பியமை முக்கிய காரணமாகும். 

பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 2001ல் மாகாண சபையில் இருந்து விலகி அவர் 2004ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து சுகாதார நலன்புரி பிரதி அமைச்சராக பதவிவகித்த அவர் பின்னர் கலாசார விவகார மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2010ம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அவர் விவசாயத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.2015ம் ஆண்டு பொதுத் தேர்தலை அடுத்து ஆரம்பத்தில் மைத்திரி சிறிசேன தரப்புடன் இருந்தபோது பாராளுமன்ற விவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட போதும் சில மாதங்களில் அவர் பதவியில் இருந்து விலகி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் எதிர் அணியில் இணைந்துகொண்டார்.

30 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பாடு அரசியலில் தன்னை ஈடுபடுத்தியுள்ள 75வயதுடைய மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, இம்முறை தேர்தலில் மாத்தறை மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுணவின் சார்பில் போட்டியிட்டு 80,595 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Advertisement