#பிரணாப் முகர்ஜி: அரசியல் உச்சங்களை தொட்டவர், "பிரதமர்" பதவியைத் தவிர

 


நவீன இந்தியாவில், இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி அளவுக்கு அரசியல் ஆளுமை கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களே. டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று மாலை காலமான பிரணாப் முகர்ஜியின் அளவுக்கு வெற்றியை ஈட்ட வேண்டும் என்பது, இளம் தலைவர்கள் அனைவருக்குமே விருப்ப லட்சியமாக இருக்கும்.


பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பிறகு திங்கள்கிழமை மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக, பரிசோதனையின் முடிவு தெரிவிக்கிறது. அறுவை சிகிச்சைக்கு முன்னதாக அவரே இதை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


ஐந்து தசாப்த காலமாக அரசியல் வாழ்க்கையில் ஏறத்தாழ அனைத்து உச்சங்களையுமே பிரணாப் தொட்டிருக்கிறார். 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் குடியரசு தலைவராக அவர் இருந்தார். எந்தவொரு குறிப்பிட்ட பிரிவிலும் பிரணாப் முகர்ஜியை சேர்ப்பது கடினம். அவர் அரசியல்வாதியாக மட்டுமின்றி, பொருளாதார நிபுணராகவும் இருந்தார்.


இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். ஆனால் அதற்கெல்லாம் முன்னதாக அவர் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் இருந்திருக்கிறார். இந்திய வங்கிகளின் பல குழுக்களிலும் பிரணாப் முகர்ஜி பங்கு வகித்துள்ளார். உலக வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். மக்களவை கட்சிக் குழு தலைவராகவும் பிரணாப் முகர்ஜி பணியாற்றியுள்ளார். அரசின் பல கமிட்டிகளில் தலைவராகவும் இருந்துள்ளார்.


பிரதமராக முடியவில்லை என்ற வருத்தம்


பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கைக் குறிப்பில் ஒரு பதவி மட்டுமே விடுபட்டுப் போயுள்ளது. அது நாட்டின் பிரதமர் பதவி. 1984 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் பிரதமர் பதவிக்கு அவருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டது.


இந்திரா காந்தியின் தலைமையில் அரசியலில் வளர்ந்து வந்த பிரணாப், பிரதமர் பதவிக்கான இயல்பான வாய்ப்பாக இருப்போம் என்று கருதினார். ஆனால் பாஜகவில் எல்.கே. அத்வானியை போல, இவராலும் அந்தப் பதவிக்கு வர முடியாமல் போய்விட்டது.


காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மற்றும் அவருடைய மகளுமான ஷர்மிஷ்தா முகர்ஜியுடன் பேசியதில், இந்தியாவின் பிரதமராக முடியவில்லை என்பதில் தன் தந்தைக்கு வருத்தம் இருந்ததாகத் தெரிவித்தார்.


கட்சியில் மூத்த தலைவராக இருந்த காரணத்தால் ஒருபோதும் இதை அவரால் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் குடியரசுத் தலைவராக 2012ல் தேர்வு செய்யப்பட்ட போது, இதுபற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்காது என அவர் இருந்துவிட்டார்.

இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பாஜக தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி


அவர் பிரதமர் பதவிக்கு வருவதில் காங்கிரஸ் கட்சியில் பல குழுக்களுக்கு ஆட்சேபம் எதுவும் இல்லை என்றாலும், காந்தி குடும்பத்தின் விசுவாசியாக இல்லை என்ற காரணத்துக்காக அவர் புறக்கணிக்கப்பட்டார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


கடந்த ஆண்டு பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதன் மூலம், காந்தி குடும்பத்திற்கு நெருக்கமாக இல்லாமல் போனதால், தனக்கான இடத்தை பிரணாப் பெற முடியாமல் போய்விட்டது என்று வெளிப்படுத்த பாஜக முயற்சி செய்தது.


அதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் முதன்மை விருந்தினராக பிரணாப் அழைக்கப்பட்டார். தன்னுடைய காங்கிரஸ் கட்சியில் தரப்படாத மரியாதையை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சார்பில் வழங்கப்பட்டதாக சிலர் கருதினர். அப்போது அவருடைய அந்த முடிவு குறித்து, அவருடைய மகள் ஷர்மிஷ்தா முகர்ஜியும் கேள்வி எழுப்பினார்.


ஆர்.எஸ்.எஸ் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய உரை


ஆர்.எஸ்.எஸ் களத்தில் இருந்து எந்த மாதிரியான விஷயங்களை முன்வைக்க வேண்டும் என்பதை அந்த மூத்த தலைவர் அறிந்திருந்தார். 2018 ஜூன் 7 ஆம் தேதி நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை மறக்க முடியாததாக உள்ளது.


தேசம், தேசியவாதம், தேசபக்தி என்ற சிந்தனை குறித்து பேசிய அவர், அது மாறுபட்ட களமாக இருந்தாலும், தன்னுடைய சிந்தனை மற்றும் சித்தாந்தத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று தெளிவுபடுத்தினார்.


இந்தியாவின் உண்மையான தேசியவாதம் எது என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார்.


``இந்தியாவின் தேசிய அடையாளம் ஒரு மொழி, ஒரு மதம் என்ற வரையறைக்கு உள்பட்டதல்ல. வசுதேவ குடும்பகம் என்ற உலகமே ஒரு குடும்பம் என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் நாம்'' என்று அவர் கூறினார்.


``இந்திய மக்கள் 122-க்கும் மேற்பட்ட மொழிகளை பேசுகின்றனர். 1600 மொழி பிரிவுகள் உள்ளன. இங்கு ஏழு பெரிய மதங்களைச் சேர்ந்தவர்கள், ஒரே அமைப்பு முறையில், ஒரே கொடி, ஒரே இந்திய அடையாளத்தின் கீழ் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறார்கள்'' என்று பிரணாப் கூறினார்.


பிரணாப் முகர்ஜிபட மூலாதாரம்,HINDUSTAN TIMES

``நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பன்முக சித்தாந்தத்தை நாம் அடக்குவதற்கு முயற்சிக்கக் கூடாது. பெரும்பான்மைத்துவம், பல மொழி பேசும் நிலை, சகிப்புத் தன்மை மற்றும் ஒன்றுபட்ட கலாச்சாரம் என்பவைதான் நமது நாட்டின் ஆன்மாவாக உள்ளன என்று, எனது 50 ஆண்டு கால பொது வாழ்வுக்குப் பிறகு நான் கூறுகிறேன்'' என்று பிரணாப் முகர்ஜி கூறினார்.


வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான் இந்தியாவின் உண்மையான அடையாளம் என்று குடியரசு முன்னாள் தலைவர் வலியுறுத்தினார். `


`வெறுப்பு மற்றும் சகிப்பின்மை ஆகியவை தேசத்தின் அடையாளத்துக்கு ஆபத்தானவையாக அமையும். அனைத்து வகையான பன்முகத்தன்மைகளுக்கும் இந்தியாவின் தேசியவாதத்தில் இடம் உண்டு என்று ஜவாஹர்லால் நேரு கூறியுள்ளார். அனைவரையும் உள்ளடக்கியதாக இந்திய தேசியம் உள்ளது. சாதி, மதம், இனம் அல்லது மொழி அடிப்படையில் இதில் எந்த பாரபட்சமும் கிடையாது'' என்றும் பிரணாப் பேசினார்.


அரசியல் வாழ்க்கையின் ஆரம்பம்


சாதாரண பின்னணியைக் கொண்ட 84 வயதான பிரணாப் முகர்ஜி, 1935 டிசம்பர் 11 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் மிராட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தை உள்ளூர் காங்கிரஸ் தலைவராகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் இருந்தார்.


கல்கத்தா பல்கலைக்கழகத்தில் (யூனிவர்சிட்டி ஆஃப் கல்கத்தா) வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டப் படிப்பில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.


பிறகு கல்லூரி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.


1969ல் 34 வயதை எட்டியபோது பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திரா காந்தியின் வழிகாட்டுதலில் அவருடைய அரசியல் பயணம் இருந்தது. அதன்பிறகு அவருடைய வளர்ச்சி வேகமானதாக இருந்தது.


Banner image reading 'more about coronavirus'

கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்

கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல

கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

Banner

ஆனால் 1984ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அப்போது பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, அமைச்சரவையில் இவருக்கு இடம் அளிக்கவில்லை.


இதுபற்றி தனது 'The Turbulent Years 1980-1996' புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார். ``அழைப்பு வரும் என்று நான் காத்திருந்தேன். அமைச்சரவையில் ராஜீவ் என்னை சேர்க்க மாட்டார் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. அதுபற்றி எந்த வதந்தியும் கூட என் காதுக்கு வரவில்லை. அமைச்சரவையில் என் பெயர் இல்லை என அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தேன். மிகுந்த கோபம் வந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை'' என்று பிரணாப் கூறியுள்ளார்.


கடினமான காலங்கள்


கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் பிரணாப் முகர்ஜி கடினமான காலத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இல்லஸ்டிரேட்டட் வீக்லி (Illustrated Weekly) இதழின் ஆசிரியர் பிரதீஷ் நந்திக்கு ஒரு பேட்டி அளித்தைதத் தொடர்ந்து அவர் மீது அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருந்தது பற்றியும் தன் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


``அவர் (ராஜீவ் காந்தி) அதில் தவறு செய்துவிட்டார். மற்றவர்கள் எனக்கு எதிராக அவரை தூண்டிவிட்டு, எனக்கு எதிரான எண்ணத்தை உருவாக்கிவிட்டார்கள். மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த நான் விட்டுவிட்டேன். அவர்களுடைய கருத்துகள் ஏற்கப்பட்டன. ஆனால் என் கருத்தை கேட்கவில்லை. எனது ஏமாற்றத்தை என்னாலும் கட்டுப்படுத்த முடியவில்லை'' என்று புத்தகத்தில் பிரணாப் கூறியுள்ளார்.


உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்

 

1988ல் அவர் காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப வந்தாலும், 1991 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவி ஏற்ற போதுதான் அவருடைய அதிர்ஷ்டம் மாறியது.


2004-ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. பிரதமராக பதவியேற்க சோனியா விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. எனவே, பிரதமர் பதவிக்கு முகர்ஜியின் பெயர் குறித்து பேசப்பட்டது.


The Coalition Years 1995-2012 என்ற தன்னுடைய புத்தகத்தில் இதுபற்றி அவர் எழுதியுள்ளார். ``சோனியா காந்தி பிரதமராக மறுத்துவிட்ட நிலையில், நான் தான் பிரதமர் பதவிக்கானவராக இருப்பேன் என்று பரலவான எதிர்பார்ப்பு இருந்தது'' என்று புத்தகத்தில் பிரணாப் குறிப்பிட்டுள்ளார்.


பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை என்றாலும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் என்ற பொறுப்புகளில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவராக இருந்தார்.


கட்சிக்கு தொடர்ந்து அவர் பணியாற்றினார். `மிஸ்டர் நம்பிக்கைக்கு உரியவர்' என்ற தனக்கான நற்பெயரையும் அவர் நிலைநிறுத்திக் கொண்டார். இதை அவரே தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தியாவின் குடியரசுத் தலைவரான பிறகு, அந்தப் பொறுப்பை முனைப்புடன் எடுத்துக் கொண்டார். 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மோடி அரசுடன் அவர் நல்லுறவைப் பராமரித்தார்.


தன் வாழ்வின் கடைசி தருணம் வரையில், உண்மையான ஜனநாயகவாதியாக பிரணாப் முகர்ஜி இருந்தார். சித்தாங்களைப் பற்றிய கவலை இல்லாமல், கணநேரத்தில் கட்சி மாறிவிடக் கூடிய தலைவர்கள் மிகுந்துவிட்ட இந்தக் காலத்தில், குடியரசு முன்னாள் தலைவர் ஒரு சகாப்தத்தையும், தனது தனிப்பட்ட அடையாளத்தையும் விட்டுச் சென்றிருக்கிறார்.Advertisement