நீதிபதிகள் அதிருப்தி



இந்திய நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளுக்கான சேவை, சரக்குகளை கையாளும் சேவை போன்றவற்றுக்கான ஏலத்தில் போட்டியிடும் நிறுவனங்களுக்கான தகுதியை மாற்றியிருக்கும் மத்திய அரசின் செயல், அதிருப்தி அளிப்பதாகவும். உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் பேச்சு போலித்தனமாக இருக்கிறது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் சரக்குகள் கையாளுதல், விமானங்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட சேவைகளுக்கான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் ஏலம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான தகுதியை சமீபத்தில் இந்திய விமான ஆணையம் மாற்றி அமைத்து, ஆண்டுக்கு ரூ.35 கோடி வருமானம் கொண்ட நிறுவனங்கள்தான் பங்கேற்க முடியும் என புதிய விதியைக் கொண்டுவந்தது.


இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், உங்கள் அரசியல் தலைமைப் பதவியில் உள்ளவர்கள் மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா பற்றிப் பேசுகிறார்கள். உள்நாட்டு தொழில்களை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், உங்களின் செயல்பாடு அவர்களின் வார்த்தைக்குப் பொருத்தமாக இல்லையே. நீங்கள் முழுமையாக போலித்தனமாக இருக்கிறீர்கள்.

இது போன்று சிறிய நிறுவனங்களை வெளியேற்றும் விதத்தில் நடந்துகொண்டால், எதற்காக மேக் இன் இந்தியா பற்றி உங்கள் அரசியல் தலைவர்கள் பேசுகிறார்கள். இதுபோன்று நடப்பது அவர்களுக்கு தெரியுமா?

மத்திய அரசும், இந்திய விமான ஆணையமும் சிறு நிறுவனங்களை ஏலத்திலிருந்து வெளியேற்ற விரும்பினால், வெளிப்படையாக அவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். இதுபோன்று போலித்தனமாகப் பேசாதீர்கள். இதுதான் உங்கள் கொள்கையாக இருந்தால், துணிச்சலாகச் சொல்லுங்கள். இதுகுறித்து மத்திய அரசு, இந்திய விமான ஆணையம் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.