கோரிக்கை



 (க.கிஷாந்தன்)

 

ரயில் மோதுண்டு உயிர் தேசங்கள் ஏற்படும் அபாயமிருப்பதால் அதிலிருந்து தங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அட்டன் பகுதி பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

அட்டன் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் பாதுகாப்பு கடவைகள் இருக்கின்ற போதிலும் அவற்றை செயற்படுத்துவதற்கு ஊழியர்கள் இன்மையாலும், உரிய நேரத்தில் எச்சரிக்கை சமிக்ஞைகள் விடுக்கப்படாததாலுமே இவ்வாறானெதொரு அபாயநிலை ஏற்பட்டுள்ளது என்று நாளாந்தம் ரயில் வீதியை கடந்து பயணிப்பவர்கள் கருத்து வெளியிட்டனர்.

 

ரயில் பாதையில் ஏற்படும் விபத்துகளை தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் இப்பகுதியில் இருபுறத்திலும் பாதுகாப்பு கடவைகள் அமைக்கப்பட்டு, ரயில்வரும் வேளைகளில் அவற்றை உரியவகையில் செயற்படுத்துவதற்கும், எச்சரிக்கை சமிக்ஞைகளை விடுப்பதற்கும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான கொடுப்பனவு அட்டன் பொலிஸாரால் வழங்கப்பட்டு வந்தது.

 

நேர அட்டவணையின் பிரகாரம் மூவர் சேவையில் ஈடுபட்டு வந்தனர், குறைந்தபட்சம் இருவராவது சுழற்சி முறையில் பாதுகாப்பு கடவை பகுதியில் கடமை புரிந்தனர். எனினும், கடந்த இரு வாரங்களாக ஒருவர் மாத்திரமே பணி புரிந்து வருகிறார் எனவும், காலை 6 மணிக்கு வந்து விட்டு பிற்பகல் 2 மணிக்கு அவரும் சென்று விடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

பாடசாலைவிட்டதும் மாணவர்களும், ஆசிரியர்களும், சாரதிகளும் அச்சத்துக்கு மத்தியிலேயே வீதியை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக பிற்பகல் 2.35 இல் இருந்து மறுநாள் அதிகாலை 5.10 வரை அவ்வீதியை ஊடறுத்து 8 இற்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. எனினும், கடவையை மூடி பாதுகாப்பு வழங்குவதற்கு ஊழியர்கள் இன்மையால் இரவே நேரங்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

“ பகல் வேளையாக இருந்தால் கூட வீதியில் ஆள் நடமாட்டம் இருக்கும், சத்தம்போட்டாவது எச்சரிக்கை விடுத்துவிடலாம், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்குதான் சிக்கல்” எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

இது தொடர்பில் அட்டன் பொலிஸ் தலையகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, ஒரு ஊழியர் மட்டும் இருப்பதாலேயே சிக்கல் நிலை உருவாகியுள்ளது. அது குறித்து அட்டன் ரயில் நிலைய அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளம் வழங்கப்படுவதால் எவரும் நீண்டகாலம் இருப்பதில்லை. இருப்பினும் கூடியவிரைவில் ஒருவரை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். “ – என்று அறிவிக்கப்பட்டது.