ஐக்கிய அரபு அமீரகம்,கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல்


 


ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றுக்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மனிதர்கள் உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.

இந்த தடுப்பூசி, கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் என தேசிய பேரிடர் மேலாண்மை முகமை ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் தரவுகளின்படி அமீரகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை 80, 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 399 பேர் பலியாகி உள்ளனர்.

31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு பரிசோதனை செய்த பிறகு தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த முகமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு சிறிய அளவில் பக்கவிளைவுகள் இருந்தன. ஆனால், பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இல்லை என அந்த முகமை தெரிவித்துள்ளது. ஆனால், என்ன பக்கவிளைவுகள் என குறிப்பிடப்படவில்லை