அட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு


 




(க.கிஷாந்தன்)

 

அட்டன் நகரத்தை மலையகத்தின் தலைநகராக்குவதே எமது இலக்கு. அதற்கேற்ற வகையில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட்டு அதன் ஊடாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே எமது திட்டங்கள் அமையும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

 

அட்டன் நகரிலுள்ள வர்த்தகர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இடையிலான சந்திப்பு இன்று (17.09.2020) அட்டன் நகரசபையில் நடைபெற்றது. நகரசபை தவிசாளரும் இதில் பங்கேற்றிருந்தார்.

 

அட்டன்- டிக்கோயா நகரத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள், பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கானதீர்வு திட்டம் ஆகியன தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

இங்கு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் கூறியதாவது,

 

" அட்டன் நகரில் குப்பைப்பிரச்சினையென்பது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு தற்காலிக தீர்வு கிடைத்திருந்தாலும் நிரந்தர தீர்வே எமது எதிர்ப்பார்ப்பாகும். அட்டன் பிளான்டேசனுடன் கலந்துரையாடினோம். குப்பைகளை கொட்டுவதற்கு 2 ஏக்கர் வழங்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. உரிய இயந்திரங்கள் பொறுத்தப்பட்டு கழிவு முகாமைத்துவம் செய்யப்படும். உரம் தயாரிப்புடம் இடம்பெறும்.அதன்மூலமும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கும்.

 

தன்னிச்சையான முறையில் முடிவுகளை எடுப்பதைவிட மக்களுடனும், நகரத்திலுள்ள வர்த்தகர்களுடனும் கலந்துரையாடி திட்டங்களை வகுப்பதே சிறப்பாக இருக்கும். அப்போதுதான் உங்களுக்கும் திருப்தி, எங்களுக்கும் திருப்தி.

 

அட்டன் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை உள்ளது, வீதியை பெரிதாக்கினால்கூட அது தீராது, எனவே, உரிய ஏற்பாடுகளை செய்தபின்னர் பிரிதொரு இடத்துக்கு பஸ்தரிப்பிடத்தையும், டிப்போவையும் கொண்டுசெல்லவேண்டும். இதன்மூலம் வர்த்தகம் பாதிக்கப்படும் என சிலர் நினைக்கலாம் அவ்வாறு இல்லைஇஎல்லாதவி ஏற்பாடுகளையும் செய்த பின்னரே திட்டம் செயற்படுத்தப்படும்.

 

அட்டன் நகரை மலையகத்தின் தலைநகராக்குவதே இலக்கு. அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அட்டனிலிருந்து, சிவனொலிபாதமலைவரை சிறந்த சுற்றுலா வாய்ப்பு இருக்கின்றது. அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, எமது இளைஞர், யுவதிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயற்படுத்தப்படும். கடந்தகாலங்களில் தற்காலிக அபிவிருத்தி பற்றியே சிந்திக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்ப்பார்ப்பது பொருளாதார அபிவிருத்தி. அது முறையாக நடக்கும்." -என்றார்.