நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து


 


(க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராக நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் இன்று (16) சபையில் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பினை தெரிவித்து சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

பிரதேச சபைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றினை கடந்த காலங்களில் தனி நபர் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் மூன்று வருடத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் முறையாக பணத்தை செலுத்தாமலும் குத்தகை காலம் முடிந்தும் அதனை திருப்பி சபைக்கு வழங்காது இருந்தார்.

2018 ஆம் ஆண்டு பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் மற்றும் உறுப்பினர்கள் ஊடாக நானுஓயா பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நுவரெலியா பிரதேச சபையின் காரியாலய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர் . அதனைத் தொடர்ந்து இக்கட்டிடம் தனக்கு சொந்தம் என குறித்த நபர் நுவரெலிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் தொடர்ந்து வந்த நிலையில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனை அடுத்து இக்கட்டிடம் சீர்செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டு நுவரெலியா பிரதேச சபையின் காரியாலயமாக 2018 ஆம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி கௌரவத் தலைவர் வேலு யோகராஜ் மற்றும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமாகிய அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் அழைப்பின் பேரில் மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி சட்டத்தரணி மாண்புமிகு மைத்திரி குணரத்ன அவர்களின் பங்கேற்புடன் மக்கள் பணிக்காக திறப்பு விழா செய்யப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து கட்டிடத்தில் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கின்றது. தற்போது கட்டிடத்தை கூலிக்கு பெற்ற நபர் மீண்டும் இக்கட்டிடம் தனக்கு சொந்தம் என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு தற்போது உள்ள நானுஓயா பொலிஸ் அதிகாரி குறித்த நபருக்கு ஆதரவு வழங்குவதாகவும் சபை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக செயல்படுவதாக தெரிவித்து

 

இன்று 16 நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட பொலீஸ் அதிகாரிக்கு எதிராக அனைவரும் கண்டனத்தை தெரிவித்து சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தும் பொலிஸ் நிலைய அதிகாரிக்கு உரிய நடவடிக்கைகள் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என சபையில் அனைவரும் தெரிவித்ததோடு இவ்வாறான பிரச்சினைகள் தொடருமாயின் ஜனாதிபதி அவர்களுக்கு கவனத்திற்கு கொண்டு வருவதோடு இது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளை முன்னெடுப்பதாக சபை உறுப்பினர்களும் சபை தவிசாளரும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சபையில் பொலீஸ் அதிகாரிக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கரங்களை உயர்த்தி ஆதரவு தெரிவித்து கூட்டம் முடிவடைந்து குறிப்பிடத்தக்கதாகும்.