மதில்களை சேதப்படுத்தியது,யானை

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் சுமார் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளன.

இன்று(12) அதிகாலை வேளையில் உட்புகுந்த சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் சாய்ந்தமருது கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை உடைத்து நாசப்படுத்தியதுடன், அங்கிருந்த தென்னை மரக்கன்றுகள், மா மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தியது.

தவிர பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட மேட்டு நிலப்பயிர்கள் மரம் செடி கொடிகள் பலவற்றையும் இக்காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகளுக்கு உண்பதற்கு உணவு இன்மையினால் அப்பிரதேசத்தில் கொட்டப்படும் குப்பை கூழங்கள்களை பகல் வேளைகளிலும் இரவு நேரங்களிலும் யானைக்கூட்டம் தொடர்ந்தும் உண்பதற்காக படையெடுத்து வருவதை காணக் கூடியதாகவுள்ளது.

அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் யானைக் கூட்டங்கள் குடியிருப்புக்குள் ஊடுருவுவதால் மக்கள் அச்சத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாது இரவு நேரங்களிலும் அதிகாலைப் பொழுதிலும் எம் மீனவர்களும், கமத் தொழிலாளர்களும் தம் தொழிலுக்கு செல்வதற்கு சிரமமாக இருப்பதாக கூறி வருகின்றார்கள்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கமநல சேவைகள் அதிகாரிகளும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளால் மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதும் மனிதனால் காட்டுயானைகள் அழிக்கப்படுவதும் தொடர் கதையாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement