மூன்று சாத்தியமான முடிவுகள் என்னென்ன?

 அனல் பறந்த அமெரிக்க அதிபர் தேர்தல் களம் தற்போது முடிவு கட்டத்தை
நெருங்கியுள்ளது. உலகின் அதிகாரம் படைத்த பதவியை அலங்கரிக்கப்போவது குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் ஜனநாயக கட்சியின் ஜோ பைடனா என்ற கேள்விக்கான விடை வெகுதூரத்தில் இல்லை.

ஆனால், திருப்புமுனைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்த தேர்தலின் முடிவுகள் மூன்று விதங்களில் (உண்மையில் நான்கு! அதை கடைசில் பார்ப்போம்) அமைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

1. பைடன் எளிதில் வெற்றி

கருத்துக்கணிப்பு முடிவுகள் சரியாக இருக்கும் பட்சத்தில், அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, பைடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதே இந்த தேர்தலின் முதல் சாத்தியமான முடிவாக இருக்கும்.

தேசிய அளவில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன், ஃபுளோரிடா, அரிசோனா, வடகரோலினா, விஸ்கான்சின், மிஷிகன், பென்சில்வேனியா ஆகிய தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் பல முக்கிய மாகாணங்களில் முன்னிலை வகித்து வருகிறார்.

மேலும், பல்வேறு முக்கிய கருத்துக்கணிப்புகளின் சராசரியை அளித்து வரும் FiveThirtyEight என்ற இணையதளம், வெறும் 0.1 சதவீத வாக்குகளே இழுபறி நிலையில் உள்ளதாக காட்டுகிறது.

பொதுவாக, இதுபோன்ற தேர்தல்களில் கருத்துக்கணிப்புகளில் குறிப்பிடப்படும் முடிவுகளில் மூன்று சதவீத வரை ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம் என்று குறிப்பிடப்படும். ஆனால், கடந்த பல வாரங்களாக 0.1 சதவீத வாக்குகளே இழுபறி நிலையில் இருப்பதால், அதுவே இறுதி முடிவாக வந்தாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

2. டிரம்புக்கு அதிர்ச்சியளிக்கும் வெற்றி

2016ஆம் ஆண்டு தேர்தலை போன்று கருத்துக்கணிப்பு முடிவுகள் பொய்த்துப்போகும் பட்சத்தில், டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெறுவார் என்பதே இரண்டாவது சாத்தியமான முடிவு. இது மெய்ப்பட வேண்டுமென்றால், பென்சில்வேனியா மற்றும் ஃபுளோரிடாவில் டிரம்புக்கு சாதகமான சூழ்நிலை உருவாவது அவசியம்.

ஃபுளோரிடாவில் மூன்று அல்லது நான்கு புள்ளிகள் பைடன் முன்னிலையில் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுவதை பலராலும் நம்ப முடியவில்லை. அதேபோன்று, 2016ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் லத்தீன் அமெரிக்கர்களுக்கிடையே டிரம்பின் ஆதரவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

2016ஆம் ஆண்டு தேர்தலிலிருந்து டிரம்பின் தேர்தல் கணக்கும் மாறுபட்டுள்ளதாக தெரியவில்லை. அதாவது, கடந்த தேர்தலில் கருத்துக்கணிப்புகளின் வளையத்திற்குள் வராத பலரை தேர்தலில் வாக்களிக்க செய்தது போன்று இந்த முறையும் முயற்சிகள் நடந்து அது தேர்தலில் எதிரொலிக்கலாம்.

  அதாவது, கொரோனா வைரஸால் உலகிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கும்போதிலும், டிரம்பின் பிரசார கூட்டங்கள் சமூக இடைவெளி இன்றி நடத்தப்படுவதாக ஒருபுறம் குற்றஞ்சாட்டுகள் எழ, மற்றொருபுறம் வாக்காளர்களின் ஆதரவை அதிகரிக்க வித்தியாசமான பாணியில் டிரம்பின் பிரசார குழு செயலாற்றி வருகிறது.

  அதாவது, நீங்கள் டிரம்பின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க இணையத்தில் பதிவு செய்தால், தேர்தல் பணிக்குழு உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று மென்பொருளின் உதவியோடு பரிசோதிக்கும், ஒருவேளை உங்களது பெயர் இல்லாவிட்டால் பதிவுசெய்ய வைத்துவிடுவார்கள். இதன் மூலம், சிக்கலான போட்டி நிலவி வரும் இந்த கட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் தேர்தலில் வாக்களிக்கக் கூடும். இதுபோன்ற முயற்சிகள் தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தினாலும் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

  அமெரிக்க வாக்காளர்கள் யோசிக்கும் மற்றொரு விவகாரமும் டிரம்புக்கு சாதகமாக அமையலாம். அதாவது, பைடனை விட வெறும் மூன்று வயது மட்டுமே இளையவராக இருந்தாலும், டிரம்ப் அவரைவிட மிகவும் துடிப்பாக காணப்படுகிறார். இதை முதலாக வைத்தே பலரும் பைடனுக்கு நாட்டை தலைமையேற்றும் வயது கடந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

  3. அதிர்ச்சியளிக்கும் வகையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பைடன் வெற்றி

  அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

  இதுதான் மூன்றாவது சாத்தியமான முடிவு. இரண்டாவது வாய்ப்பை போன்றே இதுவும் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் பட்சத்தில் நிகழக் கூடும். ஆனால், இது நிகழ்ந்தால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக, அதாவது 1980இல் ஜிம்மி கார்டருக்கு எதிராக ரொனால்ட் ரீகனின் வெற்றி அல்லது 1988இல் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மைக்கேல் டுகாக்கிஸுக்கு எதிராக வெற்றியை பெற்றதுபோல் அமையும்.

  தேர்தல் பிரசாரத்தின் கடைசி வாரத்தில், கொரோனா வைரஸின் பாதிப்பு, உயிரிழப்பு, மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகிய அனைத்தும் முன்னெப்போதுமில்லாத வகையில் உயர்ந்து வருவதும் பங்குச்சந்தைகள் மார்ச் மாதத்துக்கு பிறகான மோசமான இழப்புகளை பதிவுசெய்துள்ளதும் இந்த மூன்றாவது சாத்தியமான முடிவுக்கு வாக்காளர்களை இட்டு செல்லலாம் என்று கருதப்படுகிறது.

   2016ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் வெற்றிபெற்றால், எல்லையில் சுவர் கட்டப்படும், முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும், தொழில்துறை மீட்டெடுக்கப்படும் என்று டிரம்ப் தெளிவாக வாக்குறுதிகளை முன்வைத்திருந்தார். ஆனால், தான் இரண்டாவது முறையாக அதிபரானால் என்ன செய்வேன் என்பதை அவரால் மக்களின் மனதில் பதிய வைக்க முடியாதது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தலாம்.

   எனவே, ஒருவேளை டிரம்புக்கு எதிரான இந்த விடயங்கள் எல்லாம் தேர்தலில் எதிரொலிக்கும் பட்சத்தில், முதல் சாத்தியமான வெற்றியில் பைடன் வெற்றி பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ள மாகாணங்களுடன் டெக்சாஸ், ஓஹியோ, லோவா, ஜோர்ஜா மற்றும் தென் கரோலைனாவும் இணையக் கூடும்.

   …. மற்றும் எதிர்பார்க்கப்படாத முடிவு (இது 2020!)

   அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

   முன்னரே குறிப்பிடப்பட்டிருந்ததை போன்று, பலரும் எதிர்பார்க்காத நான்காவது சாத்தியமான முடிவையும் இந்த தேர்தல் சந்திக்கக் கூடும்.

   அதாவது, 'எலக்டோரல் காலேஜ்' வாக்குகள் எனப்படும் எத்தனை வாக்காளர் தொகுதிகளை ஒருவர் கைப்பற்றுகிறார் என்பதை வைத்தே அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குறிப்பிட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றிருக்கும். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகளில், 270 அல்லது அதற்கும் மேலான தொகுதிகளை பெறும் வேட்பாளர்தான் வெற்றியாளர்.

   ஆனால், நெப்ராஸ்கா மாகாணத்தின் வித்தியாசமான வாக்காளர் தொகுதி பங்கீட்டின் காரணமாக, பைடன், டிரம்ப் ஆகிய இருவருமே தலா 269 எலக்டோரல் காலேஜ் வாக்குகளை மட்டுமே பெறும்பட்சத்தில், முன்னெப்போதுமில்லாத சூழ்நிலையை அமெரிக்க அரசியல் சந்திக்கக் கூடும்.

   பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து, மாதக்கணக்கில் பிரசாரத்தில் ஈடுபட்டு, இறுதியில் முட்டுக்கட்டை ஏற்பட்டால் அமெரிக்கா என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்.

   இதுபோன்று நடப்பதற்கான வாய்ப்பு குறைவே. ஆனால், நடக்கவே நடக்காது என்று கூறவா முடியும்? ஏனெனில் இது "2020."   Advertisement