"சூரரைப் போற்று",விண்வெளியில்


 விமானப் பயணத்தை விலை மலிவாக ஆக்கும் திட்டத்துடன் கேப்டன் கோபிநாத் என்பவர் ஒரு விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கிய கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் சூரரைப் போற்று.

எளிய, கிராமத்து மக்களை பறக்க வைக்கப் போவதாக கூறி தம் நிறுவனத்தின் வெற்றிக்குப் போராடுவார் அந்தப் படத்தின் நாயகன்.

இதனோடு ஒப்பிடத்தக்க வகையில் மலிவு விலை விண்வெளிப் பயணம், மனிதர்களை செவ்வாயில் குடியமர்த்துவது போன்ற லட்சியங்களைக் கொண்டு உண்மையில் உருவான நிறுவனம்தான் எலான் மஸ்க் என்பவர் உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனம்.

ஒரு காலத்தில் கொலம்பியா, டிஸ்கவரி, எண்டவர் என்று பல விண்வெளி ஓடங்களை வைத்துக் கொண்டு மாற்றி, பூமிக்கும் விண்வெளிக்குமாக ஒரு பேருந்தைப் போல இயக்கிக் கொண்டிருந்த நாடு அமெரிக்கா. நிலவில் முதலில் மனிதனை கால் பதிக்க வைத்த விண்வெளி வல்லரசு.

அப்படிப்பட்ட அமெரிக்காவே, இப்போது தமது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பவும், அங்கிருந்து அழைத்துவரவும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற இந்த தனியார் நிறுவனத்தின் க்ரூ ட்ராகன் வெகிக்கிள் என்ற விண்வெளி ஓடத்தை நம்பியுள்ளது.

சொந்தமாக கார் வைத்துக் கொள்வதற்குப் பதிலாக இந்தியாவில் சில அரசுத் துறைகள் தனியார் டாக்ஸியை அமர்த்திக் கொள்வது போல உள்ளது இது.

விண்வெளிப் பயணத் தொழில் நுட்பத்தில் உலகத்தின் முன்னோடி நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எதற்காக தங்கள் விண்வெளி வீரர்களின் போக்குவரத்துக்கு தனியார் நிறுவன விண் கலத்தை அமர்த்த வேண்டும். அதற்காக தனியார் நிறுவனத்துக்கு ஏன் கட்டணம் செலுத்தவேண்டும்?இந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எப்படி தொடங்கப்பட்டு காலூன்றியது?

இதைப் புரிந்துகொள்ள நாம் சுமார் 17 ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும்.

பூமிக்கும் - சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும் போய் வந்துகொண்டிருந்த அமெரிக்காவின் விண்வெளி ஓடங்களில் ஒன்று கொலம்பியா. 2003-ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி இந்த கொலம்பியா ஓடம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புவிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தபோது, புவியின் காற்று மண்டலத்தில் நுழையும்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் உடைந்து நொறுங்கியது. அந்த ஓடத்தில் இருந்த 7 வீரர்களும் இறந்தனர். இந்தியாவில் பிறந்து அமெரிக்கரான விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவும் இறந்தவர்களில் ஒருவர்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்கத் திட்டத்தின் திசைவழி இந்த விபத்தால் மாற்றமடைந்தது.

சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்ததும் அமெரிக்க விண்வெளி ஓடம் ஓய்வு பெறும் என 2004ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்தார். விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் வகையில் புதிய வகை விண்வெளி வாகனம் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Orion
படக்குறிப்பு,

வரைகலை: விண்வெளி ஓடங்கள் ஓய்வு பெற்றதும் அதற்குப் பதில் ஓரியோன் விண்கலம் வடிவமைப்பது என்று அமெரிக்கா திட்டமிட்டது.

சர்வதேச விண்வெளி நிலையப் பணிகள் முடிவடையும்போது, தாழ் புவி சுற்றுப்பாதைக்கு விண்வெளி வீரர்களையும், சரக்குகளையும் அனுப்பி வைக்க வணிகரீதியாக செயல்படும் நிறுவனங்களுக்கு முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்படும் என்று அடுத்த ஆண்டு தெரிவித்தார் அப்போதைய நாசா தலைவர் மைக் கிரிஃபின்.

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு தேவையான நிதியை மிச்சப்படுத்துவதற்காகவே அப்போது புதிய விண்வெளி ஓடங்களை கட்டாமல் வணிக நிறுவனங்களை நாடுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவதற்காக ஒரு அலுவலகத்தையும் அமெரிக்கா உருவாக்கியது.

செவ்வாயில் குடியமர்த்தும் லட்சியம்

தென்னாப்பிரிக்காவில் பிறந்தவரான எலான் மஸ்க் தமது ஸ்பேஸ் எக்ஸ் கம்பெனியை தொடங்கி அப்போது சில ஆண்டுகளே ஆகியிருந்தன. விண்வெளிப் பயணத்துக்குப் பயன்படுத்தும் கருவிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் விண்வெளிப் பயணத்துக்கான செலவைக் குறைக்கவேண்டும், மனிதர்களை செவ்வாயில் குடியமர்த்தவேண்டும் என்ற லட்சியங்களைக் கொண்டிருந்தார் அவர்.

"பல கோள்களில் உயிர் வாழ்வை சாத்தியப்படுத்தவேண்டும் என்ற லட்சியத்தோடு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது" என்று கூறினார் அந்த நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மிஷன் ஹார்ட்வேர் மற்றும் ஆபரேஷன் பிரிவின் இயக்குநரான ஜெசிகா ஜென்சன்.

"ஆனால், பல ஆண்டுகளுக்கு நாங்கள் சிறிய நிறுவனமாகவே இருந்தோம். அந்த நிலையில் இருந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நிலைக்கு எப்படிச் செல்வது என்ற யோசனையில் வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளை எடுத்துச் சென்றுவருவதற்கு நாசாவுக்கு ஒரு தேவை ஏற்பட்டபோது, நாங்கள் அதற்குள் நுழைந்தோம்" என்கிறார் அவர்.

Cargo Dragon
படக்குறிப்பு,

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும், அங்கிருந்தும் சரக்குகளை சுமந்து செல்லும் வகையில் Dragon1 கலம் வடிவமைக்கப்பட்டது.

இந்த சரக்குகளை ஏற்றிச் செல்லும் பணிக்கு 2006ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், எலான் மஸ்க் இரண்டு நிறுவனங்களை உருவாக்கியிருந்தார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம் ஆகிய இரண்டின் நிதி நிலையும் மோசமாக இருந்தது. தம்மிடம் இருந்த பணத்தை இரண்டு நிறுவனத்துக்கும் பகிர்ந்து கொடுப்பதா? அல்லது ஒரே நிறுவனத்தில் மொத்த பணத்தையும் போட்டு அதன் வளர்ச்சியை உறுதி செய்வதா? என்ற தடுமாற்றத்தில் இருந்தார் எலான் மஸ்க். இரண்டாவது வழியை அவர் தேர்ந்தெடுத்தால் ஒரு நிறுவனம் மரித்தே போகும். இதை அவரே 2013ல் பிசினஸ் இன்சைடர் பத்திரிகையில் தெரிவித்திருந்தார்.

"கடைசியில் என்னிடம் இருந்ததை இரண்டாகப் பிரித்துக் கொடுத்து, இரண்டு நிறுவனங்களையும் உயிரோடு வைத்திருக்க முடிவு செய்தேன். அந்த விஷயத்தில் முடிவெடுப்பது கடினமாக இருந்தது. ஏனெனில் இப்படிப்பட்ட ஒரு முடிவின் மூலமாக இரண்டு நிறுவனங்களுமே அழிவை சந்தித்திருக்கலாம்" என்று அவர் கூறினார்.

ஆனால் அதிருஷ்டவசமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான 160 கோடி டாலர் ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2008 டிசம்பர் 23ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது நாசா. அந்த நேரத்தில் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், "எல்லோரையும் நேசிக்கிறேன்" என்று சொல்லவேண்டும் போல இருந்தது என்றும் கூறினார் மஸ்க்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய டிராகன் 1 விண்கலத்தில் சரக்குகளை சுமந்து செல்ல முடியும். ஆனால், மனிதர்களை கொண்டு செல்ல இயலாது. ஆனால், அந்த நிறுவனத்துக்கு அந்த விண்கலம் முக்கியமான மைல் கல்லாக அமைந்தது.

2008 நவம்பரில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை மறு ஆய்வு செய்தார். அதன் விளைவாக, முந்தைய அதிபர் உருவாக்கிய நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் 'கான்ஸ்டலேஷன்' திட்டம் ரத்து செய்யப்பட்டது.

SpaceX Crew Dragon
படக்குறிப்பு,

2019ல் ஆளில்லா விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல் முறையாக வெற்றிகரமாக சரக்குகளை அனுப்பியது ஸ்பேஸ் எக்ஸ்.

ஆனால், விண்வெளித் திட்டத்தை தொடர்ந்து வணிக மயமாக்குவதை ஒபாமா நிர்வாகம் ஆதரித்தது. விண்வெளி வீரர்களை அனுப்பிவைக்கவும் தனியார் விண்கலன்களை உருவாக்கவும் அது ஒத்துழைப்பு நல்கியது.

ஆனால் அதற்கு காலம் பிடிக்கும் என்பதால், தமது விண்வெளி ஓடம் ஓய்வு பெற்றதும், விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப ரஷ்யாவின் உதவியை நாடியது அமெரிக்கா. கஜகஸ்தானில் உள்ள பைகானூர் தளத்தில் இருந்து ரஷ்யா அனுப்பும் சோயுஸ் விண்வெளி வாகனம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு ஒவ்வொரு இருக்கைக்கும் அந்நாடு பல கோடி டாலர்களை செலவிடவேண்டியிருந்தது.

தொடக்கத்தில் வணிக ரீதியாக விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டத்தின் மீது நம்பிக்கை வைக்காத நாடாளுமன்றம் போதிய நிதியை ஒதுக்கவில்லை. ஆனால், ஒபாமா நிர்வாகத்தில் நாசாவின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சார்லஸ் போல்டன் என்ற முன்னாள் விண்வெளி வீரர், தொடர்ந்து வலியுறுத்தி அதற்குத் தேவையான நிதியைப் பெற்றார்.

இந்தப் பணிக்கு முதல் கட்டமாக 5 கோடி டாலர் பணத்தை முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்களை ஆராய்ந்த நாசா 2014ல் கடைசி சுற்று பரிசீலனைக்கு இரண்டு நிறுவனங்களை தேர்வு செய்தது. அதில் ஒன்று போயிங். மற்றொன்று ஸ்பேஸ் எக்ஸ்.

அதில் இருந்து இரு நிறுவனங்களின் விண்கல மாதிரிகளை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பது ஆகிய பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர்.

இறுதியாக 2019 மார்ச்சில் ஆட்களை ஏற்றிச் செல்லும் திறன் பெற்ற 'க்ரூ ட்ராகன்' விண்கலத்தை ஆள்கள் இல்லாமல் செலுத்தி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அதனுடன் வெற்றிகரமாக இணைய வைத்தது. இது முழுவதும் தானியங்கி முறையில் நடைபெற்றது.

இந்த விண்கலத்தில் 'ரிப்ளே' என்று அழைக்கப்படும் மனித பொம்மை அனுப்பிவைக்கப்பட்டது. இந்த பொம்மை மீது ஈர்ப்புவிசை எப்படி செயல்படுகிறது என்பதை அளவிடுவதற்காக அந்த பொம்மையில் உணர்வி கருவிகள் பொருத்தப்பட்டன.

Elon Musk
படக்குறிப்பு,

எலான் மஸ்க்.

இது போல பல வெற்றிகள் கிடைத்தபோதும், ஸ்பேஸ் எக்சின் பயணம் மேடு பள்ளங்கள் இல்லாத சொகுசுப் பயணமாக இல்லை. 2016ல் ஏவுதளத்திலேயே ஒரு ஃபால்கன் 9 ராக்கெட் வெடித்துச் சிதறியது. 2019 ஏப்ரலில் ஒரு தரை சோதனையின் போது க்ரூ ட்ராகன் விண்கலன் ஒன்று வெடித்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

க்ரூ ட்ராகன் விண்வெளி வாகனத்தை விண்வெளியில் இருந்து திரும்ப புவிக்கு கொண்டுவரும்போது பாதுகாப்பாக தரையிறங்குவதற்காக அதில் பொருத்தப்படும் பாராசூட் அமைப்பில் கோளாறு இருந்து வந்தது.

இந்த விபத்துகளாலும், கோளாறுகளாலும் தொடக்கத்தில் நிதி ஒதுக்க நாடாளுமன்றம் தயக்கம் காட்டியதாலும், 2016ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்களை சுமந்து செல்லவேண்டும் என்ற ஆரம்ப இலக்கில் தாமதம் ஏற்பட்டது.

இந்த தாமதத்தால் வெறுப்படைந்த நாசா நிர்வாகி ஜிம் ப்ரைடன்ஸ்டைன், வணிக ரீதியில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் மிகவும் தாதமதமாவதாகவும், அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டப்படவேண்டும் என்றும், வெற்றிகரமாக செயல்படுவதற்கான நேரம் இதுவென்றும் ட்வீட் செய்திருந்தார்.

ஸ்டார்ஷிப் திட்டம் பற்றி எலான் மஸ்க் ஒரு ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் இந்த ட்வீட் வெளியானது.

இதோ அந்த ட்வீட்:

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

எலான் மஸ்கும் அதற்கு பதிலடி கொடுத்திருந்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் மட்டுமே சவால்களை எதிர்கொள்ளவில்லை. CST-100 Starliner என்ற போயிங் விண்கலமும் கால தாமதத்தால் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நடந்த ஆளில்லாத சோதனை ஓட்டத்தின் போது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைவதில் அதற்கு சிக்கல் ஏற்பட்டது.

எனினும் 2020 ஜனவரியில் நடந்த ஒரு க்ரூ ட்ராகன் சோதனையின் வெற்றி மூலம் விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு ஸ்பேஸ் எக்ஸுக்கு அனுமதி கிடைத்து, ஃப்ளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து மே 30ம் தேதி விண்வெளி வீரர்களோடு ஸ்பேஸ் எக்சின் முதல் க்ரூ ட்ராகன் விண்வெளி வாகனம் பறந்தது.

நாசாவின் டோ ஹர்லே, பாப் பென்கன் என்ற இரண்டு விண்வெளி வீரர்களும் இரண்டு மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த பிறகு அதே விண்கலத்தில் பாதுகாப்பாக புவிக்குத் திரும்பினர்.

இந்த வெற்றிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் முந்தை மோதலை மறந்து ப்ரைடன்ஸ்டைனும், எலான் மஸ்கும் இணக்கமான கருத்துகளை வெளியிட்டனர்.

ஸ்பேஸ் எக்ஸின் பாதுகாப்புப் பண்பாடு குறித்துப் பாராட்டினார் நாசா தலைவர். அதற்குப் பதில் அளித்த எலான் மஸ்க், "நாசாவோடு சேராமல் போயிருந்தால் நாங்கள் எப்படி இருந்திருப்போமோ அதைவிட செம்மையான நிறுவனமாக நாசா எங்களை ஆக்கியது. நாசா இல்லாமல் போயிருந்தால் ஒருவேளை எங்கள் நிறுவனம் பணிகளைத் தொடங்கியேகூட இருந்திருக்காது" என்று தெரிவித்தார் எலான் மஸ்க்.

என்ன சூரரைப் போற்று க்ளைமாக்ஸ் காட்சிக்கு வந்ததைப் போல இருக்கிறதா?

என்ன காதில் தண்டட்டியோடு சோழவந்தான் பாட்டிகள் விண்கலத்தில் இருந்து இறங்குவது போல கற்பனை செய்கிறீர்களா... உங்கள் கற்பனை இப்போதைக்கு கொஞ்சம் அதிகம்தான்.Advertisement