கொரோனா வாங்கிய மற்றொரு கொடும் பலி, #க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைவு


 இன்று அதிகாலை க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் மறைந்தார். கொரோனா வாங்கிய மற்றொரு கொடும் பலி.

எந்த எழுத்தாளனுக்கும் க்ரியாவில் தனது நூல் ஒன்று வரவேண்டும் என்ற ரகசியக் கனவு இருக்கும். எந்தப் பதிப்பாளனுக்கும் க்ரியா ராமகிருஷ்ணனைபோல ஒரு நூலைப் பதிப்பிக்கவேண்டும் என்ற ஒரு சவால் இருக்கும். புத்தகங்களுக்கு அதன் வடிவமைப்பில் ஒரு கேரக்டர் இருக்கிறது என்பதை தமிழில் ஆழமாக நிறுவியர் அவர். க்ரியா வெளியிட்ட மொழிபெயர்ப்புகள் நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் ஏற்படுத்திய தாக்கங்கள் பிரமாண்டமானவை. காம்யுவின் ' அன்னியன்', சார்த்தரின் ' மீள முடியுமா?', ழாக் ப்ரவரின் ' சொற்கள்' என எத்தனை படைப்புகள் தமிழ் வாசகனுக்குள் புதிய திறப்புகளை உண்டாக்கின. இன்னொருபுறம் சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன். அசோகமித்திரன், ந.முத்துசாமி துவங்கி இமையம் வரையிலான தமிழின் முதன்மையான படைப்பாளிகளின் நூல்களை செம்மையாக பதிப்பித்த நீண்ட வரலாறு க்ரியாவுக்கு உண்டு. ஒரு படைப்பை செம்மைப்படுத்தி மேம்படுத்துவதில் எவ்வளவு உழைப்பையும் கவனத்தையும் ராமகிருஷ்ணன் மேற்கொள்வார் என்பதை அவருடன் பணியாற்றிய பல நண்பர்களும் கூறியிருக்கிறார்கள். மொழிச்செம்மை, பிழையின்மை, அழகுணர்ச்சியும் நவீனத்துவமும் கொண்ட வடிவமைப்பு என க்ரியா எப்போதும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறது.
பதிப்புத்தொழிலுக்கு எந்த மரியாதையும் இல்லாத ஒரு காலத்தில், யார் வேண்டுமானாலும் பதிப்பாளாராக மாறிவிடலாம் எனும் ஒரு சூழலில் ஒரு பதிப்பாளனுக்குரிய முழுமையான இலக்கணங்களுடன் திகழ்ந்த க்ரியா ராம கிருஷ்ணனின் மறைவு ஒரு பேரிழப்பு.
ஒரு எழுத்தாளனாக என் இளமைக்காலத்தை வடிவமைத்ததில் க்ரியாவின் நூல்களுக்கு பெரும் பங்கு உண்டு. க்ரியா பதிப்பித்த ஜே.ஜே சில குறிப்புகளின் அட்டைப்படம் ஒரு இளம் பருவத்து காதலியின் புகைப்படம்போல என் நெஞ்சில் பதிந்திருக்கிறது.


Advertisement