நுவரெலியா மாவட்டத்தில் 18 பேருக்கு வைரஸ் உறுதி



 (க.கிஷாந்தன்)

 

பொகவந்தலாவ சுகாதார பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்ட்ரி தோட்டம் பீரட் பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தோட்டத்தில் உள்ள 12 குடும்பங்களை சேர்ந்தவரகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

பீரட் தோட்டத்தில் ஏற்கனவே நால்வருக்கு கொரோனா வைரஸ் பரவியதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (04.01.2021) வெளியாகின.

 

இதில் தாயொருவருக்கும், மகளுக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  தொற்றாளர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், பீரட் தோட்டத்தில் அம்மன் ஆலயத்தின் பூசகர் ஒருவர் உட்பட  12 குடும்பத்தை சேர்ந்த 45 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அத்தோட்டம் தற்காலிகமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை, பொகவந்தலாவ நோத்கோ பகுதியிலும் 28 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (03.01.2021) மாத்திரம் 18 பேருக்கு வைரஸ் தொற்றியது. கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலவரை இம்மாவட்டத்தில் இதுவரை 436  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.