சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல்



GruparanK.

சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகின்றது. போட்டியிடுபவர்களில் ஒருவர் சனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சட்டத்தரணிகளுக்கெதிரான நிறைவேற்றுத் துறையின் கெடு பிடிகள் அதிகரித்துள்ள சூழலில் சட்டத்தரணிகள் சார்பில் இனம், மொழி, மதம் கடந்து பேசவல்ல ஒரு தலைமை அவசியம். தமிழ் சட்டத்தரணிகளை பொறுத்த வரையில் சங்கம் சிங்கள பௌத்த அரசியல் நலன்களை முன்னிறுத்தியே செயற்பட்டுள்ளது என்பது வரலாற்று அனுபவம். இந்த சூழலை தனி நபராக சாலிய சேர் மாற்றுவது கடினமாயினும் தமிழ் சட்டத்தரணிகளிக்கு ஓர் உற்ற துணையாக சாலிய சேர் இருப்பார் என நான் நம்புகிறேன்.
அதற்கான காரணம் பின்வருமாறு:
சாவகச்சேரி நீதிமன்றில் நாவற்குழி காணாமல் போனோர் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2019 அன்று நீதிமன்ற வளாகத்திற்குட்பட்டு சட்டத்தரணிகள் மற்றும் மனுதாரர்கள் புலனாய்வாளர்களால் படம் பிடிக்கப்பட்டதை தானாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் என்ற வகையில் எம்முடன் தொடர்பேற்படுத்தி சட்ட மா அதிபருக்கும் பிரதம நீதியரசரசுக்கும் மூன்று பக்கத்தில் அந்த வழக்கில் நாம் சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகள் தொடர்பிலும் விரிவாக கடிதம் அனுப்பி வைத்து எமது முறைப்பாட்டிற்கு சாலிய சேர் வலுச் சேர்த்தார். காணாமல் போனோர் அலுவலகத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வந்த போதிலும் அவர் தனது கடைமையை செய்தார்.
அதே போன்று நாவற்குழி வழக்கில் இராணுவம் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் ஆஜராகக் கூடாது என்ற விடயத்தை நாம் வலியுறுத்தி பூர்வாங்க ஆட்சேபணை எடுத்த காலத்தில் அது மிகவும் சர்ச்சைக்குரியதாக இருக்க அவ்விடயத்தை சாலிய பீரிஸ் சேர் காணாமல் போனோர் அலுவலகத்தின் முதலாவது இடைக்கால அறிக்கையில் ஒரு பரிந்துரையாக உட்புகுத்தினார்.
இவை தவிர்ந்து அவர் சட்டத்தரணிகளின் உரிமைக்காக அவர் துணிந்து இனம், மொழி கடந்து செயலாற்றிய பல உதாரணங்கள் உள்ளன.
சாலிய சேர் சட்டத்தரணிகள் சங்கத் தலைவராக இருந்திருந்தால் ஹீஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து சங்கம் வாய் மூடி இருக்காது என நான் நம்புகிறேன்.
இன்றைய சூழலில் சாலிய சேர் எங்களுக்கு தேவை.
அவர் தெரிவு செய்யப்படக் கூடாது என ஆளும் வர்க்கம் கடுமையாக தென்னிலங்கையில் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது. வடக்கு கிழக்கு வாழ் சட்டத்தரணி உறவுகள் சிரமம் பாராது 24ஆம் திகதி தமது சங்க வாக்குரிமையை செலுத்த முன்வர வேண்டும்; அந்த வாக்கை சாலிய சேருக்கு வழங்க வேண்டுமென சக சட்டத்தரணியாக கேட்டுக் கொள்கிறேன்.