தைவானில் ரயில் குகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழப்பு

 


தைவானில் சுமார் 490 பேருடன் சென்ற ரயில் குகைப் பாதைக்குள் தடம் புரண்ட பயங்கரமான விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கட்டுமான ட்ரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்திருக்கிறது.

8 பெட்டிகளைக் கொண்ட ரயிலின் பல பெட்டிகள் மோசமாகச் சேதமடைந்துவிட்டன. அவற்றுக்குள் சிக்கியிருந்த பலரை மீட்புக் குழுவினர் மீட்டனர். பலர் ஜன்னல்களை உடைத்து வெளியேறினர்.

தலைநகர் தைபேயில் இருந்து டைட்டங் என்ற நகரை நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது, ஹுவாலியன் என்ற பகுதியில் ரயில் விபத்துக்குள்ளானது. வருடாந்திர விடுமுறையைக் கழிப்பதற்காக ஏராளமானோர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அனைத்துப் பெட்டிகளும் முற்றிலுமாக நிரம்பியிருந்ததால், பலர் நின்று கொண்டிருந்தனர்.

மணிக்கு அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் செல்லக்கூடிய அந்த ரயில் பொதுவாக பாதுகாப்பான பயணத்துக்குப் பெயர் பெற்றது.

கடந்த பல பத்தாண்டுகளில் தைவானில் நடந்திருக்கும் மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தைவான் அதிபர் ட்சாய் இங்-வென் இரங்கல் தெரிவித்திருக்கிறார். விபத்து குறித்த விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.