ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

 


ஒரு இமாலய ரன் சேஸிங்கில் கடைசி பந்துவரை போராடி பஞ்சாப்பிடம் கோட்டை விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.

சிக்ஸர்களால் களைகட்டும் வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது ஒரு குறைந்த ஸ்கோர் போட்டிதான். ஆனால் அதில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், 148 ரன்கள் எனும் இலக்கை துரத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஆட்டத்தின் 90 பந்துகளைச் சந்தித்து முடித்தபோது அந்த அணி எடுத்திருந்த ரன்கள் வெறும் 90 ரன்கள்தான். கைவசம் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

அப்போது மில்லர், மோரிஸ் என இரு தென்னாப்பிரிக்க வீரர்கள் ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போதுவரை வான்கடே மைதானம் 35 ஓவர்களாக சிக்ஸர்களே பார்க்காமல் இருந்தது. ஆனால் 16வது ஓவரில் இருந்து நடந்தது வேறு கதை. மில்லர் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார், பந்து வீச்சாளர் உனத்கட் ஒரு சிக்ஸர் விளாசினார், கிறிஸ் மோரிசோ நான்கு சிக்ஸர் விளாசினார்.

ஒரு புறம் ரபாடா, மறுபுறம் கிறிஸ் வோக்ஸ், இன்னொரு புறம் டாம் கரண் என சிறந்த பந்துவீச்சாளர்களை கடைசி ஓவர்களில் பயன்படுத்திப் பார்த்தும் ரிஷப் பந்த் அணிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

சரி, என்னதான் நடந்தது இந்த போட்டியில்?

க்ரிஸ் வோக்ஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

வான்கடே மைதானத்தில் சேஸிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை புரட்டி எடுத்த டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மனதில் கொண்டு ராஜஸ்தான் அணி டாஸ் வென்று இந்த முறை ரிஷப் கையில் பேட்டிங்கை கொடுத்தது.

ஜெய்தேவ் உனத்கட் தொடக்க ஓவர்களில் சீறினார். தனது அடுத்தடுத்த பந்துகளில் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, தவானை பெவிலியனுக்கு அனுப்பினார். ரஹானேவையும் வீழ்த்தினார்.

பவர்பிளேவில் அவர் வீசிய மூன்று ஓவர்களிலும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவரது மூன்று ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே சேர்த்தது டெல்லி .

முஸ்தாஃபிசுர் தனது பங்குக்கு ஸ்டாய்னிசை வீழ்த்த, டெல்லி கதிகலங்கியது.

ஆனால் அணித்தலைவர் ரிஷப் பந்த் மட்டும் அசராமல் அதிரடி காட்டினார். இந்த போட்டியில் டெல்லி சந்தித்த 11 வது ஓவரை குறிப்பிட்டே ஆக வேண்டும். ராகுல் தீவாத்யா வீசிய அந்த ஓவரை பந்த் எதிர்கொண்டார். ஹாட்ரிக் பௌண்டரி உட்பட நான்கு பௌண்டரிகளை விளாசி 20 ரன்கள் குவித்தார் பந்த்.

ஆனால் ரியான் பராக் வீசிய சாமர்த்தியமான த்ரோவில் பந்த் ரன் அவுட் ஆனார். அவர் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன்பின்னர் வந்தவர்கள் ரன்ரேட்டை உயர்த்த முயன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எனினும் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது டெல்லி.

ராஜஸ்தானின் அதிரடி பட்டாளத்துக்கு இது குறைவான ரன்களோ என யாரும் எண்ணிவிட முடியாத வகையில் டெல்லியும் ஆரம்பத்தில் இருந்தே கிடுக்கிப்பிடி போட்டது.

டேவிட் மில்லர்

பட மூலாதாரம்,BCCI/IPL

அங்கே உனத்கட் என்றால் இங்கே வோக்ஸ். அவர் தொடக்க வீரர்கள் இருவரையும் மூன்றாவது ஓவரிலேயே பெவிலியன் அனுப்பிவைத்தார்.

ரபாடா கடந்த போட்டியில் சதமடித்து மிரட்டிய அணித்தலைவர் சாம்சனை 4 ரன்களில் வீழ்த்தினார். ஷிவம் துபே நீண்ட நேரம் களத்தில் நிற்கவில்லை, ரன்கள் சேர்க்கவும் பெரிதாக முயற்சிக்கவில்லை.

எட்டு ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராஜஸ்தான்.

ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும், மில்லர் மட்டும் ராஜஸ்தானுக்கு ஆக்சிஜன் கொடுத்துக்கொண்டே இருந்தார். ஸ்டாய்னிஸ் ஓவரில் ஹாட்ரிக் பௌண்டரி விளாசினார். பொறுமையாக பொறுப்பாக விளையாடி அரை சதமடித்து அசத்தினார்.

அரைசதம் அடித்ததும் ரன் குவிக்கும் வேகத்தை அதிகரிக்க, அடுத்தடுத்து இரு சிக்ஸர்கள் விளாசினார். ஆனால் தொடர்ச்சியாக மூன்றாவது சிக்ஸர் விலாச முற்பட்டபோது லலித் யாதவிடம் பிடிபட்டார். அப்போது 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

17-வது ஓவரை வோக்ஸ் வீச, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிக்ஸர் அடித்தார் உனத்கட். அப்போது ஆட்டத்தில் பரபரப்பு ஏறியது. 18 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன.

பந்த் அப்போது ஒரு ரன் அவுட்டை தவறவிட்டார். ஆனால் அது தான் அவர் போட்டியை தவறவிட்ட புள்ளி என புரிந்து கொள்ள நீண்ட நேரம் ஆகிவிடவில்லை.

ஆட்டத்தின் 19-வது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ரபாடா ஓவரில் முன்னணி பேட்ஸ்மேன்களே தடுமாறும் சூழலில் இரு சிக்ஸர்கள் அடித்து மிரட்டினார் மோரிஸ்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை. பதற்றப்படாமல் இரு பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்டார் மோரிஸ். வெற்றி ராஜஸ்தான் மடியில் வந்துவிழுந்தது.

ஐபிஎல் வரலாற்றிலே அதிக தொகைக்கு ஏலம் போனவர் எனும் பெருமையை சமீபத்தில் பெற்றார் கிறிஸ் மோரிஸ். அவரை 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

க்ரிஸ் மோரிஸ்

பட மூலாதாரம்,BCCI/IPL

நேற்று 18 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர்கள் விளாசி 36 ரன்கள் எடுத்தார் மோரிஸ்.

இந்த ஆட்டத்தில் 15-20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம், ஆட்டத்தின் பிற்பகுதியில் பனித்துளி முக்கிய பங்கு வகித்தது என தோல்விக்கு டெல்லி கேப்டன் காரணம் கூறினார்.

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 5 ரன்கள் அடித்தால் வெற்றி, நான்கு ரன்கள் எடுத்தால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் எனும் நிலையில், இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் பிடிவாதமாக ஒற்றை ரன் ஓடுவதற்கு மறுத்திருந்தார் சஞ்சுசாம்சன். அப்போது எதிர் முனையில் நின்றிருந்த கிறிஸ் மோரிஸ் முகத்தில் புன்னகை தவழவில்லை. கடைசி பந்தில் சாம்சன் அவுட் ஆக, நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது.

ஆனால் தான் எடுத்திருந்த நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருப்பதாகவும், அதே போட்டியை இன்னும் 100 முறை விளையாடினாலும், சிங்கிள் ரன் எடுக்க ஓடி இருக்க மாட்டேன் என இன்றைய போட்டியின் முடிவில் பேசும்போது கூறினார் சஞ்சுசாம்சன்.

மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வரும் திங்கள்கிழமை சந்திக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.