சமூக ஊடக கட்டுப்பாடுகள், எதிர்க்கும் வாட்ஸ்அப், இந்தியாவில்


 


டிஜிட்டல், சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி அரசு விதித்துள்ள கட்டுப்பாடு இன்று அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்கள் அரசின் உள்நாட்டு விதிகளை ஏற்பதாக கூறியுள்ளன. ஆனால், வாட்ஸ்அப் நிறுவனம் அதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் இது தொடர்பாக கூறுகையில், "பயனர் அனுப்பும் ஒவ்வொரு தகவலையும் கண்காணிப்பது என்பது வாட்ஸ்அப் கடைப்பிடிக்கும் இருவர் இடையே பகிரப்படும் தகவல் என்கிரிப்ஷன் வசதியை முறிப்பதாக அமையும். அது அடிப்படையில் மக்களின் தனி உரிமையை பலவீனப்படுத்துவதாக அமையும். பயனர்களின் தனி உரிமையை மீறக்கூடிய அத்தகைய தேவைக்கு எதிராக குரல் கொடுக்கும் சிவில் சமூகம் மற்றும் நிபுணர்களுடன் எப்போதும் வாட்ஸ்அப் இணைந்து செயல்பட்டுள்ளது," என்று கூறியுள்ளார்.

அதே சமயம், மக்களின் பாதுகாப்பு, எங்களிடம் உள்ள தகவல்கள் தொடர்பாக சட்டபூர்வ வேண்டுகோள்கள் வரும்போது அதற்கு உரிய வகையில் யதார்த்தமாக தீர்வு காணும் நோக்குடன் இந்திய அரசுடன் தொடர்ந்து செயல்படுவோம்," என்று வாட்ஸ்அப் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இந்திய அரசின் புதிய விதிகள் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் கட்டுப்பாடு ஏன்?

சமூக ஊடகங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த ஆண்டு பிப்ரவரியில் மின்னணு உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை இந்திய அரசு அறிவித்தது. அதாவது, டிஜிட்டல் செய்தி தளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான மூன்று அடுக்கு குறை தீர்க்கும் கட்டமைப்பையும் நெறிமுறைகளையும் மோதி அரசு அறிவித்தது.இந்த புதிய விதிமுறைகள் சமூக ஊடக பயன்பாட்டாளர்களுக்கு அதிகாரம் கொடுப்பதாக அமையுமென்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். Guidelines for Intermediaries and Digital Media Ethics Code 2021 என்ற வழிகாட்டுதல்களின்படி, முதல் முறையாக மின்னணு ஊடக நிறுவனங்கள், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் எப்படி செயல்பட வேண்டுமென்ற வரைமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது.இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை உள்ளடக்கிய ஒரு மேற்பார்வை முறையும், "இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" பாதித்து, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உள்ளடக்கங்களை தடைசெய்யும் விதிமுறைகளும் அதில் அடக்கம்.

  சமூக ஊடகங்கள் அல்லது மின்னணு தளங்களைப் பயன்படுத்தும் போது கடைபிடிக்க 10 முக்கிய தகவல்கள் இதோ.

  • இந்தியாவை தளமாகக் கொண்ட இணக்க அதிகாரிகளை சமூக ஊடக நிறுவனங்கள் நியமிக்க வேண்டியிருக்கும். ஒரு பயனரின் உள்ளடக்கத்தை அகற்றினால், அதற்கான காரணத்தை அவர்களிடம் தெரிவிப்பதுடன், அவர்களின் விளக்கத்தையும் கேட்க வேண்டும்.
  • தீங்கிழைக்கும் தகவலை "முதலில் வெளியிட்டவரின்" விவரங்களை சமூக ஊடக நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தீங்கிழைக்கும் தகவலை பகிர்வோருக்கும் ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
  • பல்வேறு நிறுவனங்களின் செயலாக்கத்தை கண்காணிக்கும் குழுவில், பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள், உள்துறை, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், சட்டம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். நெறிமுறைகளை மீறியதாக புகார்கள் மீதான விசாரணையை தானே முன்வந்து நடத்தும் அதிகாரம் இந்த குழுவுக்கு உண்டு.
  • இணை செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள ஒரு அதிகாரியை "அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி" என்று அரசாங்கம் நியமிக்கும். அவர் உள்ளடக்கத்தைத் தடைவிதிக்க உத்தரவிட முடியும். அதேபோன்று, ஒரு உள்ளடக்கம் சட்டத்தை மீறுவதாக ஒரு மேல்முறையீட்டு அமைப்பு கருதினால், அந்த உள்ளடக்கத்தை தடைசெய்ய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது.
  • ஓடிடி தளங்கள், அவை திரையிடும் படங்கள் தொடர்பான பார்வையாளர் காணும் நெறிகளை U (யூனிவெர்சல்), U/A 7+, U/A 13+, U/A 16+, and A (பெரியவர் மட்டும்) என சுயமாக அறிவிக்கும் எழுத்துகளை இடம்பெறச்செய்ய வேண்டும். இதன் மூலம், சிறுவர்களுக்காக உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை தவிர்த்து மற்றவற்றை அவர்கள் அணுகுவது தடுக்கப்பட வேண்டும்.
  • மின்னணு செய்தி ஊடகங்கள் இந்திய பிரஸ் கவுன்சிலின் விதிகளைப் பின்பற்றும். புதிய இணையதளங்கள் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  • அவதூறான, ஆபாசமான, இனவெறி மற்றும் சிறார்களுக்கு தீங்கு விளைவிக்கும் சமூக ஊடக உள்ளடக்கங்கள் மற்றும் இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிற நாடுகளுடனான அதன் உறவுகளை அச்சுறுத்தும் உள்ளடக்கங்களை இந்த விதிகள் தடைசெய்கின்றன. தகவல் தெரிவிக்கப்பட்ட அல்லது நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் சமூக ஊடக தளங்கள் அவதூறான அல்லது சட்டவிரோத உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும்.
  • புகார்களைப் பெற, ஒப்புக் கொள்ள மற்றும் தீர்க்க நிறுவனங்கள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரியை ஒரு மாதத்திற்குள் நியமிக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களும் குறை தீர்க்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருக்கும்.
  • ஒரு இடைத்தரகர், புகாரின் 24 மணி நேரத்திற்குள், சட்டவிரோதமான அல்லது புண்படுத்தும் வகையிலான உள்ளடக்கத்திற்கான அணுகலை அகற்ற வேண்டும் அல்லது முடக்க வேண்டும்.
  • மின்னணு ஊடகங்கள், அவற்றுக்கு வரும் புகார்கள் தொடர்பான குறைதீர் நடவடிக்கைக்காக மூன்று கட்ட சுய நடைமுறையை கொண்டிருக்க வேண்டும். முதல் நிலையில் பதிப்பாளர், இரண்டாம் நிலையில் சுய ஒழுங்குமுறை அமைப்பு, மூன்றாம் நிலையில் இந்திய அரசின் மேற்பார்வைக்குழு என அந்த வசதிகள் இருக்க வேண்டும்.